அரூரில் தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

அரூரில் தமிழர் தலைவர் பேட்டி

⭐அன்று ஆச்சாரியார் 1952-1954இல் குலக்கல்வியைக் கொண்டு வந்தார்

⭐இன்று மோடி 'விஸ்வகர்மா யோஜனா'வைக் கொண்டு வந்துள்ளார்

கல்லூரிப் படிப்புக்குச் செல்லாமல் ஜாதித் தொழிலை செய்யத் தூண்டும் நவீன குலக்கல்வியே இத்திட்டம் - எச்சரிக்கை!

அரூர், அக்.31  1952-1954இல் சக்கரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்ற குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் குலக்கல்வித் திட்டத்தைப் புதுப்பிக்கிறார். பரம்பரைப் பரம்பரையாக ஜாதித் தொழிலை செய்து வந்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரிக்குள் நுழைய விடாமல் ஜாதித் தொழில் பக்கம் தள்ளும் சூழ்ச்சிதான் இந்தத் திட்டம் - மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 28.10.2023 அன்று மாலை தொடர் பரப் புரைப் பயண நிகழ்விற்காக அரூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

மதுரையில் நவம்பர் 5 ஆம் தேதி நிறைவடைகிறது!

தமிழ்நாடு முழுக்க கடந்த சில நாள்களாக என்னு டைய சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. நாகப்பட் டினத்தில் தொடங்கி, ஒவ்வொரு நாளும் இரண்டு ஊர்களில் பரப்புரை நடத்தி, நிறைவாக நவம்பர் 5 ஆம் தேதி மதுரையில் நிறைவடையவிருக்கிறது.

எங்களுடைய தொடர் சுற்றுப்பயணத்தினுடைய நோக்கம், அண்மையில் பிரதமருடைய 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் என்ற பெயரால், மீண்டும் குலத் தொழில் கல்வித் திணிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

பிள்ளைகள் தகப்பன் தொழிலைத்தான் செய்யவேண்டும் என்று மறைமுகமாக ஊக்குவிக்கக் கூடிய திட்டம்!

இது ஒரு மோசமான திட்டம் மட்டுமல்ல, அடித் தளத்தில் இருக்கக்கூடிய நம்முடைய மக்கள், அவரவர் குலத்தொழிலை செய்யவேண்டும் என்று 70 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, தமிழ் நாட்டில் குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். பிள்ளைகள் அரைநேரம் படிக்கவேண்டும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை செய்யவேண்டும் என்று குலத்தொழிலை அவர் திணித்து, மீண்டும் வருணாசிரம ஜாதியைப் புதுப்பிக்கக் கூடிய அளவிற்கு, ஒடுக்ககப்பட்ட சமுதாயத்தினர் ஜாதித் தொழிலையே செய்யவேண்டும் என்று நினைத்தார். தற்போதும், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படித்து அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாகவோ அல்லது அய்க்கோர்ட் ஜட்ஜ்களாகவோ அல்லது ஆராய்ச்சியாளர்களாகவோ அல்லது பேராசிரியர்களாகவோ வரக்கூடாத அள விற்கு, பிள்ளைகள் தகப்பன் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று மறைமுகமாக ஊக்கு விக்கக் கூடிய அளவிற்கு இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக் கிறார்கள்.

அந்தத் திட்டம் பற்றி  குலக் கல்வியை அவர்களே பட விளக்கமுடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஒன்றிய அரசாங்கத்தினுடைய திட்டம் இது என அதை விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஜாதியைக் குறிப்பிட்டு, அந்தந்த ஜாதியினுடைய தொழிலைப் படமாகப் போட்டு இருக்கிறார்கள்.

உதாரணமாக, செருப்புத் தைக்கிற தொழில் என்றால், அதையே படமாகப் போடக்கூடிய, அரசாங்க வெளியீடாக - அது பிரதமரின் திட்டம் என்ற பெயரிலே வெளியிட்டு இருக்கிறார்கள்.

(அந்தப் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் காட்டினார்).

ஜாதியை அடிப்படையாகக் கொண்டு வந்து, அந்தந்த தொழில்களுக்கான படங்களைப் போட்டிருக் கிறார்கள்.

குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுக்கிறார்களாம்!

அந்தந்தத் தொழில்களுக்குத் தேவையான பணத்தை குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுக்கிறோம் என்கிறார்கள். அந்தத் தொகை உதவித் தொகையும் இல்லை; இலவசமாகவும் இல்லை. கடனாகத்தான் கொடுப்பார்களாம். தொழிலுக் குக் கடன் கொடுப்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது, அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

ஆனால், ஒன்றிய அரசை நடத்துகிறவர்கள், பாரம்பரியமாக அந்தத் தொழிலைச் செய்யக்கூடிய ஜாதி - குரு - சிஷ்யன் முறையில், தகப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்பதைப் படங்களுடன் எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள்.

கிராமத்தில் உள்ளவர்கள் அந்த ஜாதித் தொழிலைச் செய்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்து, பட்டதாரிகளாகவோ, டாக்டர்களா கவோ, பொறியாளர்களாக ஆகும் நிலை இருந்தது. 

இது ஆர்.எஸ்.எசினுடைய திட்டம்!

இப்படி அவர்கள் மேலே வரக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசினுடைய திட்டம். எப்படி நீட் தேர்வில் வடிகட்டுகிறார்களோ, க்யூட் தேர்வுகளால் எப்படி தடுக்கிறார்களோ அதுபோலத்தான் இதுவும். காரணம், என்னவென்றால் இது ஆர்.எஸ்.எசினுடைய திட்டம், ஜாதியைப் பாதுகாப்பது மட்டுமல்ல - எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு, கீழ்ஜாதிக்காரனுக்குப் படிப்பை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்ற வருணா சிரம திட்டம் - மனுதர்மத் திட்டம்.

எனவே, இப்பொழுது ஒன்றிய அரசு கொண்டு வந்திருப்பது 'விஸ்வகர்மா யோஜனா' திட்டமல்ல - மனுதர்ம யோஜனா திட்டமாகும்.

மீண்டும் ஜாதியை நிலை நிறுத்துவது என்பதாகும்.

அதோடு இன்னொரு கொடுமை என்னவென்றால், ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தது, தொடக்கப் பள்ளிக்கூடத்தில்தான்.

18 வயது நிரம்பிய நம் பிள்ளைகள் பட்டதாரிகளாக ஆகக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் திட்டம்!

ஆனால், இப்பொழுது ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் திட்டம் என்பது, நம்முடைய பிள்ளைகள் 12 ஆம் வகுப்புவரை படித்திருக்கிறார்கள். இப்பொழுது இந்தத் திட்டத்தைத் தொடக்கப் பள்ளியில் கொண்டுவந்தால், அவர்களுடைய திட்டம் நிறைவேறாது என்பதால், 12 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன், அந்தப் பிள்ளைகள் கல்லூரிக்கோ அல்லது மற்ற மேற்படிப்புகளுக்கோ செல்வார்கள். அதுபோன்று அவர்கள் செல்லக்கூடாது என்பதற்காகவே, 18 வயதானவுடன், உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் குறைந்த வட்டியில் கொடுக்கிறோம் - அதை வைத்துக்கொண்டு, அப்பன் தொழிலையே பழகவேண்டும் என்கிறார்கள்.

மனு போடுவதற்கு என்ன தகுதி?

எனவே, இந்தத் திட்டத்தின் கடன் தொகையைப் பெறவேண்டும் என்று மனு போடுவதற்கு என்ன தகுதி என்பதை அவர்கள் வெளியிட்டுள்ளதை அப்படியே படிக்கிறேன்.

The applicant must be a self-employed artist or craftsperson working in one of the 18 designated family-based traditional trades in the unorganized or informal sector. An applicant must be at least 18 years old on the registration date.

விண்ணப்பதாரர் அமைப்புசாரா அல்லது முறைசாரா துறையில் கொடுக்கப்பட்டுள்ள 18 தொழில்களில் ஜாதி அடிப்படையிலான பாரம்பரிய வர்த்தகங்களில் ஒன்றில் பணிபுரியும் ஒரு சுயதொழில் கலைஞர் அல்லது கைவினைஞராக இருக்கவேண்டும். ஒரு விண்ணப்பதாரர் பதிவு தேதியில் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும்.

18 வயதில் கல்லூரிக்குச் செல்லவேண்டிய மாணவன்; அல்லது பாலிடெக்னிக் படிப்பு முடித்துவிட்டு செல்லும் மாணவி ஆகியோர் என்ன செய்யவேண்டும் என்றால், சட்டிப் பானை செய்யவேண்டும்; அல்லது செருப்புத் தைக்கவேண்டும்; அந்தத் தொழிலில் பாரம்பரியமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் குறைந்த வட்டியில் கடன் கொடுப்போம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இது ஜாதித் தொழிலை ஊக்குவிக்கக்கூடிய வருணாசிரம தர்மத் திட்டம் - ஆர்.எஸ்.எஸ். திட்டம்.  நாம் கொஞ்சம் ஏமாந்தால், நம்முடைய பிள்ளைகள் மறுபடியும் பின்னோக்கிச் செல்லவேண்டிய நிலை வரும்.

மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு வரவில்லை!

எல்லாத் துறைகளுக்கும் அவர்கள் கதவைச் சாத்துகிறார்கள்; இதனை நாம் கண்டிக்கின்றோம். ஆனால், மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு வரவில்லை. ஆகவே,  மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒன்றிய அரசு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறதே, அதை இவர்கள் ஏன் தடுக்கிறார்கள் என்று  தவறாக நினைக்கிறார்கள்.

ஒன்றிய அரசு கொடுக்கும் பணம் என்பது, நம்முடைய பணம்தான். நம் தமிழ்நாட்டிலிருந்து ஜி.எஸ்.டி. என்ற பெயரில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்குச் செல்லுகிறது. நம்மிடம் ஒரு ரூபாய் வாங்கினால், 29 காசைத்தான் அவர்கள் திருப்பிக் கொடுக்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்காகத் தான் இந்தப் பரப்புரைப் பயணம்.

ஆரியம்  - திராவிடம் என்பது வெள்ளைக்காரர்கள் செய்த சூழ்ச்சி என்று சொல்கிறார்களே?

செய்தியாளர்: ஆரியமும் இல்லை; திராவிடமும் இல்லை அதெல்லாம் பொய். வெள்ளைக்காரரான கால்டுவெல் செய்த சூழ்ச்சி என்று தமிழ்நாடு ஆளுநர் பேசியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: ஆளுநர் அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். பைத்தியம் பிடித்தவர்கள் தொடர்ந்து உளறுவதுபோன்று, அவர் உளறிக் கொண்டிருக்கிறார்.

ஏனென்றால், அவர்கள் நம்பும் சாஸ்திரம், ஸ்ருதி ஸநாதனம்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 தேசிய கீதத்தை வெள்ளைக்காரன் கொண்டு வந்திருந்தால், அதை ஏன் நாம் தேசிய வணக்கம் என்று நாம் பாடப்போகிறோம்? 'திராவிட உத்கல வங்கா' என்று ஏன் சொல்கிறோம்? 

புராணங்களில் திராவிடத்தைப்பற்றி சொல்லப்பட்டு இருக்கிறதே, அப்படியென்றால், புராணங்களை கால்டுவெல் எழுதினாரா? வெள்ளைக்காரர்கள் எழுதினார்களா?

ஆகவே, வேண்டுமென்றே அவர் திரும்பத் திரும்ப பொய்யை சொல்லுகிறார்.  

தூங்குகிறவர்களை எழுப்பலாம்; ஆனால், தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை கண்டிப்பாக எழுப்ப முடியாது.

இப்படியே அவர் பேசிக்கொண்டிருந்தால், அதற்கு நாம் உரிய பதிலைச் சொல்வோம். இவர் அரசியல்வாதிகளுக்குமேல், சூத்திரதாரி அரசியல்வாதியாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆகவேதான், அவர் பேசப் பேச நமக்கு நல்லதுதான்.தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கை!

நேற்றுகூட நம்முடைய முதலமைச்சர், பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்,

''நான் ஒன்றிய அரசை, ஒன்றிய அரசின் பொறுப்பில் இருக்கக்கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷாவை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது - தயவு செய்து இங்கிருக்கும் ஆளுநரை மட்டும்   மாற்றிவிடாதீர்கள். இந்த மக்களவைத் தேர்தல் வரைக்குமாவது கொஞ்சம் இருக்கட்டும். எங்களுக்கு அதில் பல சவுரியங்கள் இருக்கின்றன

ஆளுநர் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. மக்கள் அவரது பேச்சை அசட்டை செய்துவரும் சூழ்நிலையைத்தான் பார்க்கிறோம்'' என்று கூறியிருக்கிறார். 

மனுதர்மம் சுலோகம் 10 - அத்தியாயம் 44

கால்டுவெல் எழுதியதா, மனுதர்மம்? அந்த மனுதர்மத்தில் 44 ஆவது சுலோகம், 10 ஆவது அத்தியாயத்தில்,

''பவுண்டரம், அவுண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் ஆகிவிட்டார்கள்.''

ஆகவே, திராவிடன்தான் சூத்திரன்; சூத்திரன்தான் திராவிடன் என்பதற்கு ஆதாரமாக இது உள்ளது.

கால்டுவெல் வந்தது 200 ஆண்டுகளுக்குமுன்பு. ஆனால், மனுதர்மம் எழுதப்பட்டது எப்பொழுது?  வேதத்தில் இருந்தது என்று விளக்கம் சொல்கிறார்கள்.

திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்கிறவர் 'நல்ல மனநிலை'யில்தான் இருக்கிறாரா?

ஆகவேதான், ஆளுநர் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்கிறார் என்றால், அவர் நல்ல மனநிலையில்தான் இருக்கிறவரா? என்கிற சந்தேகம் எழத்தான் செய்யும்.

ஒருவர் இதுபோன்று விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால், ''இவரை கொஞ்சம் பரிசோதிக்கவேண்டும்'' என்று சொல்வோம்.

ஆகவே, அவர் இதைத் திரும்பத் திரும்ப பேசப் பேச, திராவிட கொள்கைகளுக்கு ஒவ்வொரு நாளும் உரம் போட்டுக் கொண்டிருக்கிறார். அது செழிப்பாக வளரும்.

அதைத்தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் நேற்று (29.10.2023) அழகாகச் சொல்லியிருக்கிறார். தயவு செய்து அவரை மாற்றிவிடாதீர்கள். குறைந்தபட்சம் நாடாளுமன்றத் தேர்தல் வரையிலாவது அவர் இருக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார்

செய்தியாளர்: இந்திய ரிசர்வ் வங்கியின்கீழ் இயங்கக்கூடிய ஸ்டேட் பாங்க், இந்தியன் வங்கி போன்ற தேசிய வங்கிகளில் விவசாயிகள், மாணவர்கள் கல்விக் கடன் வாங்கினார்கள். அவர்களால் கல்விக் கடனை கட்ட முடியாத சூழ்நிலையில், கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு கொடுத்தார்கள்; ஆனால், வசூல் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. இந்த நிலையில், வாராக் கடன்களை அதானி குடும்பத்திடமும், அம்பானி குடும்பத்தினரிடமும் ஒப்படைத்து, கல்விக் கடன் வாங்கிய விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் தொலைப்பேசி அழைப்பின்மூலமாக கல்விக் கடன் கட்டுங்கள் என்று சொல்கிறார்களே?

பெருமுதலாளிகள் வாங்கிய கடன் 25 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறார் பிரதமர் மோடி

தமிழர் தலைவர்: 25 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். மாணவர்களின் கல்விக் கடனை வாராக் கடனாக வைத்திருக்கிறார்கள். இப்பொழுது பெருமுதலாளிகள் வாங்கிய கடனான 25 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறார் பிரதமர் மோடி.

அதானி வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. காரணம் என்ன? தேர்தல் பாண்டு, தேர்தலுக்குப் பணம்.

தேர்தலுக்கு என்ன பணம் என்று மோடி திரும்பிப் பார்ப்பார் - அதானி என்றால் முடிந்து போயிற்று.

ஒரே வழி என்னவென்றால், வருகின்ற மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்வதுதான்.

 தோல்வியை பா.ஜ.க.வினர் உணர்ந்துவிட்டார்கள் என்பதற்கு அடையாளம்!

இதற்கு 5 மாநிலத் தேர்தல்கள்தான் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கப் போகின்றன. தோல்வியை பா.ஜ.க.வினர் உணர்ந்துவிட்டார்கள் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், தெலங்கானாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் பேசுகிறார், ''நாங்கள் வெற்றி பெற்றுவிட்டால், பிற்படுத்தப்பட்டவரை முதலமைச்சராக்குவோம்'' என்று.

இதுவரையில் இதுபோன்று எங்கேயாவது அவர்கள் பேசியிருக்கிறார்களா? அதற்குக் காரணம் என்ன? தோல்வியின் பயத்தால்தான் அவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்கள் யாரும் அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு இதுவரையில் சமூகநீதிபற்றி தெரியாது. இப்போது சமூகநீதி பற்றி பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்குத் தோல்வியின் பயம் உச்சக்கட்டத்தில் இருப்பதால்தான்.

சட்டப்பூர்வமாக என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறது 'திராவிட மாடல்' அரசு!

செய்தியாளர்: 'நீட்' தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று குற்றம் சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: நீட் தேர்வினால் மாணவர்கள் மத்தியப் பிரதேசத்தில் தற்கொலை - ராஜஸ்தானில் தற்கொலை - ஆந்திராவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதில்லை.

இப்பொழுது நீட் தேர்வின் கொடுமையைப்பற்றி எல்லோரும் உணரத் தொடங்கிவிட்டனர். அதற்கு சட்டப்பூர்வமாக என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்திருக்கிறது 'திராவிட மாடல்' ஆட்சி. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அந்த மசோதாவும் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அண்மையில் தி.மு.க. இளைஞரணி சார்பில், நீட் தேர்விலிருந்து விலக்கு தராமல் ஒன்றிய அரசு பிடிவாதம் பிடிப்பதை வெளிக்கொண்டுவருவதற்காக நீட் தேர்வு குறித்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். சட்டப்பூர்வமாக என்னென்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

2024 இல் கண்டிப்பாக வரும்!

மற்றவர்கள் போன்று ரயிலைக் கொளுத்துவதோ, பேருந்தை கொளுத்துவதோ அல்லாமல், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார்கள். இவ்வளவு செய்தும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காமல் இருக்கிறது ஒன்றிய அரசு.

இதற்கான பதில் 2024 இல் கண்டிப்பாக வரும். நீட் தேர்வுக்கு மட்டுமல்ல, அதானி, அம்பானி போன்றவர்களால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


No comments:

Post a Comment