தஞ்சையில் முதலமைச்சரின் பிரகடனங்கள்! யாம் பெற்ற மகிழ்ச்சிக்கோர் அளவில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

தஞ்சையில் முதலமைச்சரின் பிரகடனங்கள்! யாம் பெற்ற மகிழ்ச்சிக்கோர் அளவில்லை!

தமிழர் தலைவர்

கி.வீரமணி

2023 அக்டோபர் 6ஆம் நாள், திராவிடர் இயக்க வரலாற்றில் என்றென்றும் கல்வெட்டாக இடம் பெறும் நாளாகும்.

கழகங்களின் கொள்கை நஞ்சையாம் தஞ்சை அந்த வரலாற்றை மீண்டும் அன்று திருப்பி இருக்கிறது!

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை - 'History Repeats' - 'வரலாறு மீண்டும் திரும்புகிறது'.

அக்டோபர் 6இல் முத்தமிழ் அறிஞருக்கு திராவிடர் கழகம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியது.

ஜூன் 12, 2006இல் அதே தஞ்சையில் முதலமைச்சர் கலைஞருக்கு  பாராட்டு - நன்றிப் பெருவிழா! அவரது ஆட்சியில் அரிய சமூகப் புரட்சியை, ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யமாகக் கொண்ட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிட தமிழ்நாடு அரசின் சட்டம் இயற்றி, மூடிய கருவறைக் கதவுகளைத் திறந்து, ஒடுக்கப்பட்டோருக்கு உள்ள தனித் தகுதியோடும் - உரிமையோடும் உள்ளே நுழைய தனிச் சட்டம் இயற்றினார் - "தந்தையின் நெஞ்சில் தைத்த முள்ளை" அகற்றிடும் பெருவிழைவோடு!

அதற்காகவே "தாய்க்கழகம்" அவருக்குப் பாராட்டும், நன்றியும் கூறிட விழாக்கோலம் பூண்டு தஞ்சையில் கூடியது!

அதன் பிறகு உச்சநீதிமன்றம் வழிவிட்டும் ஸநாதனம் குறுக்கே 'நந்தி'யாகப் படுத்து சட்டத்தின் சந்து பொந்துகளை இன்றளவும் தேடி ஓடிக் கொண்டுள்ளது. அந்த ஸநாதன நந்திகளை விலக வைத்தவர் எங்கள் கலைஞர். பழைய தோற்றோடும் நந்தன்கள் காலமல்ல - தீயில் தள்ளுவதற்கு இடங் கொடுக்கும் ஏமாந்தவர்கள் காலமும் அல்ல! நந்தி விலக விண்ணப்பம் போடும் காலம் அல்ல!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற செயல்மிகு ஆட்சித் தலைமை - உறுதிமிக்க சமூகப் புரட்சி யுகத்தினை உருவாக்கும் காலம் என்று ஊர் அறிய, பார் அறிய திராவிடத்தின் மேன்மையைப் பறைசாற்றி பவனிவரும் ஒரு புதிய திருப்பமான காலம்!

சமூகப் புரட்சியை அமைதிப் புரட்சியாக்கி, துளி ரத்தம் சிந்தாமல் சாதித்தவருக்கு தாய் உச்சிமோந்து, மெச்சிப் பெருமை கொண்டு வாழ்த்தி, "என்றும் தோளில் தூக்கிக் கொண்டாடும்" என்று காட்ட விழா எடுக்க விழைந்தோம் - தாய்க் கழகத்தினர்!

தாயின் பாசத்திற்குரிய எமது சமூகநீதி காத்த சரித்திர நாயகர்

வந்தார்!

கலந்தார்!

நெகிழ்ந்தார்!

முழங்கினார்!

வென்றார்!

இதயங்கள் பாசத்தால் இளமையாயின!

உயிரும் உடலும் என்பது "தாய் - பிள்ளை உறவு" என்ற அறிவியல் உண்மையை ஓங்கி உரைத்த பிரகடனங்களைச் செய்தார் - நமக்குள் ஏது நன்றி? பாசம்தானே என்றும்!

வென்றார் பல கோடி உள்ளங்களை!

அன்று நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மகிழ்ச்சி பொங்க, மேடையில் பேசியது உரை அல்ல, காலம் என்ற கல்வெட்டில் என்றும் அழிக்கப்பட முடியாத இன எழுச்சிக் கொள்கைப் போர் முழக்கங்கள்!

நீதிக்கட்சி பிறக்கும்போது நாம் பிறக்கவில்லை; ஆனால், வரலாறு பிறந்தது. அது தொடர்ந்தது; அன்று தலைமுறை இடைவெளியின்றிப் படர்ந்தன பார் போற்றிய பிரகடனங்கள்!

"யான் பெற்ற பேறு வேறு யார் பெற்றார்?" என்று கொள்கைப் போர் வீரர்கள் - மகிழ்ச்சி நீரூற்றுக்குள் மகிழ்ந்து மகிழ்ந்து இன்றும் பேசிக்கொண்டே புதிய இளமையைப் பெற்றுள்ளார்கள்!

சமூக நீதிக்கான சரித்திர நாயகரின் கொள்கை உறுதி, அவரது பெயருக்கேற்ற இரும்பு உறுதியாகும்! ஈக்களால் அதனை ஒருபோதும் அழித்துவிட முடியாது!

கடுமையான நெருப்பில் தள்ளி, எஃகு புதிய ஆயுதமாகி இன எதிரிகளைப் பதம் பார்த்த வெற்றியுடன் திரும்பும் வேகத்தையும், விவேகத்தையும் ஒருங்கே பெற்ற முதிர்ச்சியின் உருவம்!

"இவரின் ஆட்சி

காட்சி அல்ல!

இவ்வினத்தின் மீட்சிக்காக!"

என்பதை அவரது அந்நாள் பிரகடனங்கள் என்றும் முரசொலிக்கும்!

அடிமை விலங்கொடித்து விடுதலை தரும்!

புதிய திராவிடம் உள்ளடக்கி

புதிய 'இந்தியா' மலரும்!

அதற்கான அச்சார வெற்றியே

தஞ்சையின் கொள்கைத் திருவிழா!

நிற்காத இதயத் துடிப்புகளுடன் 

நமது நன்றி! நன்றி!!


"பெரியார்தான் தமிழ்நாடு அரசு 

 தமிழ்நாடு அரசுதான் பெரியார்"

இதைவிடப் பெரிய போராயுதம் உண்டா?

வாளும் கேடயமும் தரும் வலிமையை விட நாளும் நிலைத்த வரலாற்றுப் பிரகடனம் அன்றோ!

தாய்க் கழகத்தின், தந்தையின் தோளில் தூக்கி வைத்து என்றென்றும் பாதுகாப்போம்!

அதற்காக எந்த விலையையும் தந்து என்றும் காப்போம்!

இது தாய்ப் பாசத்தின் பிரகடனம்!

வேருக்கு அழிவில்லை!

எனவே, விழுதுக்குப் பழுதில்லை -  என

பாருக்கு உணர்த்திட்ட பகுத்தறிவு விழா அன்றோ!

ஊருக்கு அறிய வைத்த

உலகத்திற்குப் புரிய வைத்த

அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளை அறவே எடுத்திடுவோம்!

No comments:

Post a Comment