ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மகளிருக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மகளிருக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது!

அவசர அவசரமாகப்  போதிய அவகாசம்கூடத் தராமல் இரு அவைகளிலும் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா!

மகளிரின் வாக்குகளைப் பெற ஓர் உத்தியாகவும், வித்தையாகவும் பயன்படுத்தவே இச்சட்டம்!

ஏமாற்றாதீர், ஏமாறாதீர்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மகளிருக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது! அவசர அவசரமாகப்  போதிய அவகாசம்கூடத் தராமல் இரு அவைகளிலும் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா! மகளிரின் வாக்குகளைப் பெற ஓர் உத்தியாகவும், வித்தையாகவும் பயன்படுத்தவே இச்சட்டம். ஏமாற்றாதீர், ஏமாறாதீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் மிகக் குறுகிய காலத் தொடராக பா.ஜ.க. அரசு கூட்டியது சில வாரங்களுக்குமுன். அதன் நிகழ்ச்சி நிரல் என்ன (அஜெண்டா) என்பதை உறுப்பினர்களுக்குக்கூட முன்கூட்டியே தெரிவிக்காமல், ஏதோ ஒரு பெரிய அதிசயத்தை ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற கதை போல நிகழ்த்தப் போவதாக நாடே எதிர்பார்க்கும் நிலையை உருவாக்கியது!

அவசர அவசரமாகப் 

போதிய அவகாசம்கூடத் தராமல்...

பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்ட, நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் பெண்களுக்கான உரிய இட ஒதுக்கீட்டு மசோதாவை அவசர அவசரமாகப் போதிய அவகாசம் கூடத் தராமல் நிறைவேற்றியது இரு அவையிலும். ஆனால், நடைமுறைக்கு வராது உடனே!

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நடவடிக் கையை - எதிர்க்காமல், ஆதரவாக வாக்களித்து நிறை வேற்றச் செய்தனர்.

ஏன் இது பெரிய ரகசியம்போல் மசோதாவாக அவை முன் வைக்கப்பட்டிருந்தது என்றால், இந்த மசோதா சட்டமானாலும்கூட, உடனே நடைமுறைக்கு - செய லாக்கத்திற்கு வந்து, மகளிருக்கு வருகிற 2024 பொதுத் தேர்தலுக்கு சற்றும் பயன்பட முடியாத ஒரு கானல் நீர் வேட்டைபோன்ற நிலையில், தங்களது கட்சி பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற, மகளிரின் வாக்குகளைப் பெற ஓர் உத்தியாகவும், வித்தையாகவும் பயன்படுத்தவே இந்தச் சட்டம். 

அமலுக்கு வந்த பிறகும்கூட, 15 ஆண்டுகளுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்ற அம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. (15 years sunset clause  - இதில் உள்ளது).

திறக்கப்படாமல் மூடியே இருக்கும் 

இரு பெரும் இரும்புக் கதவுகள்!

மகளிருக்கு உடனடியாகப் பயன்பட முடியாதவாறும், அடுத்து மேலும் இரண்டு முக்கிய - உடனடியாகத் திறக்கப்படாமல் மூடியே இருக்கும் இரு பெரும் இரும்புக் கதவுகள் என்ன தெரியுமா?

1. மக்கள் தொகை (சென்சஸ்) பொதுக் கணக்கெடுப்பு நடத்தி முடித்த பிறகே இந்த மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரக்கூடும் - அது 2026 ஆம் ஆண்டில் ஆகலாம்.

2. அதன்பிறகு அதனடிப்படையில் தொகுதிகளை மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மீண்டும் மீள் ஆய்வுக்குட்படுத்தி (Delimitation  process), அதன் பிறகே இந்த மகளிர் இட ஒதுக்கீடு செய்யப்பட முடியும் - 2036 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தாலும் நீதிமன்ற வழக்கு வாய்ப்புக் குறுக்கீடுகளையும் தாண்டியாக வேண்டும்.

தற்போது மக்களவையில் 550 இடங்களில் 82 மகளிர் (15% மட்டுமே) உள்ளனர்!

மாநிலங்களவையில் 31 பெண்களே (12% மட்டுமே) உள்ளனர்.

இதுவரை 33% எப்போதும் இருந்தது இல்லை. எனவே, மகளிர் இட ஒதுக்கீடு அவசியம்.

இதற்கிடையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 81(2)ஏ கூற்றுப்படி, மக்கள்தொகை கணக் கெடுப்புக்குப் பெரும் அளவில் ஒத்ததாக தொகுதி ஒதுக்கீடுகள் அமையவேண்டும் என்ற சட்ட நிபந்தனையும் பூர்த்தி செய்யப்படவேண்டும்.

கடந்த 1993 ஆம் ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் 73, 74 ஆவது (Amendment) படி இந்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காமலேயே உடனடியாக இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் அரசியல் சட்ட வல்லுநர்களின் கருத்து.

வித்தைகளில் ஈடுபட்டு, 

மகளிரை ஏமாற்றி இருக்கமாட்டார்கள்!

‘‘மனமிருந்தால் வழியுண்டு'' ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சிக்கு, உண்மையாகவே இதில் உறுதிப்பாடு - நிலைப்பாட்டுடன் இருந்தால், இப்படி தள்ளிப் போட வித்தைகளில் ஈடுபட்டு, மகளிரை ஏமாற்றி இருக்க மாட்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மகளிருக்கு எந்த முக் கியத்துவமும் கிடையாது!  சில பெண்களை சேர்த்ததே 1930 இல்தான், பெயரளவிற்கு. மத்திய அமைப்பில் எந்தப் பங்கும் அவர்களுக்குக் கிடையாது. 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஸநாதனத்தின் சங்கீதம் - பெண்கள் வேதத்தைப் படிக்கவே உரிமையற்றவர்கள் என்ற உண்மைமூலம் புரியவேண்டும்!

புரட்டைப் புரிந்துகொள்ளுங்கள்!

ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்கள்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.10.2023


No comments:

Post a Comment