"இதற்கும் நேரம் ஒதுக்கப் பழகுவோம்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

"இதற்கும் நேரம் ஒதுக்கப் பழகுவோம்"

  "இதற்கும் நேரம் ஒதுக்கப் பழகுவோம்"

"காலம் போன்ற கடமை வீரனை" எங்கு தேடினும் கண்டுபிடிக்கவே முடியாது. யாருக்காகவும் அது காத்திருக்காமல் - என்னதான் பயங்கரமான சூறாவளி, சுழற்காற்று, 'சுனாமி' என்ற நிலை ஏற்படினும், அடாது மழை, அதீதமான வெள்ளப் பெருக்கு, பூமியைப் பிளக்கும் பூகம்பம் - இத்தியாதி, இத்தியாதி இருந்தாலும், காலம் என்ற ஜீவநதி ஒரு நொடி கூடத் தவறாமல் ஓடிக் கொண்டே இருப்பது குறித்து சற்று நின்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

இதற்கு இணையான - கடமையாற்றலுக்கு ஒப்பிடக் கூடிய ஒன்றைத் தேடித் தேடி ஓடினாலும் கண்டுபிடிக்க முடியுமா?

காலம் ஓடுகிறது; கடிகாரம் பதிவு செய்கிறது!

அதனால்தான் நொடி - அறிவியல் ஆராய்ச்சியின்படி நொடி என்ற வினாடியையும் Nano Seconds   என்று பெயர் சூட்டி ஆய்வு செய்து தொழில் நுட்பத்தின் புதுமையைக்கூட 'Nano technology' என்றே அழைக்கின்றனர்!

அடிக்கடி நாம் கூறுவதையே மீண்டும் இப்போதும் கூறுவோம்.

"எதை இழந்தாலும் மீண்டும் அதை முழுமையாகவோ, அரைகுறையாகவோ பெற முடியும். ஆனாலும் இழந்த நேரம், நம்மை விட்டுப் பிரிந்து ஓடிய காலம் மீளாது."

நொடிகள் தொடங்கி, ஆண்டுகளாக, ஆயிரம் ஆண்டு மிலேனியங்களாக அல்லவா அமர்த்தலாக வரலாற்றின் வசீகரப் பக்கங்களாகி என்றும் வாழ்ந்து கொண்டு, வகுப்பறைகளிலும் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனவே! - இல்லையா?

ஆகவேதான் காலத்தை முக்கியமாகக் கருதி மதிப்பளியுங்கள்.

பணத்தைவிட பன்மடங்கு அதிகம் மதித்துப் பின்பற்றக் கற்றுக் கொண்டு வாழுங்கள்!

எனவேதான் "இழக்கக் கூடாத பொருள் இது போன்று வேறு உண்டோ" என்று வியத்தற்கரியதாக அது வீர உலா வந்து கொண்டுள்ளது!

பலருக்கும் இன்னும் இதன் முக்கியத்துவம் புரியவில்லையே என்பது தான் நம் வேதனை!

மறைந்தவர்களைக் குறிப்பிடும்போது நாம் "காலமாகி விட்டார்" என்று கூறுகிறோமே அதன் தத்துவப் பொருளை நம்மில் எத்தனை பேர் புரிந்து கொண்டோம்? பயனடைந்தோம்? என்பது நல்ல கேள்வி அல்லவா?

எனவே, காலத்தின் முக்கியத்துவத்தை, தனிப் பெருமையான அதன் தனித்துவத்தை தக்க முறையில் உணர்ந்து நடந்து கொண்டால், வாழ்வில் உயர்வு தானே வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்! உங்களை தன் தோள்மீது ஏற்றி வைத்துக் கொண்டாடும் காலத்திற்கு இணை காலமே!

எனவே வாழ்க்கையில் வரவு - செலவுத் திட்டத்தைப் போட்டு, சேமிப்பா? கடனா? என்று யோசிப்பதைப்போல - கணக்குப் பார்ப்பதைபோல நம்மில் எத்தனை பேர் - காலக் கணக்கீட்டு 'பட்ஜெட்டை' தயாரித்து செலவழிக்கச் சிந்திக்கிறோம் - விடை பெரும்பாலோரிடமிருந்து இல்லை - 'No' என்பதுதானே!

குறிப்பிட்ட பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து கடமையாற்றினால் நம் வாழ்வில் நல்ல பயன்களை தானே வரவழைத்துத் தந்து பரிசளிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

நாளின் 'நேர பட்ஜெட்' 'முக்கியம்'

பலர் அதைச் செய்வதில்லை 

செய்தவர்களில் சிலர் அதைப் பொருட்படுத்து வதில்லை

இன்னின்ன பணிகள் இத்தனை மணிக்கு என்று மேலாண்மையாளர்கள் தங்களது வாழ்க்கையை - அன்றாடப் பணிகளை அமைத்துக் கொள்கிறார்கள்.

அன்றாட 'நேர நிலைப் பட்ஜெட்டில்'கூட 'எதிர் பாராதச் செலவு' என்ற ஒரு ஒதுக்கீட்டுப் பகுதி ஒன்றையும் இணைக்க வேண்டும்! எதிர்பாராத துக்கச் செய்தி - துயர வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறும் கடமைக்கான நேரம், மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்த்து ஆறுதல், எதிர்பாராது வந்து விடும் தவிர்க்க முடியாத பணிகளுக்கும் - சந்திப்புகளுக்கும்கூட இதர ஒதுக்கீடு - அமைத்துச் செலவுகள் போக ஒரு 24 மணி நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியே ஆக வேண்டுவது இன்றியமையாதது ஆகும்!

உங்கள் நேர ஒதுக்கீட்டில் இதையும் மறவாது சேருங்கள்.

அது செலவாகாமல் மிச்சப்பட்டால், அதனை புதிய நூல்களைப் படிக்கவோ, பழைய பாக்கி வேலைகளை முடிக்கவோ பயன்படுத்தி காலத்தை அருமையாக பயன்படுத்தி பயனுறு வாழ்வு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment