ஒத்திக்கோ! ஒத்திக்கோ!! (சேரன்மாதேவி குருகுலப்போராட்டம்) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

ஒத்திக்கோ! ஒத்திக்கோ!! (சேரன்மாதேவி குருகுலப்போராட்டம்)

கி.தளபதிராஜ்

இந்திய வரலாற்றில் முதல் சமூக நீதிப் போராட்டம் வைக்கம் போராட்டம். தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த போது கேரள மாநில தலைவர்களின் அழைப்பின் பேரில் அங்கு சென்று போராடி வெற்றிக் கனியை ஈட்டியதும், வைக்கம் வீரர் என புகழப்பட்டதும் வரலாறு. அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடை பெற்றதுதான் குருகுலப் போராட்டம்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க வகுப்புரிமைப் போராட்டமே முழுமுதற் காரணம் என்றாலும், குருகுலப் போராட்டம் சமகால காரணிகளுள் ஒன்றாகவே இருந்திருக்கிறது.

திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச அய்யர் வட்டித் தொழிலில் பிரபலமானவர். இந்து மதத்திலிருந்து மாற்று மதத்திற்கு சென்றவர்களையெல்லாம் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர பிரயத்தனம் பண்ணியவர். இவரது மகன் வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய அய்யர் தான் வ.வே.சு அய்யர் என பின்னாளில் அறியப்பட்டவர். வழக்குரைஞர் தொழிலுக்குப் படித்து இரங்கூனில் வெள்ளைக்காரனுக்கு உதவியாளராகப் பணியாற்றி பின் பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டி இலண்டன் வரை சென்று பட்டம் பெறாமல் திரும்பியவர். சனாதன தருமத்தை மதிக்க வில்லை என்று சொல்லி ஆஷ்துரையைக் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக முதன் முதலில் ஒரு பார்ப்பனரல்லாத தலைவர்  என்ற வகையில் தந்தை பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததும் இவரே.

சேரன்மாதேவி குருகுலத் தொடக்கம்

ஆங்கில அரசால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்களில்  பாடத்திட்டங்கள் இந்திய தேசியத்திற்கு எதிராக இருப்பதாகக் கருதிய காங்கிரஸ் கட்சி நாடெங்கும் தேசியக் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. திலகர் நிதி குவிந்து கிடந்த அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்கள் பலரும் அதைப் பயன்படுத்திக் கொண்ட வேளையில் வ.வே.சு அய்யரும் குருகுலம் ஒன்றைத் தொடங்க மாகாண  காங்கிரஸ் கமிட்டியில் நிதி கோரினார். குருகுலத்தை ஏற்படுத்த அய்யர் முதலில் இடம் தேடிய ஊர்கள் மாம்பலம், மன்னார்குடி, தஞ்சாவூர் போன்ற பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் இடங்களே. 1922 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் வாடகை கட்டடத்தில் ஓர் ஆசிரமத்தை தொடங்கியவர் பின் சேரன்மாதேவியில் சொந்த இடத்திற்கு மாற்றினார். சேரன்மாதேவியில் ஆசிரமத்திற்குத் தேவையான 30 ஏக்கர் நிலத்தை வாங்க நிதி அளித்தவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார். பெரியாரின் உற்ற நண்பர். பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய போது பெரியாரோடு இணைந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

தொடக்கமே பித்தலாட்டம்

ஆசிரம நிர்வாகத்திற்காக காங்கிரஸ் கமிட்டி தேசியக் கல்வி நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியது. மேற்படி நிதியைப் பெறுவதற்காக அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக இருந்த தந்தை பெரியார் அவர்களை அணுகினார் அய்யர். தந்தை பெரியார்அவர்களோ குருகுல விதிமுறைகளையும் அந்தப்படி நடத்தப்படுமென்ற ஒப்புதலையும் அளித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறினார். அதற்குச் 'சரி' என தலையாட்டிவிட்டுச் சென்ற  வ.வே.சு அய்யர் பின் பெரியார் அவர்களுக்கே தெரியாமல் அவர் இல்லாத நேரத்தில் மற்றொரு கூட்டுக் காரியதரிசியாக இருந்த கே.எஸ்.சுப்பிரமணிய அய்யரிடம் முன்பணமாக 5000 ரூபாய்க்கான காசோலையை வாங்கிச் சென்று விட்டார். அதோடு, "குருகுலத்திற்கு நன்கொடையாக பணமாகவோ, நிலமாகவோ, ஆண்டுதோறுமோ, மாதா மாதமோ, தங்கள் வருவாயில் பகுதியை செலுத்தலாம். இயலாதவர்கள் ஒரு கைப்பிடி அரிசியேனும் கொடுக்கலாம்" என்று அறிக்கை விடுத்து பொதுமக்களிடத்திலும் நன்கொடை வசூலித்தார் அய்யர். வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் நன்கொடை குவிந்தது. நன்கொடைகளைப் பெற அறக்கட்டளையாக எந்தப் பெயரையுமே குறிப்பிடாமல் தன் பெயரையே பயன்படுத்தினார் அய்யர்! வட்டிக்காரர் பெற்ற பிள்ளையாயிற்றே. வசூல் வேட்டை சூடு பறந்தது. 

குருகுலத்தில் ஜாதி பேதம்

குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (தமிழ்நாட்டின் முதலமைச்சராக பின்னாளில் பதவி வகித்தவர்) மகன் சுந்தரமும் ஒருவன். பள்ளி விடுமுறையில் வீட்டிற்கு வந்தவன் குருகுலத்தில் நடைபெறும் ஜாதிப் பாகுபாடுகளை தன் தந்தையாரிடம் போட்டுடைத்தான். "பார்ப்பன மாணவர்களுக்கு ஓர் இடத்திலும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு வேறு ஓர் இடத்திலும் அமரச் செய்து சாப்பாடு பறிமாறுகிறார்கள். விஷேச நாட்களில் அவர் களுக்கு வடை பாயாசத்தோடு சாப்பாடு. எங்களுக்கு எப்போதும் ஒரே சாப்பாடுதான். தண்ணீர் பானை கூட தனித்தனியாக வைத்திருக்கிறார்கள்!" என அங்கே மாணவர் களுக்கிடையில் காட்டப்பட்ட ஜாதிப் பாகு பாட்டை எடுத்துரைத்தான். காலையில் பழைய சோறு அளிக்கப்பட்டதை விரும்பாத ஒரு சில மாணவர்கள் ஆசிரமத்தை விட்டே வெளி யேறியதையும் சுட்டிக்காட்டினான். இந்தச் செய்தி பெரியாரின் காதுகளுக்குப் போயிற்று.

காங்கிரஸில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்வு

தந்தை பெரியாரின் நண்பர் மாயவரம் எஸ்.ராமநாதன் வீட்டில் பெரியார், திரு.வி.க, என்.தண்டபாணிப்பிள்ளை ஆகியோர் கூடி காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு முன்னிலையில் குருகுலப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என முடிவெடுத்தனர். இந்த சூழலில் முன்னர் தீர்மானிக்கப்பட்ட 10,000 ரூபாயில் 5,000 ரூபாய் வாங்கியதுபோக மீதமுள்ள 5,000 ரூபாயை பெறவேண்டி அதற்கான உத்தரவு போட வேண்டி ஒரு பார்ப்பனரைக் கொண்டு காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் கொண்டுவந்தார் அய்யர்.

தந்தை பெரியார் அவர்களோ, "நிபந்தனை யின்றி முன் பணம் கொடுக்கப்பட்டதே தவறு. இப்போது மறுபடியும் கொடுக்க முடியாது!" என்று கறாராக சொல்லிவிட்டார். 

குருகுலத்திற்கு எதிராக தந்தை பெரியார் அவர்கள் முதலில் கருத்து தெரிவித்த போது "சிறீமான் அய்யர் அவர்கள் அவ்வளவு மோசமாயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை! நீங்கள் சொல்லுகிற மாதிரி  வித்தியாசங்கள் அங்கு நடக்குமேயானால் அதை அய்ந்து நிமிடத்தில் நிறுத்திவிட என்னால் முடியும்" என்ற வரதராஜுலு நாயுடு, தற்போது "அய்யர்வாள் குருகுலத்தில் சாப்பாட்டில் ஜாதி பேதம் பாராட்டப்படுவதாக எனக்குப் பல கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நான் அவற்றை தமிழ்நாடு பத்திரிக்கையில் பிரசுரிக்க வில்லை" என்றார். அதையடுத்து ஒருவர் பின் ஒருவராக பலரும் வ.வே.சு அய்யர் மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினர். 

ஆரம்பப் பள்ளிப் பாடப் புத்தகத்தில், "இவர் அய்யர். மிகவும் நல்லவர்!" என்று படிக்கிறோமல்லவா? அப்படித்தான் நம் சமூகத் தலைவர்களும் அய்யரை கணித்திருந்தனர். அய்யர் மீதான குற்றச்சாட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக குவிந்தததும் கோபத்தில் கொந்தளித்தார் அய்யர். மீசையும், தாடியும் படபடக்க  உணர்ச்சி வயப்பட்டு "இவற்றை யெல்லாம் ஒரு வித்தியாசமெனச் சொல்வது துவேஷங்களைக் கற்பிக்கும். இதனால்தான் இந்தத் தொல்லையால் தான் நான் சாதம் கூடச் சாப்பிடாமல் நிலக் கடலைப் பருப்பும், தேங்காயும், வெல்லமும் சாப்பிட்டு வந்தேன். குருகுலம் வைத்துள்ள இடம் மிகவும் வைதீகமான இடமாதலால் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று" என்று பொறுமினார். அய்யரின் முகத்திரை கிழிந்து உண்மைச் சுயரூபம் வெளிப்பட்டது.  காங்கிரஸில் பார்ப்பனர் பார்ப்பனரல்லதார் உணர்வு தலை காட்டியத் தருணம் அதுதான்.

குருகுலத்திற்கு எதிராக வரதராஜுலு நாயுடு

ஆரம்ப காலத்தில் அய்யரை வானளாவப் புகழ்ந்து குருகுல நிதி திரட்டலுக்கு ஆதரவாக 'தமிழ்நாடு' மற்றும் 'நவசக்தி' பத்திரிக்கைகள் எழுதிவந்த போக்கை எச்சரித்த பெரியார் ஒரு சில இடங்களில் பேசும்போது 'தமிழ்நாடு' பத்திரிக்கையை நடத்தி வந்த வரதராஜுலு நாயுடுவையும் கண்டித்துப் பேசினார். பின் உண்மை நிலை அறிந்து, "குருகுலத்திற்கு பணம் உதவுவது தேசியப் பாவம்" என தமிழ் நாடு பத்திரிக்கையில் எழுதிய வரதராஜுலு நாயுடு தொடர்ந்து குருகுலத்திற்கு எதிராகப் போராடினார். 

வரதராஜுலு நாயுடுவை தனக்குப்பின் தலைவராக்க முழு முயற்சி எடுத்தவர் தந்தை பெரியார். காங்கிரஸ் கமிட்டியில் வரதராஜுலு நாயுடுவை தலைவராக முன்மொழிந்த போது அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் இராஜகோபாலாச்சாரியார். 

பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க வரதராஜுலு நாயுடு வ.வே.சு அய்யரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார். வ.வே.சு அய்யரோ, "ஒரு தனி மனிதனுக்குச் சாதாரணமாக ஜாதியின் அமைப்பை மாற்ற அதிகாரம் கிடையாது. மேற்படி விஷயம் மாமூலுக்கு விரோதமானதால் அநேகர் ஆட்சேபிப்பார்கள். மாமூல் புத்தியினால் கூறப்பட்டாலும் குதர்க்கமின்றி கூறப்படும் ஆட்சேபனைகளுக்கு பொறுமையோடு, அன்போடு, யுக்தியோடும், சனாதன தர்மத் தோடும் பொருந்தும் படி பதில் சொல்வதே மாறுதலுக்காக பாடுபடுபவரின் கடனாகும்." என்றார்.

மாணவர்களை ஒரே இடத்தில் அமரச் செய்து உணவருந்த வேண்டும் என்று சொன்னால்  'சனாதன தர்மத்தோடு பொருந்தும் படி' பேச வேண்டும் என்றார் அய்யர். அதே நேரத்தில் வேங்கடேச அய்யர் வட்டிக்கடை நடத்தவும், அவரது மகன் வ.வே.சு அய்யர் பாரிஸ்டர் பட்டம் பெற கடல் தாண்டி இலண்டன் செல்லவும் அவர்கள் தருமத்தில் இடம் இருக்கிறதா என்பதை அவர்களிடத்திலேதான் கேட்க வேண்டும். இது தான் 'அவாளின்' தர்மம்! சனாதன தர்மம்! 

1925 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் குருகுலத்தில் ஜாதிப் பாகுபாடு காட்டப்பட்ட விவகாரம் விவாதத்திற்கு வந்தது. ஜாதிப் பிரிவினை பற்றி ஆராய கணபதி சாஸ்திரி, வி.தியாகராஜ செட்டியார், கே.எம்.தங்கபெருமாள் பிள்ளை ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குருகுலத்திற்கு அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி அங்கே ஜாதிப்பாகுபாடு நிலவுவதைக் கண்டறிந்து அறிக்கை அளித்தனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு தேசிய நிறுவனமான குருகுலத்தில் சமபந்தி உணவுதான் வழங்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

வ.வே.சு அய்யரோ குருகுலம் காங்கிரஸ் கட்சியின் நிறுவனம் அல்ல என்றும், அதற்கு தான் கட்டுப்படத் தேவையில்லை என்றும் கூறினார். 

1924 ஏப்ரல் மாதம் வைக்கம்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைக்கம் சென்றார் பெரியார். 1925 மார்ச் வரை ஓராண்டு காலத்தில் தொடர்ந்து ஆறுமுறை வைக்கத்திற்கு பயணமானார். 67 நாட்கள் சிறையிலும் 74 நாட்கள் போராட்டக் களத்திலுமாக களப் பணியாற்றி தமிழ்நாடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியாரும் வரதராஜுலு நாயுடுவும் குருகுலத்திற்கு எதிராக பல்வேறு ஊர்களிலும் பொதுக் கூட்டங்களில் பேசினர். மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வரதராஜுலு நாயுடு தம்முடைய தேகத்தில் ஒரு துளி இரத்தம் இருக்கும் வரை குருகுலப் போராட்டத்தைத் தான் நடத்தப் போவதாக கூறினார். சேலம் கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார், "பிரிட்டீஷ் அரசு இருக்கும் போதே பிராமணர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இல்லையெனில் பிராமணநாயகத்தின் (Brahminocracy) பெரும் துன்பத்தால் அல்லல் படுவோம்" என்று எச்சரித்தார்.  பத்திரிக்கைகள் குருகுலத்திற்கு எதிராக எழுதத் தொடங்கின. 

"காங்கிரசுக்கு வருணாசிரம தருமத்தில் நம்பிக்கை இல்லாது போனாலும், அது தொடர் பாக ஒரு நிறுவனத்தின் உள் செயல்பாட்டில் தலையிடக் காங்கிரசுக்கு உரிமை உண்டா?" எனக் கேட்டு வ.வே.சு அய்யருக்கு ஆதரவுக் கரம் நீட்டினார் இராஜகோபாலாச்சாரியார்.

சேரன்மாதேவி குருகுலத்திற்கு எதிரான போராட்டம் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த போதிலும் 1925 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்றதே அதன் உச்ச கட்டப் பகுதி என 'சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்' என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் பழ.அதியமான். வைக்கம் போராட்ட வெற்றிக்குப் பின் குருகுலத்திற்கு எதிராக நேரடியாக பெரியார் களம் இறங்கிய காலகட்டம் இது தான்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்தக் கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெறுவதாக இருந்தது. பின் அது மாற்றப்பட்டு திருச்சியில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான வரதராஜுலு நாயுடு தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ,"இந்த விஷயத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் பிரச்சினையை கிளப்புவானேன்? என்று சிலர் கேட்கலாம். இந்த விவாதத்தால் தேசிய வேலை பாதிக்கப்படாதா? என்றும் கேட்கப்படலாம். ஒருவருடைய சுயமரியாதையை விட தேசிய வேலை அவ்வளவு உயர்ந்தது அல்ல!" என்று பதில் கூறுவேன் என்றார். கூட்டத்தை சேரன்மாதேவி குருகுல விவகாரமே முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அழைப்பு விடுத்தும் வ.வே.சு அய்யர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அய்யரின் நண்பரான எம்.கே.ஆச்சார்யா, "இரண்டு பிராமணப் பிள்ளைகளுக்குத் தனியாகச் சாப்பாடு போடுவதால் பிரளயம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. இந்தப் போராட்டத்தைக் கைவிட்டு இனியேனும் காங்கிரஸ் வேலையை ஆரம்பிக்க வேண்டும். சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்டாயப்படுத்தலாம் என்று சொல்வதாயின் எனக்கு இங்கு வேலையில்லை. ராஜினாமா கொடுத்துவிட்டு வெளியே போய்விடுகிறேன். சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என்ற பேச்சு என் காதில் விழக் கூட நான் சம்மதிக்க முடியாது!"  என கூச்சலிட்டார். அரசமைப்புச் சட்டத்தில் சனாதனிகளுகென்று தனிப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்திய சனாதனிதான் இந்த ஆச்சாரியா! பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பதை தடை செய்யும் சாரதா சட்டத்தை எதிர்த்தவர். 

சேரன்மாதேவியில் குருகுலம் அமைக்க 30 ஏக்கர் நிலம் வாங்க முழுத்தொகையும் அளித்த வை.சு.சண்முகம் செட்டியார், "வ.வே.சு அய்யர் நிலையான மனம் இல்லாததால் சொன்ன சொல் தவறிவிட்டார்" என்றார்.

குருகுலத்திற்கு எதிராக மாயவரம் எஸ்.இராமநாதன் "இந்திய சமூக வாழ்க் கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும், இக் கொள்கையைத் தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட ஸ்தாபனங்கள் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது. இக் கொள்கையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர எஸ்.சீனிவாச அய்யங்கார், சி.இராஜகோபாலாச்சாரியார், ஷண்முகம் செட்டியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகியோர் கொண்ட கமிட்டியை நியமிக்கிறது"  என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தை தந்தை பெரியார் அவர்களும் இராமநாதனும் சேர்ந்து எழுதியதாக குடிஅரசில் குறிப்பிட்டுள்ளார் பெரியார்.

இராஜாஜி பதவி விலகல்

மேற்படி தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பெரியார், இப் பிரச்சினைக்கு நம்முள் நான் உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதே காரணம் என்றார். பெரியார் ஆதரித்த இந்த தீர்மானம் இறுதியாக நிறைவேறியது. இதை எதிர்த்து இராஜாஜி, எம்.கே. ஆச்சார்யா, டி.எஸ்.எஸ் ராஜன், க.சந்தானம், ஆகிய பார்ப்பனர்களும் முத்து ரங்க முதலியாரும் தங்கள் கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

"காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிறீமான் வரதராஜுலு அனுசரிக்கும் கொள்கை, அவர் நடந்து கொள்ளும் வழி வகுப்பு துவேஷத்தையும், பலாத்காரத்தையும் அதிகரிக்கச் செய்வனவாக  உள்ளன. அவை மனதைப் புண்படுத்துவதுடன் கோபத்தையும் மூட்டுகின்றன. அல்ப விஷயங்களுக்காக சண்டை போடும்படி நாம் அவ்வளவு அடிமை களாகிவிட்டது மிகவும் வருந்தத் தக்கது!" என்றார் இராஜாஜி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தீர்மானத்தை ஏற்றுகொள்ள வேண்டாம் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காந்திக்கு கடிதம் எழுதினார் எம்.கே.ஆச்சாரியா. 

"மேற்படி தீர்மானத்தை ஆதரித்து விட்டால் அனுபவத்தில் மிகவும் அபாயமான பயன் ஏற்படும். இன்று சமபந்தி போஜனம். நாளை அது கலப்பு விவாகமாகலாம். அல்லது இன்னும் மோசமாக நிலச்சுவான்தார், குடி, முதலாளி, தொழிலாளி முதலிய எல்லா நிலையையும் அது பாதிக்கலாம். ஏனெனில் இவையெல்லாம் சமூக வாழ்க்கையில் சேர்ந்தவையே. தேசிய மயமாக்குவது என்ற வேஷத்தைக் கொண்டு இந்த வழியிலெல்லாம் பிறப்பின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்கக் காங்கிரஸ் முன்வர முடியுமா? இந்த விஷயங்களையெல்லாம் காங்கிரஸ் சம்பந்தமற்ற ஸ்தாபனங்களால் முடிவு செய்யப்படும்படி விட்டுவிட வேண்டாமா? மேற்படி தீர்மானத்தை சட்ட விரோதமானது என்று நீக்கி விடவேண்டும். தலைவர் சிறீமான் வரதராஜுலுவும், செயலாளர் சிறீமான் இ.வி.ராமசாமியும் குருகுல விவாதமென்ற பெயரால் வகுப்புத் துவேஷ பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவேண்டும். இல்லாவிடில் அவர்களை ராஜினாமா செய்யும்படி கேட்க வேண்டும்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சனாதனத்தில் ஊறித் திளைத்திருந்த அந்த பார்ப்பனத் தலை வர்களின் கோர முகத்தை புரிந்து கொள்ள இந்தக் கடிதம் ஒன்றே போதுமானது. 

வ.வே.சு அய்யர் விலகல்

நெருக்கடிகள் தொடரவே குருகுலத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார் அய்யர். வவேசு அய்யர் பதவி விலகியதைத் தொடர்ந்து வை.சு சண்முகம் செட்டியார் எழுதிய கடிதத்தில், "சிறீமான் அய்யர் அவர்களின் தியாகங்களையும் முன்னர் அவர்கள் நடந்து கொண்ட ஒழுக்கமுள்ள நடையையும் பார்த்து, அவரிடம் நம்பிக்கை கொண்டே தேசிய சபையிலும் நானும் எனது சமூகத்தாரும் மற்ற அன்பர்களும் அவரது பொறுப்பில் பொருள் கொடுத்து உதவினோமே அன்றி வேறில்லை. சிறீமான் அய்யர் அவர்கள் குருகுலத்தை திறம்பட தான் நடத்த முடியாதென இப்பொழுதுக் கருதினால் பொருள் கொடுத்தோரை அழைத்து அவர்கள் இணங்கினால் ஒரு பஞ்சாயத்து சபையை ஏற்படுத்தி குருகுலத்தை நடத்தி வரும்படி அவர்களிடம் ஒப்புவித்து விட முயல வேண்டும். அல்லது இதுவரை நடந்த செலவு கணக்கையும் மீத இருப்பையும் தெரிவித்து விகிதப்படி பணங்களை திரும்பக் கொடுத்துவிட வேண்டும். இவ்வாறு எதுவும் செய்யாமல் தாம் விலகிக் கொண்டதாக சிறீமான் அய்யர் எழுதி விடுவதும், காரியஸ்தர் என்போர் நாங்கள் 'அப்படி நடத்த முடியாது' 'இப்படி நடத்த முடியாது' என்று அறிக்கைகள் வெளியிடுவதும் நகைப்பிற்கு இடமாகும். நம்பிக் கொடுத்தோர் பொருளை நேரான வழியில் ஒழுங்கு செய்து விடாமல் சிறீமான் அய்யர் குருகுல நிர்வாகத்தை காரியஸ்தரிடம் ஒப்புவித்தல் முறை அன்று. காரியஸ்தரை நம்பியா பலரும் குருகுலத்திற்கு பொருள் உதவி செய்தனர்? சிறீமான் அய்யர் அவர்கள் தற்கால சபலத்தை விடுத்து நேரிய வழியில் நடந்து கொள்வார்கள் என்று இன்னமும் எதிர் பார்க்கிறோம்." என்று எழுதியிருந்தார்.

வ.வே.சு அய்யர் மரணம்

1925ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தேதி குருகுல  கோடை விடுமுறையில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் சிலரும்  சேர்ந்து பாபநாசம் அருவிக்குச் சுற்றுலா சென்றனர். அதனைத் தொடர்ந்து தனது மகளின் விருப்பத்திற்கிணங்க ஜுன் மூன்றாம் தேதி மகளை அழைத்துக் கொண்டு அய்யரும் பாபநாசம் புறப்பட்டார். பாபநாசம் அருவிக்கு மேல் பகுதியில் உள்ள கல்யாண தீர்த்தம் நதியை கடக்க முயற்சிக்கையில் அய்யரின் மகள் கால் தவறி விழ அவளைக் காப்பாற்ற முயன்ற அய்யரும் நீரில் மூழ்கினார். சில தினங்களுக்குப் பின்னர் 8 ஆம் தேதிஅய்யரின் உடல் அருவிக்கு அருகே  கண்டெடுக்கப்பட்டது. அய்யரின் அகால மரணத்திற்குப் பின் குருகுல நிர்வாகத்தில் தற்காலிகமாக  சில மாற்றங்கள் நிகழ்ந்தன.

குருகுலப் போராட்டம் பற்றி குடிஅரசில் பெரியார்

குருகுலப் போராட்டம் உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் 1925ஆம் ஆண்டு மே மாதம் தந்தை பெரியார் அவர்களால் 'குடிஅரசு' இதழ் தொடங்கப்பட்டது.ஜுலை 12 ஆம் தேதி வெளியான குடிஅரசு பத்திரிக்கையில் பெரியார் எழுதிய குருகுலப் போராட்டம் பற்றிய ஒரு கட்டுரை சனாதனிகளை கடுமையாகச் சாடியது.

"வைக்கம் போராட்டமும், குருகுலப் போராட்டமும் தமிழ் மக்களுக்குத் தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா? என்பதைப் பற்றியும் இந்து மதத்தில் தங்களுக்கு எதாவது இடமுண்டா? என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகிறது.

வைக்கம் சத்தியாகிரகமோ நான்கு வீதிகளில் மூன்று வீதிகள் உங்களுக்குத் திறந்து விட்டாகிவிட்டதே. ஒரு வீதியில் தானா உங்களுக்குப் பெருத்த கஷ்டம் ஏற்பட்டுவிட்டது? இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே! இது என்ன பைத்தியமா என்று கேட்கிறது. குருகுல போராட்டமோ 18 பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் 17 பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு ஒரு பிள்ளை மாத்திரம் தான் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? இதற்காகவா இவ்வளவு பெரிய கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும்? என்று சொல்லிக் கொள்வ தல்லாமல் உட் சண்டைகளையும் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.

வைக்கம் சத்தியாகிரகமும், குருகுல போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதை பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை கொண்டது அல்ல. வீதிகளில் நடக்கக்கூடாது என்று சொல்லும் பொழுதும் கண்ணால் பார்க்கக்கூடாது என்று சொல்லுகிற போதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான வருஷங்களாக தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்து தமிழ்நாட்டை தன்னுடைய தாக்கிக் கொண்டிருக்கும் இந்துவாகிய தமிழனை அவனுடைய நாட்டில் மற்றொருவர் நீ வீதியில் நடக்காதே! என் முன் வராதே! என்று சொன்னால் மனித உடல் தரித்திருக்கும் ஒரு ஜீவன் அதை எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வைக்கம் சத்தியாகிரகத்தினுடைய, குருகுல போராட்டத்தினுடைய தத்துவமாகும்!" என்று எழுதினார்.

('குடிஅரசு' -  5.7.1925)

வ.வே.சு அய்யர் மகன் எழுதிய டைரிக் குறிப்பு

"நூறாண்டுகளைக் கடந்த கதையை நினைவு படுத்துவதேன்? பார்ப்பனர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள்!" என்று மனம்போன போக்கில் உளறிக் கொட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக ஒரு செய்தி. சேரன்மாதேவி குருகுலப் போராட்ட வரலாற்றைத் தொகுக்கும் வேளையில் ஈடு பட்ட பழ.அதியமான் அவர்கள் அய்யரின் பேரன் சுப்பிரமணியனை திருச்சியில் சந்தித்திருக்கிறார். குருகுல போராட்ட நிகழ்வின்போது அங்கு தங்கி படித்த அய்யரின் மகன் வி.சு.கிருஷ்ணமூர்த்தி 1990களில் மறைந்து விட்ட நிலையில் அவரது 1970களின் நாட்குறிப்புகள் சில காணக் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் சேரன் மாதேவி குருகுலப் போராட்டக்காரர்கள் மீது வெளிப்பட்ட கோபம் கொண்ட குறிப்பும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட தலைவர் மறைந்த நாளன்று எழுதி வைத்த நாட்குறிப்பு பதிவு அது. "அப்பதிவின் வாக்கியங்கள் பெரும் அதிர்ச்சியைத் தந்தன!" என்று பழ.அதியமான் குறிப்பிட்டுள்ளார். தோழர் அதியமான் பெயர் குறிப்பிடாவிட்டாலும், 1973 இல் மறைவுற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியதே அந்தப் பதிவு என்பது படிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. இன்னும் எத்தனை தலைமுறைகள் மாறினாலும் பார்ப்பனக் கொடுக்குகளின் விஷம் மட்டும் மாறப் போவதில்லை என்பதை அந்த டைரிக்  குறிப்புகள் நமக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது!


No comments:

Post a Comment