அழைக்கிறது சேரன்மகாதேவி! - மின்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 15, 2023

அழைக்கிறது சேரன்மகாதேவி! - மின்சாரம்

20ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்ற இரு பெரும் போராட்டங்கள் - மனித உரிமைப் பாட்டையில் எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கங்கள்!

ஹிந்து மதம் - ஸநாதனம் எனும் போர்வையில் உற்பத்தி செய்த பிறப்பின் அடிப்படையிலான பேதம் என்னும் அடர்ந்த காட்டின் வேர்களில் 'வெடிகுண்டை' வீசிய இரு பெரும் போராட்டங்கள்.

இந்த இரு எழுச்சிப் போராட்டங்களின் தளகர்த்தராக நின்றவர் தந்தை பெரியார்!

"ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது, மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள்,  நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும் வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், நாட்டில் எல்லாத் துறைகளிலும்....

"சமதர்மம், சம ஈவு, சம உடைமை, சம ஆட்சித் தன்மை, சம நோக்கு, சம நுகர்ச்சி, சம அனுபவம் இருக்க வேண்டும்! ஏற்பட வேண்டும்!! ஏற்படுத்தப்பட வேண்டும்!!! ஏற்பட்டாக வேண்டும்!!!!" என்பார் தந்தை பெரியார் ('விடுதலை' 13.1.1965).

உலக சமத்துவத்திற்காகக் கூவிக் கூவி அழைக்கும் எவராக இருந்தாலும் தந்தை பெரியார் பகுத்துத் தந்துள்ள இந்த சமூக இயல் வாய்ப்பாட்டை - இலக்கணத்தைத் தங்கள் கை விளக்காகக் கொள்ள வேண்டும்!

இதற்காக எவ்வளவோ எழுதிக் குவித்தார் - எத்தனை எத்தனையோ கூட்டங்களில் பேசினார் - மணிக்கணக்கில் பேசினார்.

ஒரு திருமணத்தில் அய்ந்து மணி நேரம் பேசினார் என்பதும் (செய்யாறு வாழ்குடை), ஒரு பொதுக் கூட்டத்தில் நான்கரை மணி நேரம் பேசினார் (மயிலாடுதுறை - 8.9.1956) என்பதெல்லாம் கற்பனைக்கேகூட எட்ட முடியாத இமயங்கள்!

எழுத்தோடும், பேச்சோடும் முடிந்து விட்டவையல்ல - அவர்தம் தொண்டு!

தலைவர் ஆசிரியர் அழகாகக் கூறுவார். திராவிடர் கழகத்தின் அணுகுமுறை (1) பிரச்சாரம், (2) போராட்டம் என்ற இரண்டு என்பார்.

தந்தை பெரியார் தம் தொண்டறக் கடலின் ஆழத்தை - பரிமாணத்தைக் கண்டு, கண்டுபிடித்துச் சொல்லப்பட்டவை இவை!

ஆம், அண்டை மாநிலமான திருவனந்தபுரம் (கேரள மாநிலம்) சமஸ்தானத்துக்கு உட்பட்ட வைக்கம் எனும் ஊரில் உள்ள வைக்கத்தப்பன் கோயிலின் நான்கு வீதிகளிலும் தாழ்த்தப்பட்டோர், ஈழவர் போன்றவர்கள் செல்ல அனுமதியில்லை.

அந்தக் கொடுமையை எதிர்த்துத் தூக்கப்பட்ட போர்க் கொடிதான் வைக்கம் போராட்டம். 

அதன் நூற்றாண்டு விழாத் தொடக்கமாகத்தான் 'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் மாண்புமிகு மானமிகு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் (30.3.2023) விதி எண் 110இன் கீழ் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். பல அறிவிப்புகளையும் தெரிவித்தார்.

வைக்கத்தின் நூற்றாண்டு விழா கேரள முதல் அமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று தொடங்கி வைக்கப்பட்டது (1.4.2023).

அதன் நூற்றாண்டு விழாக் காலத்தில் நாம். எல்லாம் வாழ்கிறோம் என்பதுகூட நமக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமைதான்!

..................

வைக்கம் போராட்டத்தை தந்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தி வெற்றி வீரராக - 'வைக்கம் வீரராக'ப் பரிணமிக்கிறார் என்றால் - அடுத்ததாக அவருடைய  ஜாதி  - தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்பது சேரன் மகாதேவி குருகுலப் போராட்டமாகும்.

அந்தப் போராட்டத்தில் டாக்டர் வரதராசலு முக்கியமான போராட்ட வீரராகத் திகழ்ந்தார். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் பங்கும் மகத்தானது.

அகில இந்திய காங்கிரஸ் எடுத்த ஒரு முடிவு - நாடெங்கும்   தேசியக் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவது என்பதாகும்.

அதன்படி உருவாக்கப்பட்டதுதான் கல்லிடைக் குறிச்சியில் உருவாக்கப்பட்ட தமிழ்க் குருகுல வித்யாலயம் (1922 டிசம்பர் 8)

குருகுலத்தின் பெயர் பரத்துவாச ஆசிரமம்.

அடுத்த ஆண்டு அங்கிருந்து சேரன் மகாதேவிக்கு மாற்றப்பட்டது. அதன் தலைவர் வ.வே.சு. அய்யர். இலண்டன் எல்லாம் சென்று படித்தவர்தான். ஆனாலும் அவரின் பார்ப்பனப் புத்தி என்பது வர்ணாசிரம குதிரைமீது ஏறி சவாரி செய்தது.

குருகுலத்தில் 'பிராமணர்' - 'சூத்திரர்' பேதம் தலை விரித்தாடியது. தண்ணீர் குடிக்கக்கூட தனிப்பானை - உணவிலும் வேறுபாடு.

இந்தக் குருகுலத்தில் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் மகனும் சேர்ந்து படித்தான்.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது - ஆசிரமப் படிப்பு, நடவடிக்கைகள் பற்றி எல்லாம் ஓமாந்தூரார் தன் மகனிடம் விசாரித்தார். மகன் சொன்ன தகவல் களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ஓமாந்தூரார்.

என்ன அந்த அதிர்ச்சித் தகவல்கள்?

இதோ ஓமாந்தூரார் மகன் பேசுகிறான்.

"ஆசிரமத்தில் பிராமண மாணவர்கள் சூத்திர மாணவர்கள் என்று பேதம் இருக்கிறது.

நாங்கள் எல்லாம் சூத்திரப் பசங்களாம். பிராமணப் பசங்களுக்குத் தனியா சாப்பாடு போடுறாங்க. அவங்களுக்குச் சோமவாரம், சுக்கிர வாரம், கார்த்திகை - இப்படி சில நாள்களில் வடை பாயசத்தோடு சாப்பாடு. எங்களுக்கெல்லாம் எப்பொழுதும் ஒரே மாதிரி சோறும்' சாம்பாரும்தான்.

"ஒரு நாள் தண்ணீர் தாகமெடுத்தது - வழியில் இருந்த பானையில் மொண்டு குடித்தேன். அது பிராமணப் பசங்கப் பானையாம். நான் தொட்டதும் தீட்டாகிப் போச்சாம். அந்த வழியாக வந்த பிரம்மச்சாரி வாத்தியார், பாதி தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே என் கன்னத்தில் ஓங்கி அடித்தார். 'சூத்திரப் பய உனக்கு என்ன கொழுப்பு?' என்று பொரிந்து தள்ளினார். தீட்டுன்னா, என்ன நயினா?" "பிராமணப் பசங்கன்னா ஒசத்தியா நயினா?" எங்களோட தோட்ட வேலைக்கெல்லாம் அவங்க வர்றதில்லை - சமையல் வேலையில் மட்டும்தான் சேர்ந்துக்குவாங்க. அதிலேயும் பாத்திரம் கழுவுறது மட்டும் எங்கள் வேலை. ஒரு நாள் நானும் சமையல் கத்துக்கிடட்டுமா என்று கேட்டேன். சூத்திரப் பசங்க சமைச்சா பிராமணப் பசங்க சாப்பிட மாட்டாங்களாம். அந்த சமையல் அய்யர் என்னை முறைத்துப் பார்த்தார் இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை நைனா"

"அடிபட்ட அன்னைக்கே வீட்டுக்கு வந்து விடத் துடித்தேன். ரயிலுக்குப் பணமில்லே. அதனாலே பொறுத்துக் கொண்டேன்" என்றான்.

மகன் சொன்ன தகவல்களைக் கேட்டுக் குமுறினார் கண்கள் சிவந்தன.

என்ன செய்தார்? "உடனே ஈரோட்டுக்குப் போ. குருகுலத்தில் நடக்கும் இந்த அட்டூழியங்களை ராமசாமி நாயக்கர் நயினாவிடம் சொல்லு" என்றார்.

அவ்வாறே சென்றான் - சொன்னான். அவ்வளவுதான் பூகம்பம் வெடித்தது. எரிமலைக் குழம்பு கக்க ஆரம்பித்தது.

இவ்வளவுக்கும் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளராக இருந்த தந்தை பெரியார் முதல் தவணையாக ரூ.5000க்குக் காசோலை கொடுத்திருந்தார்.

குருகுலத்தைக் கட்ட நிலம் வாங்க ரூபாய் மூவாயிரத்தை நன்கொடையாகக் கொடுத்தவர் சுயமரியாதை வீரர் கானாடு காத்தான் வயி.சு. சண்முகனார்.

திருச்சியிலே காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது (17.1.1925).

காரசார விவாதம்.

பார்ப்பனர் ஒருவர் கூட்டத்தில் சமாதானம் சொன்னார். "பாரதக் கலாச்சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. பாரத கலாச்சாரம் என்பது என்ன? வேதங்களிலும், சாஸ்திரங்களிலும், வருணப்பாகுபாடும், ஜாதிப் பாகுபாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. வேத முறைப்படி தானே அய்யர் நடந்துகொண்டிருக்கிறார். இதில் என்ன தவறு?" என்று கேட்டதுதான் தாமதம், சினம் கொண்டு சீறியது அந்த ஈரோட்டுச் சிங்கம்.

"ஜாதிப்பாகுபாட்டுக்கும், உயர்வு - தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால் அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்" என்றார்.

(1922 - திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தி லே«யும் இதையே தான் கூறினார் தந்தை பெரியார் என்பது நினைவிருக்கட்டும்!)

திருச்சிக் கூட்டத்தில் முடிவு என்ன தெரியுமா?

வாய்கிழிய தேசியம் பேசும் பார்ப்பனர்களான சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கே. சந்தானம், டாக்டர் டி.வி. சுவாமிநாதன் ஆகிய நான்கு பார்ப்பனர்களும் காங்கிரஸ் செயற்குழுவிலிருந்து ராஜினாமா செய்தார்கள் என்றால், இந்தப் பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்ளலாமே!

காந்தியார் வரை பிரச்சினை சென்றது. அந்த சமாதான தூதரின் தீர்வு - "சமையல்காரர் மட்டும் பிராமணர்களாக இருக்கட்டும்" என்பதுதான்.

அதனை டாக்டர் வரதராசலு நாயுடுவோ, தந்தை பெரியாரோ ஏற்றுக் கொள்ளவில்லை. 

குருகுலத்தில் ஜாதி பேதம் - பார்ப்பனர்களின் வருண வெறி மக்கள் மத்தியில் கடும் கோபத் தீயைப்பற்ற வைத்து விட்டது.

குருகுலத்துக்கு நன்கொடை அளித்தவர்கள் அதனைத் திருப்பிக் கேட்கத் தொடங்கினர்.

ஆட்டம் கண்டது குருகுலம். வ.வே.சு. அய்யர் ஆசிரமத்திலிருந்து விலகினார். அதற்குப் பிறகு மகாதேவ அய்யர் பொறுப்பில்  குருகுலம் சென்றது. (1926)  அவரும் நிலைக்கவில்லை. பிறகு சங்கர நாராயண அய்யர் வசம் சென்றது. அதற்குப் பின் அஸ்தமித்தது குருகுலம். 

பார்ப்பனர்கள் படித்திருந்தாலும் சரி, பஞ்சாங்கக்காரராக இருந்தாலும் சரி, உஞ்சி விருத்திகளாக இருந்தாலும் சரி - பார்ப்பனர் பார்ப்பனரே என்பது சேரன்மகாதேவி குருகுலத்தின் மூலம் அம்பலமாகிவிட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன் குருகுலம் - அதனை எதிர்த்துப் போராட்டம் என்ற வரலாற்றுச் சுவடுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

அந்த வகையில் அதே சேரன்மகாதேவியில் குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா நாளை (16.10.2023) மாலை நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சியோடு நடைபெற உள்ளது.

நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ச. இராசேந்திரன் தலைமை ஏற்க, மாவட்டக் கழக செயலாளர் மானமிகு இரா. வேல்முருகன் வரவேற்புரை வழங்க தமிழர் தலைவர்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி, 'திராவிட மாடல்' தி.மு.க. அரசின் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு, மேனாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தமிழ்நாடு சட்டப் பேரவையின் மேனாள் தலைவர் மானமிகு இரா. ஆவுடையப்பன் போன்ற பெருமக்கள் எல்லாம் பங்கேற்க வரலாற்றில் இடம் பெறும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான சேரன் மகாதேவி குருகுலம் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

சுயமரியாதை இயக்க வீரர் -தி.மு.க. அறச் செம்மல் பத்தமடை மானமிகு ந. பரமசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் இணைந்திருப்பது மேலும் சிறப்பாகும்.

கழகத் தோழர்களே குடும்பம் குடும்பமாகத் திரண்டு வாரீர்! மானம் ஒன்றே நல்வாழ்வென கொண்டு வாழும் தமிழினக் குடி மக்களே, சேரன்மகாதேவியே குலுங்கிட வாரீர்! வாரீர்!!

இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை நினைவு கூர்வீர்!

No comments:

Post a Comment