எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவரின் வரலாற்றுப் பேருரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 30, 2023

எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவரின் வரலாற்றுப் பேருரை

 வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத மாபெரும் புரட்சி! 

தெருவில் நடக்கக்கூடிய உரிமையையும் தாண்டி, கோவிலின் கருவறைக்குள் அர்ச்சகராகவும் போகக்கூடிய அளவிற்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக்கின்றது என்றால், வைக்கம் போராட்டம் அதற்கு அடித்தளம்!

அண்ணல் அம்பேத்கரின் ‘மகத்' போராட்டத்திற்கு முன்னோடிப் போராட்டம்!

சென்னை, அக்.30 வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத மாபெரும் புரட்சி! தெருவில் நடக்கக்கூடிய உரிமையையும் தாண்டி, கோவிலின் கருவறைக்குள் அர்ச்சகராகவும் போகக் கூடிய அளவிற்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக்கின்றது என்றால், வைக்கம் போராட்டம் அதற்கு அடித்தளம்! அண்ணல் அம்பேத்கரின் ‘மகத்’ போராட்டத்திற்கு முன்னோடிப் போராட்டம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில்

சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

நேற்று (29.10.2023) மாலை சென்னை - சேத்துப்பட்டில் மலையாளி சங்க அரங்கில் எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேருரையாற்றினார்.

அவரது பேருரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், நெகிழ்ச்சி யோடும் நடைபெறக்கூடிய வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழாவினை - நாடு முழுவதும், உலகம் முழுவதும் இன்றைக்குக் கொண்டாடிக் கொண்டிருக் கின்ற சூழ்நிலையில், மற்ற எல்லா இடங்களிலும்  தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதைவிட, தமிழ்நாடு தலைநகரான சென்னையில், குருதேவர் அவர்களின் அமைப்பாக இருக்கக்கூடிய எஸ்.என்.பி.டி. யோகம் சார்பில் நடைபெறுவது என்பது இருக்கிறதே, இதைவிட பெருமை நடத்தியவர்களுக்கு வேறு இல்லை.

இவ்விழாவில் கலந்துகொள்வதில் 

எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்

எத்தனை நிகழ்ச்சிகளில் எங்களைப் போன்றவர்கள் கலந்துகொண்டாலும், இவ்விழாவில் கலந்துகொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகிறோம்.

பெரும்பாலும் இங்கே இருக்கிறவர்களுக்காக நான் மலையாளத்தில் பேச முடியவில்லையானாலும், தமிழ் மொழியை அவர்கள் புரிந்தவர்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், மிக அருமையாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ள எஸ்.என்.பி.டி. யோகம் பொறுப்பாளர்களுக்கு முதற்கண் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாக மட்டுமல்ல, மனித உரிமைகளுக்கு யார் யாரெல்லாம் போராடுகிறார்களோ, அத்தகைய மனித உரிமை அமைப்புகளின் சார்பாக, இந்த எஸ்.என்.டி.பி. அமைப் பிற்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

குறிப்பாக இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக் கூடிய பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களே,

சிறப்பாக வரவேற்புரையாற்றியுள்ள அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.உண்ணிகிருஷ்ணன் அவர்களே,

சென்னை தலைநகருக்கு இந்தியாவையே அழைத்து வந்த நம்முடைய பகுத்தறிவு கவிஞர் கனிமொழி!

இந்த நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டுள்ள இப்பொழுது இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு, ‘‘மகளிர் மாநாடு'' என்ற ஒன்றை சிறப்பாக மகளிர் உரிமைக்கான மாநாடு ஒன்றினை சென்னை தலைநகரில் நடத்தியதோடு, ‘இந்தியா'வையே அழைத்து வந்த நம்முடைய பகுத்தறிவு கவிஞர் கனிமொழி அவர்களே, 

நம் குடும்ப உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே,

உரிமைப் போர் நம்மை இணைத்திருக்கிறது!

நாம் எல்லோருமே ஒரு குடும்பம்தான். மண்ணோ, மொழியோ நம்மைப் பிரிப்பதில்லை. உரிமை நம்மை இணைத்திருக்கிறது. உரிமைப் போர் நம்மை இணைத் திருக்கிறது.

அதிலும் குறிப்பாக என்னைப் போன்றவர்கள் - பெரியார் தொண்டர்கள் இங்கே வந்து உரையாற்று வதைவிட, நன்றி சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கின்றேன்.

ஏனென்றால், கேரளத்து சகோதரர்கள், அந்த மண்ணிற்குத் தந்தை பெரியார் சென்றபொழுது, எப்படி நடந்துகொண்டார்கள் என்று நான் பிறகு சொல்கிறேன்.

இங்கே இருக்கின்றவர்கள் வருவதைவிட, பாலக்காட் டினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அருமைச்சகோதரர் சிறீகண்டன் எம்.பி., அவர்கள் இங்கே வந்திருக்கிறார், தமிழ்நாட்டின் சார்பாக அவரை நாம் வரவேற்கிறோம்.

ஏனென்றால், பாலக்காடு பல வகையில் போராட்டக் களமாக இருந்த நேரத்தில், பெரியார் அங்கும் போராடியிருக்கிறார். வைக்கத்தில் மட்டும் அவர் போராட வில்லை; பாலக்காட்டிலும் போராடியிருக்கிறார், இது பழைய வரலாறு.

அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் சிறீகண்டன் அவர்களே,

 40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களோடு தொடர்பில் இருக்கக்கூடியவர்!

அதேபோல, இந்த  அமைப்பில் தொடர்ந்து ஒடுக்கப் பட்ட சமுதாய மக்களுக்காகவும், எஸ்.என்.டி.பி. யோகம் மட்டுமல்ல, எல்லோருக்கும் கைகொடுக்கக் கூடிய அளவில், தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு பெரிய தொழில திபராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்தாலும் சமூக சிந்தனையில் கொஞ்சம்கூட மாறாமல், 40 ஆண்டு களுக்கும் மேலாக எங்களோடு தொடர்பில் இருக்கக் கூடியவரான எம்.பி.புருஷோத்தமன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய சான்றோர் பெருமக்களே, பெரியோர்களே, நண்பர்களே, ஊடக வியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே மரப் பெஞ்சு போட்டு என்னை உயர்த்தி இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்; இந்தக் கொள்கையே உயர்ந்திருக்கின்றது என்று அர்த்தம்.

வைக்கம் போராட்ட வெற்றிகளால் 

நாம் உயர்ந்திருக்கின்றோம்!

வைக்கம் போராட்ட வெற்றிகளால்தான் நாம் இன்று உயர்ந்திருக்கின்றோம். இதுவரையில் நாம் தாழ்த்தப்பட்டு இருந்தோம். இப்போதுதான் உயர்த்தப்பட்டு வருகிறோம் என்று சொல்வதற்கு அடையாளமாகத்தான் இவ்வளவு சகோதரிகள் இங்கே வந்திருக்கிறீர்கள்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், உங்களு டைய ஏற்பாடு எங்களை வியக்க வைத்தது. முதலில் அந்த அறிமுகம் மிகவும் சிறப்பானது.

ஒரே ஒரு சிறிய திருத்தம்!

ஒரே ஒரு சிறிய திருத்தம் - உரிமையோடு சொல்ல லாம் - நாம் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதி னால், சுட்டிக்காட்டவேண்டியது என்னுடைய கடமை.

வைக்கம் போராட்டம் என்பது  ஒரு தனிச் சிறப்பு - இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியது. அதனால்தான், எங்கள் கனிமொழி போன்றவர்கள் இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதனுடைய அடிப்படை என்னவென்றால், வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு தந்தை பெரியார் அவர்கள் கைதானவுடன்,  தந்தை பெரியாரின் வாழ்க்கைத் துணைவியாரான அன்னை நாகம்மையார் அவர்கள் போராட்டக் களத்தில் குதித்தார்கள்; மகளிரை அழைத்துக்கொண்டு போய் - அதைக் காட்டினீர்கள். அதில் ஒரே ஒரு சிறிய திருத்தம் - அன்னை மணியம்மையார் அவர்களுடைய படம் இடம்பெற்றி ருந்தது. அதை அடுத்த முறை சரி செய்துகொள்ள வேண்டும். இது இந்த ஊரில் மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல - பல நிகழ்ச்சிகளை நீங்கள் ஏற்பாடு செய்யும்பொழுது, இந்த வரலாறு, இன்றைய இளைய தலைமுறையினருக்குத்  தெரியவேண்டிய வரலாறாக இருக்கும். அந்தத் திருத்தத்தை செய்து கொள்ளவேண்டும்.

வைக்கம் போராட்டத்தின் 

50 ஆம் ஆண்டு விழா கேரளாவில் ஒரு வாரம் நடைபெற்றது!

அன்னை மணியம்மையாருக்கும் அங்கே சிறப்பு செய்தார்கள். வைக்கம் போராட்ட 50 ஆம் ஆண்டு விழா கொண்டாடக் கூடிய அந்தக் காலகட்டத்தில், பிரதமராக இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் இருந்தார்கள். அவரை, வைக்கத்திற்கு அழைத்து, தொடக்க விழா ஒரு வாரம் நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு நடை பெற்றது.

ஏழாவது நாள், நிறைவு நாள் விழாவிற்கு அன்னை மணியம்மையார் அவர்களை அழைத் திருந்தார்கள்; நானும், அவரோடு சென்றிருந்தேன்.

அங்கே அவர் உரையாற்றுகின்றபொழுது, ஒரு சிறப்பான பகுதி என்னவென்றால், வனிதா சம்மேளனம் - மகளிருக்காக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றார்கள்.

அங்கே நாங்கள் வியப்படைந்த ஒரு செய்தி என்னவென்றால்,  அப்பொழுதுதான் நாங்கள் வைக்கத்திற்குச் சென்று பார்க்கின்றோம். ஒவ்வொரு பகுதிகளிலும் வரவேற்பு வளைவு வைத்திருந்தார்கள்.

‘ஈ.வெ.ராமசாமி கேட்’ என்பதுதான் 

முதல் வரவேற்பு!

‘ஈ.வெ.ராமசாமி கேட்' என்பதுதான் முதல் வரவேற்பு வளைவாக அங்கே வைத்திருந்தார்கள். அவ்வளவு நன்றி உணர்ச்சியோடு இருக்கக்கூடிய தோழர்கள் கேரளத்தில் இருக்கக்கூடிய மக்கள் என்பதற்கான  அடையாளத்தை நாங்கள் பார்த்தோம். அதற்கு நன்றி சொன்னோம்.

பழ.அதியமான் எழுதிய 

‘‘வைக்கம் போராட்டம்!''

வைக்கம் போராட்டத்தின் வரலாறு ஏராளம் இருக்கிறது. நாங்கள் தனித்தனியே பேசிப் பேசி நாங்கள் எழுதியிருக்கின்றோம் என்றாலும், தோழர் பழ.அதிய மான் அவர்கள் அகில இந்திய வானொலியில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். அவர் ‘‘வைக்கம் போராட்டம்'' என்ற தலைப்பில் 15 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, தரவுகளையெல்லாம் திரட்டி, இவ்வளவு பெரிய புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் தமிழ்நாடு அரசின் முயற்சியினால், சிறப்பாக மலையாள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு,  மலையாள மொழியில் கிடைக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஏனென்றால், இவ்வளவு விரிவான வரலாறு, மற்ற இடங்களில் இல்லை. ஆய்வோடு, அவர்கள் ஒவ்வொரு ஆவணத்தோடு செய்திருக்கிறார்.

அப்புத்தகத்தில் உள்ள ஒரு சிறு பகுதியை சொல் கிறேன். இது ஒரு போராட்டம் என்று சொல்லுகிறபொழுது, சாதாரண போராட்டம் அல்ல.

வைக்கம் போராட்டம்தான் 

முதல் மனித உரிமைப் போர்!

இந்திய வரலாற்றில், மிகப்பெரிய அளவிற்கு மனித உரிமைக்காகப் போராடிய போராட்டத்தில், இதுதான் முதல் முத்திரையாகக் குறிக்க வேண்டிய மனித உரிமைப் போர். இதுதான் பல பேரை கண்விழிக்கச் செய்திருக்கிறது.

தந்தை பெரியாரின் பங்கைப் பார்த்து, காந்தியார் அவர்கள் பேசும்பொழுதுகூட, ஜாதி எப்படி இருந்தி ருக்கிறது கொடுமையாக என்று சொல்லுகிறபொழுது உங்களுக்குத் தெரியும் ஒரு வரலாறு.  காந்தியார் போய் பேசுகிறபொழுது, அவரை  அந்த மாளிகைக்கு உள்ளே வைத்துப் பேசுவதற்குத் தயாராக இல்லை. நாட்டின் தேசத் தந்தையாக இருக்கின்ற, கருதப்படுகின்ற அண்ணல் காந்தியாரையே திண்ணையில்தான் அமர வைத்தார்கள். திண்ணையில் வைத்த காந்தியாரை, உள்ளே அழைத்துப் போவதற்கு வாய்ப்பைப் பெறக் கூடிய அளவிற்கு,  அந்த வருணாசிரம தர்மம், ஸநாதன தர்மம் அன்றைக்கு விடவில்லை. ஆனால், பிறகு அந்த நிலை மாறியது. அதுதான் இந்தப் போராட்டத்தினுடைய வெற்றி.

இந்தப் போராட்டத்தினை வைக்கத்தில் டி.கே.மாதவன் அவர்கள் தொடங்கிய நேரத்தில், குரு நீலகண்ட நம்பூதிரி அவர்கள், கே.பி.கேசவமேனன் அவர்கள், ஜார்ஜ் ஜோசப் அவர்கள் எல்லாம் முயற்சி எடுத்த நேரத்தில், காந்தியாருக்குக் கடிதம் எழுதுகிறார் கள். உங்கள் அனுமதி வேண்டும், ஆதரவு வேண்டும் என்று.

அந்த நேரத்தில், காந்தியார் ‘‘இந்தப் போராட்டம் சத்தியாகிரகம் போன்று நடக்குமா? அல்லது கலவரம் ஏற்பட்டு விடுமோ?'' என்று யோசித்துத் தயங்கினார்.

அப்படி தயங்கிய நேரத்தில், வைக்கம் போராட்டம் நடத்தியவர்களையெல்லாம் கைது செய்து சிறைச் சாலையில் அடைத்துவிடுகிறார்கள்.

போராட்டக்காரர்கள் தந்தை பெரியாருக்கு 

கடிதம் எழுதினார்கள்!

அப்படி அவர்கள் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது, தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். ‘‘இப்பொழுது, இந்த இயக்கத்தையே அடக்கிவிட நினைக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் இங்கே வந்து இந்தப் போராட்டத்தினைத் தொடரவேண்டும்'' என்று.

அதைத்தான் பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் அழகாக எடுத்துச் சொன்னார். வெள்ளைக்காரர்கள் அந்தச் சட்டத்தைப் போடவில்லை. அங்கே இருந்த ஸநாதன சாம்ராஜ்ஜியம்தான்  போட்டது என்பதை விளக்கினார்.

அந்த நேரத்தில், மிக அழகாக வேறு வழியில்லாமல் சிறைச்சாலையில் இருந்தபடியே தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.

‘‘அய்யா, இந்த இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியினரை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து விட்டார்கள். நீங்கள் இங்கே வந்தால்தான், நீங்கள் தலைமை தாங்கினால்தான் இந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்த முடியும். இல்லையானால், இந்தப் போராட்டம் தோல்வி அடைந்துவிடும்'' என்று 1924 இல் கடிதம் எழுதினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் என்றைக்கு வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்கின்ற வர லாற்றையெல்லாம் நீங்கள் இங்கே காட்டியிருக்கிறீர்கள்.

ஈரோட்டிலிருந்து தந்தை பெரியார் அவர்கள், வைக் கத்திற்குச் சென்று போராட்டத்தைத் தொடரவிருக்கிறார். அன்றைக்குப் பெரியாருடைய தலைவர் காந்தியார். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்ததினால், காந்தியாருடைய அனுமதியில்லாமல், அப்போராட்டத்தைத் தொடர முடியாது என்பதினால், அவருக்குக் கடிதம் எழுதி கேட்கிறார்.

அப்பொழுது காந்தியார் சொல்கிறார், ‘‘நீங்கள் ஏன் தமிழ்நாட்டிலிருந்து அங்கே போகவேண்டும்? ஏதோ கலவரத்தைத் தூண்டுவதற்காக அங்கே வந்திருக் கிறீர்கள் என்று அவர்கள் தவறாக நினைப்பார்கள். ஆகவே, நீங்கள் அங்கே போகவேண்டாம்'' என்று காந்தியார் தயங்குகிறார், தடுத்தார்.

தந்தை பெரியார் அவர்கள் 

காந்தியாருக்கு எழுதிய கடிதம்!

அந்த சூழ்நிலையில், தந்தை பெரியார் அவர்கள், காந்தியாருக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதுகிறார்.

இந்த விவரங்கள் முழுவதும் ஆதாரப்பூர்வமானது. டி.கே.ரவீந்திரன் அவர்கள் பின்னாளில் துணை வேந்தராக இருந்தவர். அவர்,  ‘‘Vaikom satyagraha and Gandhi'' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியிருக்கிறார். 

அந்தப் புத்தகத்தில் அந்தக் கடிதங்கள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

தன்னுடைய தலைவர் காந்தியார் அவர்களுக்கு வணக்கத்தோடு கடிதம் எழுதினார் தந்தை பெரியார்.

‘‘வைக்கத்தில் உள்ள கோவில் தெருக்களில் நடக்க உரிமையில்லை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, கீழ்ஜாதி மக்களுக்கு, ஈழவ மக்களுக்கு. அதைப் பார்த்தவுடன், அவர்கள் சத்தியாகிரகம் நடத்தியது நியாயம் என்று நினைத்தேன். சத்தியாகிரகம், சத்தியாகிரகமாகவே நடக்கும்; சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்க மாட்டோம்; அதற்குக் கட்டுப்படுவோம்'' என்று சொல்லிவிட்டு,

‘‘நான் இங்கே பார்க்கிறேன், இந்தத் தெருக்களில் நாய் ஓடுகிறது; பன்றி போகிறது; கழுதை போகிறது - அவையெல்லாம் சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமையை வாங்கின? ஆனால், நாம் இப்பொழுது சத்தியாகிரகம் செய்யவேண்டி இருக்கிறதே?'' என்று எழுதினார் தந்தை பெரியார்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கல்வி அறிவைப் பெறுவதற்கு முக்கிய காரணம்!

இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும் நம்முடைய எஸ்.என்.டி.பி. யோகம் பெரிய அளவிற்குக் கல்விப் புரட்சியை செய்த அமைப்பாகும். அந்த அமைப்பு இல்லையானால், இன்றைக்குக் கேரளத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்க முடியாது. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க இந்த அமைப்புதான்.

அப்படி குருதேவ் அவர்கள் அதைத் தொடங்கிய பிறகு, அதற்குத் தளபதியாக முன்னின்று செய்த பெருமை டாக்டர் பல்பு அவர்களைச் சார்ந்தது. அதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்து இங்கே காட்டியி ருந்தீர்கள்.

எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், நம்முடைய பாலக்காடு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று இருப்பதுதான்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 

கேரள மாநிலத்தில் கொண்டாடப்பட்டது!

இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கேரள மாநிலம் வைக்கத்தில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடர்பாக விழா வினைக் கொண்டாடினார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில் வருகின்ற டிசம்பரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா!

தமிழ்நாட்டில் அவ்விழாவினை வருகிற டிசம்பர் மாதம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துகொண்டிருக்கிறது.

அதன்மூலமாக, ஜாதியத்தினுடைய முதுகெலும்பு, வருணாசிரம தர்மத்தினுடைய முதுகெலும்பு, ஜாதியக் கொடுமைகள் அழிக்கப்படக் கூடிய அளவிற்கு வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

கே.பி.கேசவமேனன்

வைக்கம் போராட்டத்தில்  இரண்டு முறை தந்தை பெரியார் கைது செய்யப்படுகிறார். 6 மாதம் தண்டிக்கப் பட்டு, சிறைச்சாலையில் இருக்கிறார். கே.பி.கேசவமேனன் அவர்கள் ‘‘வைக்கம் சத்தியாக்கிரக நினைவலைகள்'' என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார். அந்த வரலாற்றில், பெரியார் அவர்கள் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு சிறைச்சாலையில் கொடுமைப் படுத்தப்பட்டு இருக்கிறார்; தமிழ்நாட்டிலிருந்து நமக்காக இங்கே வந்து, நம்முடைய உரிமைக்காகப் போராடுகிறார் என்பதையெல்லாம் அதில் விவரித்திருக்கிறார்.

அப்படி வந்தபொழுது, ஒரு வேடிக்கையான நிகழ்வு- 

ஈழவ சமுதாயத்தினரின் உரிமைக்காக ஒருமுறை தந்தை பெரியார் போராடுகிறார்.  15 நாள் தண்டனை கொடுத்து அருவிக்குத்து சிறைச்சாலைக்கு அனுப்பப்படு கிறார். பிறகு மகளிர், அன்னை நாகம்மையார் தலைமையில் போராடுகிறார்கள்.  பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் செல்கிறார். சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த தந்தை பெரியார், மீண்டும் போராடுகிறார்; இந்த முறை 6 மாதம் தண்டிக்கப்பட்டு, திருவிதாங்கூர் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். அப்பொழுதும் தந்தை பெரியார் அந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டுகிறார்.

அதனால் வைதீகம் என்ன செய்தது என்பதை நீங்க ளெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு வேடிக்கை யான நிகழ்வு பெரியாருடைய வாழ்க்கையில் நடந்தது.

‘‘சத்ரு சங்கார யாகம்!’’ 

எதிரிகளால் ‘‘சத்ரு சங்கார யாகம்'' நடத்தப்பட்டது. சத்ரு என்றால், விரோதி. சங்காரம் என்றால், அழிப்பது. அதாவது, விரோதியை அழிப்பதற்காக யாகம் செய்தார்கள்.

அந்த யாகம் நடத்தினால், யாகத்திலிருந்து ஒரு உருவம் கிளம்பும்; அந்த உருவம், நேரிடையாகச் சென்று பெரியாரை அழித்துவிடும்; அப்படி அழித்து விட்டால், வைக்கம் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முடியாது என்பதற்காக சத்ரு சங்கார யாகத்தை நடத்தினார்கள்.

‘பெரியார்’ திரைப்படத்தில்...

அந்த யாகம் நடத்திய இரவு, சிறைச்சாலைக்கு வெளியே வெடிச்சத்தம் கேட்டது. இந்தக் காட்சியை இனமுரசு சத்யராஜ் அவர்கள், பெரியாராக நடித்த ‘பெரியார்' திரைப்படத்தில் அந்தக் காட்சியை வைத் திருக்கிறார்கள்.

சிறைச்சாலையில் இருந்த பாராக்காரர்களுக்கும் அந்த சத்தம் கேட்டது. எதற்காக வெடி வெடித்தார்கள் என்று சிறைச்சாலையில் இருந்தவர்கள் கேட்டபொழுது, ‘‘ராஜா திருநாடு இழந்து போச்சு'' என்றார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்றால், ராஜா மரணமடைந்துவிட்டார் என்பதுதான்.

அதற்குப் பிறகு தந்தை பெரியாரை விடுதலை செய்தார்கள். மீண்டும் அவர் வைக்கம் போராட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், ஈரோட்டில் அவரை கைது செய்கிறார்கள் காவல்துறையினர்.

அப்பொழுது அன்னை நாகம்மையார் அவர்கள் உருக்கமாகக் கடிதம் எழுதினார்.

அன்னை நாகம்மையார் 

எழுதிய கடிதம்!

அப்போது நாகம்மையார் எழுதிய கடிதம் 12.9.1924 ‘நவசக்தி' இதழில் வெளியானது.

“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு 11.9.1924 மறுபடியும் இராஜத் துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருஷத் திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்ப தாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார். அவர் திரும்பத்திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கட வுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக் கிறேன்.

ஆகவே, எத்தனை ஆண்டு காலமானாலும் இருக்கின்றவர்கள் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிகரமாக் குங்கள்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, வைக்கம் போராட்டம் என்பது சாதாரண போராட்டமல்ல; மனித உரிமைப் போராட்டம் மட்டும் அல்ல. 

அங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு தொடக்கக் காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புக் கொடுத் ததையெல்லாம் இங்கே காட்டினீர்கள்.

ஒவ்வொரு முறையும் கேரளம் போராட்டக் களமாக இருந்தது. இன்றைக்கு அதைச் சாதாரணமாகப் பார்க் கிறோம். ஆனால், அன்றைக்கு அந்த வாய்ப்புகள் என்னவென்பதை மிகத் தெளிவாகப் பார்க்கவேண்டும்.

அண்ணல் அம்பேத்கரின் 

வாழ்க்கை வரலாறு புத்தகம்! 

கடைசியாக ஒரு செய்தி - அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாறு புத்தகம்.

அந்தப் புத்தகத்தில் வைக்கம் போராட்டத்தைப்பற்றி பதிவு செய்திருக்கிறார். அந்த வைக்கம் போராட்டம் என்பது இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஒரு போராட்டமாகும் என்று.

மகத்குளப் போராட்டத்திற்கு 

வைக்கம் போராட்டமே அடிப்படை!

அம்பேத்கர் அவர்கள் ஒரு பத்திரிகையை நடத்தினார் ‘‘மூக்நாயக்'' என்பது அந்தப் பத்திரிகையின் தலைப்பு.

அந்தப் பத்திரிகையில் வைக்கம் சத்தியாகிரகத்தைப் பற்றி எழுதுகிறார். இப்படி ஒரு போராட்டத்திற்குப் பிறகுதான், தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தில் இறங்கி தண்ணீர் எடுப்பதற்காக நடத்தப்பட்ட மகத்குளப் போராட்டம் நடைபெற்றது என்று.

எனவே, வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் என்பது கேரள மாநில மக்களுக்காக மட்டுமல்ல - அங்கே நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தைப் பார்த்தவுடன், அடுத்தபடியாக இந்த உணர்வு வர வேண்டும் என்பதற்காக சுசீந்திரத்தில் அடுத்த ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அதற்கடுத்து குருவாயூரப்பன் கோவிலில் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம்.

இப்படி பல போராட்டங்களுக்கெல்லாம் வழிகாட்டி யாகவும் வைக்கம் போராட்டம் இருக்கிறது.

வைக்கம் போராட்ட வெற்றி - சமூகநீதியினுடைய வெற்றி! ஜாதியத்தினுடைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வெற்றி!

ஆகவே, வைக்கம் போராட்டம் வெற்றி என்பது இருக்கிறதே, சமூகநீதியினுடைய வெற்றி! ஜாதியத்தினுடைய கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய வெற்றி! மனிதர்கள் சமமானவர்கள் - மனிதர்களிடையே பேதமோ, பிளவோ இருக்கவேண்டியதில்லை என்பதை வலியுறுத்தக் கூடியது வைக்கம் போராட்டம்.

ஒரே மதம் என்று சொல்கிறீர்களே, ஒரே ஜாதி என்று சொல்வதற்குத் தயாரா? ஜாதியில்லாத மதத்தைக் கொண்டுவாருங்கள் என்று கேட்க வேண்டிய தத்துவம் இருக்கிறது.

எனவேதான், நீங்கள் சரியான நேரத்தில் இந்த விழாவைக் கொண்டாடி இருக்கிறீர்கள். அதற்காக எங்களுடைய நன்றி, பாராட்டு!

சீர்திருத்தங்கள் எப்பொழுதும் தேவை?

இந்தக் கருத்துகள் நாடெங்கும் பரவவேண்டும். நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டம், இப்பொழுது ஏன் சொல்லவேண்டும் என்பதினுடைய நோக்கம் - அழகாக இங்கே பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஒரு கருத்தை சொன்னார்.

‘‘சரியாகப் போய்விட்டது; எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் சமத்துவம், சமூகநீதியைப்பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நோய் மீண்டும் வரும்;  எப்படி கோவிட் கிருமிகள் பல ரூபத்தில் வருகின்றதோ, அதே போன்று, மருத்துவமுறை எப்பொழுதும் தேவை! 

மருத்துவர்கள் எப்பொழுதும் தேவை! 

அதேபோல, சீர்திருத்தங்கள் எப்பொழுதும் தேவை!

அதற்காகத்தான் இங்கே உள்ள அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது மீண்டும் குலக்கல்வித் திட்டம் வருகிறது. மீண்டும் ஜாதித் தொழிலை செய்யுங்கள்; அதற்காக உங்களுக்குக் குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்கிறோம் என்று நம்பக்கூடிய அள விற்கு ஏமாற்று வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றி!

எனவேதான், மீண்டும் அந்தக் கிருமிகள் உள்ளே நுழையவிருக்கிறது. வைக்கம் நூற்றாண்டு காலகட்டத்தில் அதற்கு இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பை உருவாக்கி, அதற்காகத்தான் இந்த வரலாற்றைச் சொல்லுகிறோம். இளைய தலைமுறையினர் இந்தத் தகவல்களைத் தெரிந்துகொண்டு, மனிதர்களுக்கு அழகென்றால், சமத்துவம், சுதந்திரம், சிந்தனை என்பதைக் காட்டவேண்டும் என்று, கேரளத்து சகோதரர்களாக இருக்கக்கூடிய நீங்கள், இந்த அமைப் பைச் சார்ந்த அத்துணைப் பேரும், மிகத் தெளிவாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைக் கொண் டாடி இருக்கிறீர்கள். அதற்காக மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றி!

வைக்கம் போராட்டம் சமத்துவத்தினுடைய எல்லையாக இருக்கும்!

வைக்கம் போராட்டம் நமக்கு வழிகாட்டும்!

வைக்கம் போராட்டம் சமத்துவத்தினுடைய எல்லை யாக இருக்கும்!

வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத புரட்சி!

மனிதகுலத்தினுடைய வராலற்றில், இப்படி ஒரு பெரிய அளவிற்குத் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்தது. 

இப்பொழுது தெருவில் நடக்கக்கூடிய உரிமையையும் தாண்டி, கோவிலின் கருவறைக்குள் அர்ச்சகராகவும் போகக்கூடிய அளவிற்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக் கின்றது என்றால், வைக்கம் போராட்டம் அதற்கு அடித்தளம்.

இவ்விழாவினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த உங்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க வைக்கம் ளபோராட்ட உணர்வு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேருரை யாற்றினார்.

No comments:

Post a Comment