'வாழ்க வசவாளர்கள்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

'வாழ்க வசவாளர்கள்!'

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி மாலை 4 மணி அளவில்  மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருக்கும் ஆளுநர் அலுவலகத்தின் மீது, அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு கையெறி குண்டுகள் வீசப்படுகின்றன. அப்போது மணிப்பூரின் ஆளுநராக இருந்தவர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா, பிஜேபி அரசின் முதலமைச்சராக பிரைன் சிங். 

19-01-2021 மாலை 4 மணியளவில் மணிப்பூரின் ஆளுநர் மாளிகைமீது அடையாளம் தெரியாத நபர்கள் கையெறி குண்டை வீசியதாக காவல்துறை வட்டாரம் முதலில் தெரி வித்தது. இருப்பினும், அந்த வெடிகுண்டுகள் வெடிக்க வில்லை, ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் குண்டை செயல் இழக்கச் செய்து, சட்டப்பூர்வ  நடைமுறைகளுக்காக நகர காவல்துறையிடம் அதனை ஒப்படைத்ததாக கூறப்பட்டது 

அதன் பிறகு  கண்காணிப்புக் கருவியின் காட்சிகளை ஆய்வு செய்து - இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கையெறி குண்டை வீசியது  பதிவாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  

ஆனால்,  இந்தச் சம்பவம் நடந்த 7 நாள்களுக்குப் பிறகு 25-01-2021ஆம் தேதி மணிப்பூர் ஆளுநர் மாளிகை மீது கையெறி குண்டு வீசியது   தொடர்பாக இரண்டு நபர்களைக் காவல்துறை கைது செய்தது, அவர்கள் யார், எதற்காக குண்டுகளை வீசினார்கள், பயங்கரவாத குழுவைச் சேர்ந்த வர்களா? அல்லது சமூக அமைதியைக் குலைக்க இவ்வாறு செயல்பட்டார்களா? என்ற எந்தத் தகவலும் அதன் பிறகு இல்லாமல் போய்விட்டது 

இதற்காக மாநில அரசை மணிப்பூரின் ஆளுநரோ,  வேறு எவருமோ கண்டிக்கவில்லை. ஆளுநர் மாளிகையில் ஆபத்தில் பணியாற்றுவதாகக் கூறவில்லை. மணிப்பூரின் பிஜேபி தலைவர்களோ ஒன்றிய அமைச்சர்களோ எவரும் கண்டிக்கவில்லை.. ஒரே ஒரு நபர்கூட எதுவும் பேசவில்லை... காரணம் பிஜேபி ஆட்சி. முதலமைச்சர் பிஜேபியைச் சேர்ந்தவர். 

தமிழ்நாட்டில்.. 25-10-2023ஆம் தேதி மதியம் 3 மணிய ளவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் இருக்கும் ஆளுநர் மாளிகை அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே  ஒருவன் பெட்ரோல் குண்டு வீச முயற்சிக்கிறான். அவன் குடி போதையில் இருந்த காரணத்தால் அது, அந்தக் கேட்டின்மீது விழாமல் சாலையோரத்தில் விழுகிறது.  உடனடியாகப் பாதுகாப்பில் இருந்த  காவலர்கள் அப்போதே அவனைக்  கைது செய்கின்றனர். அவனிடம் இருந்து இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் பறிமுதல் செய்கின் றனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக சென்னை   தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் கொடுக்கிறார்.

ஆனால்,,தமிழ்நாட்டின் ஆளுநர் அலுவலகம் 

25-10-2023 இரவு 9.27 மணிக்கு கீழ்கண்ட செய்தியை வெளி யிடுகிறது. 

"ஆளுநர் மாளிகைமீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் எச்சரிக்கையாக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல்  நடத்தியவர்கள் தப்பினர்."

இப்படி ஒரு செய்தியை ஆளுநர் அலுவலகம் வெளி யிட்டதற்கு என்ன காரணம்? பிஜேபி ஆட்சியில் தமிழ் நாட்டில் பிஜேபியை சேர்ந்தவர் முதலமைச்சராக இல்லை என்பதுதானே!

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது என்று பதிவிடுகிறார். பா.ஜ.க.வின் தமிழ்நாடு முக்கிய தலைவர்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் அதாவது தனது கட்சியின் பெயரில் உள்ள திராவிட என்ற சொல்லுக்கே என்ன பொருள் என்று தெரியாதவர் அறிக்கை விடுகிறார்.

 தான் எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்றே தெரியாமல் இன்றும் பழைய கட்சியின் கொடியை பயன்படுத்தி சுற்றிக் கொண்டு இருக்கும் தலைவரும் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது என்று போட்டி போட்டு லெட்டர் பேடில் அறிக்கை விடுகிறார்.

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன? ஆளும் தி.மு.க.மீது அவதூறு பரப்ப  வேண்டும், சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று அவதூறு கூற வேண்டும்; மக்களும் அதை நம்ப வேண்டும்  - அப்படித்தானே!

மணிப்பூருக்கு ஒரு நீதி - தமிழ் நாட்டுக்கு வேறொரு நீதி என்ற மனுதர்ம மனப்பான்மை தானே இதில் ஒளிந்து கொண்டுள்ளது.

நமது  முதலமைச்சர் சொன்னதுபோல இது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும். 

'வாழ்க வசவாளர்கள்!'

 

No comments:

Post a Comment