இந்துமத தத்துவம் - 19.08.1928 - குடிஅரசிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

இந்துமத தத்துவம் - 19.08.1928 - குடிஅரசிலிருந்து...

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப்பனர்களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதியதற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகால் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.

இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கை களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம்.

சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை , அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று கேட்கின்றோம்.

செத்த பாம்பை ஆட்டுவது போல் செத்துச் சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கருமாதியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்ப னரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப்படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம்.

இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுய மரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டாவாதி களுக்கு இதிலிருந் தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.


No comments:

Post a Comment