தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு விடுதலை பிறந்தநாள் மலர் - ஆவணக் களஞ்சியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு விடுதலை பிறந்தநாள் மலர் - ஆவணக் களஞ்சியம்

நேற்றைய (13.10.2023) தொடர்ச்சி....

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ‘தந்தை பெரியார் வெறும் சீர்திருத்தவாதியல்ல; அவர் புரட்சியின் வடிவம்! ஒரு துளி ரத்தம் சிந்தாமல் மக்களிடையே அமைதி யான முறையில் பெரும் புரட்சியைச் செய்து முடித்த மாபெரும் சமூகச் சிற்பி அவர்!’ என்று அய்யாவைப் பாராட்டுகிறார். மீண்டும் மனுதர்மக்கொடி ஏற்றப்படவேண்டும் என்று ஆதிக்க வாதிகள் ஆசைப்படுகிறார்கள். மக்கள் ஏமாந்து போனால் பார்ப்பனியம் மீண்டும் அரியணை ஏறிவிடும். அதனால் தந்தை பெரியார் என்றும் தேவைப்படுகிறார் என்கிறார் துரை.சந்திர சேகரன் அவர்கள். மேலும் தமது கட்டுரையில் துரை.சந்திர சேகரன் பல்வேறு மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார். அவை ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

மேனாள் துணைவேந்தர் பெ.ஜெகதீசன் அவர்கள், ‘சுயமரியாதை இயக்கம் - ஸநாதனத்திற்கு எதிரான வரலாற்றுக் கட்டாயம்’ எனும் தமது கட்டுரையில், ‘எங்கிருந்தாலும் பெரியார் சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே இருந்தார்’ என்பதைச் சான்றுகளோடு நிறுவியுள்ளார். ‘இந்திய தேசிய காங்கிரசில் பணியாற்றிய காலத்திலும் பெரியார் சமூகச் சீர் திருத்தப் போராளியாகவே அறியப்பட்டார். நாட்டு அரசியலோ, ஆட்சி அதிகாரமோ எந்தக் காலத்திலும் அவரைக் கவர்ந்த தில்லை. எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர் கள் உண்டோ அங்கெல்லாம் அவர் சென்றார், அவர்களுடன் உண்டார், அவர்களுடன் தங்கினார், அவர்களுடன் உரையாடி னார். அவர் ஒரு தந்தையாக இருந்தே வழி நடத்தினார்’ என்கிறார் பேராசிரியர். மேலும் பல்வேறு வரலாற்றுத் தரவு களைத் துணைவேந்தர் அளித்திருப்பது ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் (சிறிவி) மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தீட்டியுள்ள ‘பெரியார் என்னும் பெருமருந்து’ எனும் கட்டுரையில் அவர், “அறிவியல் சாதனையான சந்திரயான் நிலவில் ஆய்வை மேற்கொண்டுள்ள நிலையில் ஜாதிவெறி வேகமெடுத்துள்ளதும், மதவெறிச் சக்திகள் வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதும் இயற்கைக்கு விரோதமானதாகும். இச்சக்திகளை அரசியல், கருத்தியல் களத்தில் வீழ்த்திட, பெரியாரின் சிந்தனைகள் பேராயுதமாகத் திகழும் என்பதில் அய்யமில்லை’ என்று குறிப் பிட்டுள்ளார். மேலும் சமூகநீதிப் போர்க்களத்தில் சலிப்பின்றிக் களமாடியவர் தந்தை பெரியார் என்றும், அவர் தன்னுடைய சிந்தனையிலும், செயல்பாட்டிலும் அறிவை முன்வைத்தவர் என்றும், அறிவு தான் மனித வாழ்வை உயர்த்தும் என்றும் பெரியார் முழங்கினார் என்பதைத் தோழர் கே.பாலகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் தந்தை பெரியா ரின் மதிநுட்பத்தையும் துணிவையும் எடுத்துக்காட்டுகிறார். “உலகமே போற்றும் ஒரு கருத்தை மறுத்து அதற்கு எதிர்க்கருத்தைக் கூறப் பெரியார் ஒரு போதும் தயங்கியதில்லை. அதே நேரத்தில் தான் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தற்கு உரிய விளக்கத்தை அறிவியல் பூர்வமாகவும் அதைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையோடும் பொறுமையாகவும் பொறுப்புணர்வுட னும் எடுத்துரைத்தார்’ என்று வழக்குரைஞர் அருள்மொழி வரைந்திருப்பது மிகவும் அருமைப்பாடுடையதாகும். ‘இந்திய விடுதலை’ என்பதைப் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துக்கள் ஆயிரக்கணக்கான ஆரியர்களையும் அடிவருடிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின என்பது உண்மை. அந்த உண்மை இப்போதும் பலரைத் திகைப்புள்ளாக்கி வருகிறது. ‘வாளால் அறுத்துச் சுடினும் நல்ல மருத்துவர் பால் காதல் கொள்ளும் நோயாளியைப் போலத் தமிழ்நாட்டு மக்களும், தந்தை பெரியாரின் அன்பினால் கட்டுண்டு அவர் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். இன்றும் இனியும் இந்நிலை தொடரும் என்பதை தந்தை பெரியாரின் மதிநுட்பம் மக்களின் நன்மையை நினைத்தே செயல்பட்டது என்பதற்கான சான்றாகும்’ என்று வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் தந்தை பெரியாரின் மதிநுட்பத்தையும், துணிவையும் எடுத்துக்காட்டிச் சிறப்பான முறையில் விளக்கியுள்ளார்.

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அறிய வேண்டிய அரிய தகவல்கள் சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளார். சங்பரிவார் திட்டங் களை பா.ஜ.க. நிறைவேற்ற வேண்டும் என்று அக்கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். நிபந்தனை விதித்துள்ளது; பா.ஜ.கட்சியில் பங்காரு லட்சுமணன், டாக்டர் கிருபாநிதி போன்றோர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக பா.ஜ.கட்சி அவர்களை நடத்திய முறை; பா.ஜ.க. வெற்றி பெற்றதிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடிமக்களையும் முஸ்லீம்களையும் குறிவைத்து நிறைவேற்றிய வன்முறைச் செயல்கள், முகலாயத் தளபதி அப்சல்கானைச் சந்திக்கப் புறப்பட்ட சிவாஜியின் கைகளில் இரும்பு மோதிரங்களை அணிவித்து விட்ட ஒற்றர் படைத் தளபதி ஒரு முஸ்லீம்! சிவாஜியின் 18 மெய்க்காப்பாளர்களில் 12 பேர் முஸ்லீம்கள்! ராணுவத்தளபதிகளில் 10 பேர் முஸ்லீம்கள்! அப்சல்கானின் உதவியாளர்கள் உயர்ஜாதி இந்துக்கள்! இத்தகைய அரிய தகவல்களைக் கவிஞர் தொகுத்தளித்துள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேருமாறு காஞ்சி சங்கராச்சாரி பகிரங்கமாக அழைப்பு விடுத்த செய்தியையும் கவிஞர் எடுத்துக்காட்டியுள்ளார்.

வரலாற்றைப் பதிவுசெய்யும் வண்ணப்படங்கள்:

மலரில் இடம் பெற்றுள்ள வண்ணப்படம் ஒவ்வொன்றும் வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது. தளபதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தமிழ் இனத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் தொண்டாற்றுகின்ற சான்றோர் களுக்குத் “தகைசால் தமிழர் விருது” வழங்கும் சீரிய திட்டத் தைத் தொடங்கி வைத்தார். அந்த வகையில் இதுவரை மூன்று சான்றோர்களுக்குத் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டு உள்ளது. பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் சங்கரையா, நல்லகண்ணு ஆகியோர்க்கு ஏற்கெனவே இந்த விருது வழங்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப் பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழர் தலை வருக்கு விருதினை வழங்கி மகிழும் படம் நம் கருத்தைக் கவர்கின்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்குத் தமிழ் நாடு அரசு வழங்கும் தந்தை பெரியார் விருது இந்த ஆண்டு (2023) வழங்கப்பட்டது. இது 2022-ஆம் ஆண்டிற்கான விருதாகும். தமிழ்நாட்டில் சமூகநீதிக் குப் பாடுபடுகிறவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கவிஞர் கலி பூங்குன்றன் சமூக நீதிப் போர்க்களத்தில் முன்னணிப் போரா ளியாக நின்று களமாடி வருகின்றார். அவருக்கு மாண்புமிகு முதலமைச்சர் பெரியார் விருது வழங்கிச் சிறப்பிக்கும் படம் மலரை அழகு செய்கிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்திக் குழந்தைகளுக்கு உணவூட்டி மகிழும் படம் நம்மை மகிழ்விக்கிறது. இந்த உணவுத் திட்டத்திற்கு 1920-இல் இருந்து ஒரு நெடிய வரலாறு இருக்கிறது என்பதை நாமறிவோம்.

கேரள மாநிலம் வைக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ‘வைக்கம் போராட்டம்’ (பழ அதியமான் எழுதியது) என்றும் தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பைத் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட, கேரள முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். வைக்கம் போராட்ட வரலாறு வீர வரலாறு! தந்தை பெரியார் அந்த வீரவரலாற்றின் தலைவர், வைக்கம் நிகழ்வைக் குறிக்கும் அழகிய படம் மலரில் இடம் பெற்றுள்ளது. இதைப் போலவே பெரியார் நூற்றாண்டு விழாவின் போது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் கேரள வருவாய்த் துறை அமைச்சர் ஜேக்கப் அவர்களும் வைக்கத்தில் கலந்து கொண்ட படமும் மலரில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

டாக்டர் அமர்நாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்க ளின் படங்கள் நம்மை 3000 ஆண்டுகளுக்கு முன்னோக்கி அழைத்துச் செல்கின்றன. கீழடி நாகரிகமும், சிந்துவெளி நாகரி கமும், திராவிட நாகரிகமே என்பது இப்போது நிறுவப்பட்ட உண்மையாகிவிட்டது. ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் திராவிட மக்களே வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் டாக்டர் அம்பேத்கர் கூறும் அருமைப்பாடுமிக்க ஆய்வுரையைக் கீழடியும் சிந்துவெளியும் மெய்ப்பித்துக் காட்டியுள்ளன. புகழ்மிக்க வரலாற்றைப் புலப்படுத்தும் படங்கள் அவை! 

உலக இதழியல் வரலாற்றில் ஒரு நாளேட்டின் ஆசிரியராகத் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேல் தொண்டாற்றிவரும் நம் அன்புக்குரிய ஆசிரியர் அவர்களைப் பாராட்டித் தலைவர்கள் புடைசூழ ஆசிரியர் நிற்கும் படம் விடுதலை மலரை அழகு செய்கிறது.

ஆந்திராவில் சமூகநீதிப் புரட்சியாளர் பி.பி.மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழாவில் சமூகநீதிச் சிந்தனையா ளர்களுடன் தமிழர் தலைவர் நிற்கும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஏனெனில் சமூகநீதிப் போராளியான பி.பி.மண்டல் அவர்களுக்கு ஒரு தனி வரலாறுண்டு. மேலும் அவருடைய சிலை திறப்பு விழாவில் சமூகநீதிச் சிந்தனையா ளர்கள் ஒன்று கூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! 

அகவை 90! இதில் 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கை! இத்த கைய சிறப்புமிக்க தலைவர் ஆசிரியருக்குப் பாராட்டுவிழா! 

1957-ஆம் ஆண்டு சிதம்பரம் வட்டம் நெடுஞ்சேரி என்னும் ஊரில் தோழர்களோடு தந்தை பெரியார் கைத்தடி யோடு கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சி! அய்யாவின் அரு கில் அன்னை மணியம்மையார்! இத்தகைய அரிய ஒளிப் படத்தை வழங்கிய பேரா.பூ.சி.இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.

இவ்வாறாகப் படங்கள் உணர்த்தும் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, அய்யாவின் பிறந்தநாள் மலரில்! படங் களை மிக நேர்த்தியான முறையில் எடுத்துக் கொடுத்த ஒளிப் படக் கலைஞர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 

பெட்டிச் செய்திகளுக்குள் 

கருத்துப் பேழைகள்! 

பெரியாரின் 145-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில் ஏராளமான பெட்டிச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவை யாவும் கருத்துப் பேழைகள்! சிலவற்றை மட்டும் இங்கே எடுத்துக்காட்டுகிறோம்.

அறிஞர் அண்ணா தந்தை பெரியாரைப் பற்றி எழுதுகிறார்: “பெரியார் பேசினார், விடுதலை வீரர்களின் மொழியிலே! விலை கொடுப்பேன் உரிமைக்காக! என்றார். ஒரு சட்டத்தை; கொடு தண்டனை; முடி இந்நாடகத்தை; என்று முழக்கமிட்டார். வயது என்ன? அறுபதாம் கல்யாணப்பருவம்! பேச்சிலோ தீ! போக்கோ முறுக்கேறின படைத் தலைவருடையது. ஏன்? தமிழர்கள் அவர் பக்கம் நின்றனர்!” 

பெரியாரின் பின்னால் தமிழர்கள் ஏன் அணிவகுத்து நின்றார்கள்? அதற்கு அண்ணா விடையளிக்கிறார்: “சட்ட சபைக்கு அழைத்துச் செல்லமாட்டார்: பட்டம் வாங்கித் தரமாட்டார்; பதவியில் நம்மை உட்கார வைக்கமாட்டார்: பணம் காசு தரமாட்டார்; ஒரு பாராட்டுரை கூட வழங்கமாட்டார் என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்திருந்தும் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அவருக்குத் துணை நிற்பது வேறு எங்கும் காணமுடியாத அற்புதம்! பெரியாரின் பெரும் வெற்றி அது! வாலிபர்களைத் தன் பக்கம் இழுத்துவிடும் ஒரு வகை ‘அபின்’ இருக்கிறது. அந்தக் குறுகுறுப்பான பார்வையிலே, கொச்சை மொழியிலே, இந்த அபின் இருக்கிறது. எத்தனையோ வாலி பர்களை வாழ்க்கைப் பூந்தோட்டத்திலிருந்து போர்க்களத்துக்கு இழுத்து வந்துவிட்டது!” 

தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் எத்தனை நாள் பங்கெடுத்துக் கொண்டார் என்பதைப் பழ.அதியமான பதிவு செய்கிறார்:” வைக்கம் போராட்டம் தொடர்பாகப் பெரியார் ஏழுமுறை பயணமாகி இருக்கிறார். போராட்டக்களத்தில் 67 நாட்களும், இரண்டு முறை சிறை சென்றதில் 74 நாட்களும் ஆக 141 நாட்கள் வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கெடுத்திருக்கிறார்.”

ஆய்வாளர்கள் இவ்வாறு துல்லியமாகக் கணக்கெடுத்துக் கூறும்போது இங்குள்ள பார்ப்பனர்களும் சில அடிவருடிகளும் பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்று பொய்யுரைத்து வருகின்ற போக்கைக் காண்கிறோம்.

ஒன்றிய அரசின் மேனாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் துணைப் பிரதமராக இருந்தவரும் ஆகிய பாபு ஜெகஜீவன்ராம் பெரியாரைப் பற்றிக் கூறுகிறார்:- 

“இந்த இந்தியத் துணை கண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக் காகவும், ஜாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் இந்த 20-ஆம் நூற்றாண்டிலேயே பெரியார் (ஈ.வெ.ரா) ஒருவர் தான் இருக்கிறார். ஆகவே ஜாதி ஒழிப்பில் ஆர்வம் மிக்க அனை வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன் வாய்ப்பு நேரும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி செய்தல் நலம்”

கழகத் தோழர்களுக்குக் கலைஞர் இட்ட கட்டளை வருமாறு: “பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால் அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால் அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண்மையிலே மனதிலே பதிய வைத்துக் கொண்டிருந்தால் அவன் நாத்திகவாதியாக இருந்தாலும் அவன் பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் இரட்டை மனி தனாக இருக்கக்கூடாது. இது தான் என்னுடைய கழகத் தோழர்களுக்கு நான் இடுகின்ற கட்டளையாகும்”

உ.பி.மாநிலம் லக்னோவில் “பெரியார் மேளா” நடத்திய கன்சிராமிடம் செய்தியாளர்கள், “பெரியார் மேளாவை ஏன் நடத்துகிறீர்கள்? என்று கேட்டதற்குக் கன்சிராம் இவ்வாறு பதிலளித்தார்: ‘நாராயணகுரு. மகாத்மா பூலே, சாகுமகராஜ் அம்பேத்கர், பெரியார் ஆகியோர் பார்ப்பனர் எதிர்ப்பை முன்னெடுத்துச் சென்றனர். ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் தந்தை பெரியார் அவர்களால் பாதிக்கப்பட்ட அளவுக்கு மற்றவர்களால் பாதிப்புக்கு ஆளாகவில்லை”.

இவ்வாறு மலரில் ஏராளமான பெட்டிச் செய்திகளை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு செய்தியிலும் வரலாறு புதைந்து கிடக் கிறது. பெட்டிச் செய்திகளை மட்டும் தனியாக எடுத்து அவற்றை ஆய்வு செய்தால் அது ஒரு தனி நூலாக விரிவடையும்.

கவிதைகள்

பெரியார் பிறந்தநாள் மலர் என்றால் புரட்சிக் கவிஞரின் கவிதை இல்லாமல் இருக்குமா? பெரியாரிடத்தில் பிழை செய்வோரைக் கடுமையாக எச்சரிக்கின்றார் புரட்சிக் கவிஞர்.ஏனெனில் பெரியார் செய்த பெரும் பணி தமிழ்நாட்டை வாழவைத்துக் கொண்டுள்ளது.

“சாக வேண்டிய தமிழர் சாகிலர்

 வீழ வேண்டிய தமிழர் வீழ்கிலர்

 வறள வேண்டிய தமிழகம் வறண்டிலது

 காரணம் பெரியார் கண்காணிப்பே”

என்கிறார் புரட்சிக்கவிஞர். மேலும் நிறவேற்றுமை கூறித் தமிழரை கொல்வோர் குதிகால் நரம்பினை வெட்டுதல் நல்ல தொண்டென்று புரட்சிக் கவிஞர் பாடுகிறார்.

அன்னை மணியம்மையாரின் 24-ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழர் தலைவர் எழுதிய கவிதை மலரை அணி செய்கிறது.

“எந்தப் பெண்ணும் தனது இளமையை

 இன்ப வாழ்விற்கான வாய்ப்பு என்று கருதியே

 வாழ்க்கை அமைத்து வாழ்வார்.

 ஆனால் நீங்களோ அம்மம்ம....

 இளமையை இயக்கத்திற்காக என்னரும்

 சமூகத்திற்காக இழந்து உயர்ந்தீர்கள்”

என்னும் வரிகள் மணியம்மையாரின் தியாக வாழ்வை எடுத்துக்காட்டுகின்றன. மேலும் ‘அய்யாவைக் காத்த அரண்’ என்றும், ‘பொன்னகை அறியாத புன்னகைத் தோட்டம்’ என்றும் “ஆதரவற்ற குழந்தைகளை ஆளாக்கிய தாய்” என்றும் அய்யாவின் “செவிலித்தாய்” என்றும் ‘எமக்குப் பெற்ற தாய் அல்ல, எங்களுக்கு நீங்கள் உற்ற தாய்’ என்றும் ஆசிரியர் பயன்படுத்தியுள்ள தொடர்கள் என்றும் மறக்கமுடியாதவை! அன்னை மணியம்மையாருக்குச் சூட்டிய புகழ்மாலைகள் அவை! ஆசிரியர் நெஞ்சம் கவித்துவம் நிறைந்த நெஞ்சம் என்பதை இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது.

‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற ஆசிரியரைக் கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்த்திப் பாடிய கவிதையில் ‘வாழ்வை மீறிய சாதனை, வயதை மீறிய இளமை, திராவிட இயக்க உயிர் நூலகம், தகைசால் தமிழர் “ஆசிரியர் வீரமணி” என்று சீரிய முறையில் ஆசிரியரை வாழ்த்துகிறார்.

ஒருபக்கச் செய்திகள்

தந்தை பெரியார் 145-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரின் ஒவ்வொரு பக்கமும் முகாமையான பல செய்திகளை உள்ளடக்கியுள்ளது. அதே நேரத்தில் ஒரு பக்கச் செய்திகளாகப் பல கருத்துக்களைக் கொண்ட பக்கங்களை நாம் பார்க்கலாம். தந்தை பெரியாரின் ஓய்வறியாப் பரப்புரையைக் கண்டு அஞ்சிய சங்கராச்சாரியாரைப் பற்றி அக்னிகோத்திரம் தாத்தாச் சாரியார் பதிவிட்டுள்ள செய்தி:

சங்க இலக்கியங்கள் முதல் பாரதியார் கவிதை வரை ‘ஸநாதனம்’ என்ற சொல்லை எந்த இடத்திலும் காணமுடிய வில்லை என்னும் சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பால கிருஷ்ணன் அவர்களின் கருத்து;

“இன்றைக்குத் தமிழ் நாட்டில் அமைந்துள்ள ‘திராவிட மாடல் ஆட்சியை எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும், எந்தச் சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழி நின்று நான் நடத்திச் செல்வேன்’ என்று மாண்புமிகு முதலமைச்சர் தமிழர் தலைவருக்கு அளித்திட்ட உறுதிமொழி ஒரு பக்கம்! 

“நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும்” என்று முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். விடுத்த எச்சரிக்கை:

சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று தரவுகளின் அடிப்படையில் உண்மையை எடுத்துரைக்கும் ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் அவர்களின் கருத்து, 

‘திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவப் பரி சோதனை அவசியம்’ என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை வர வேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை,

ஆரியர் - திராவிடர் பற்றிக் கூறும்போது அறிஞர் அண்ணா, ‘திருக்குறள் முதலான தனித்தமிழ் நூல்களைக் கூட சமஸ்கிருதத்தின் மொழிபெயர்ப்புத் தான் என்று கூறி ஆரியர் இகழ்ந்து பேசுவதைத்தான் நாம் கேட்கிறோம்’ என்று எடுத்துக்காட்டும் ஒப்பியல் கருத்து.

கருவறையைக் கர்ப்பக்கிரகம் என்றும், தண்ணீரைத் தீர்த்தமென்றும், அன்பளிப்பை தட்சணையென்றும் வணக்கம் என்பதை நமஸ்காரம் என்றும் தீயை அக்கினி என்றும், காற்றை வாயு என்றும் வான்வெளியை ஆகாயம் என்றும் அழகு என்பதை சுந்தரம் என்றும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களைச் சமஸ்கிருத மயமாக்கியதற்கு எடுத்துக்காட்டு ஒரு பக்கம், இவ்வாறு ஏராளமான ஒரு பக்கச் செய்திகள் மலரில் அடங்கி உள்ளன. சிலவற்றை மட்டுமே இங்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.

கடந்த பெரியாராண்டில் கழகத்தின் நாட்குறிப்பு

ஓர் இயக்கம் ஓராண்டில் தான் நடத்தும் நிகழ்ச்சிகளை நிரல்படத் தேதிவாரியாகக் குறித்து வைத்தால் வருங்காலத்தில் அந்த இயக்கத்தின் வரலாற்றை எழுதுவோருக்கு அது பேருதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. கடந்த பெரியாராண்டில் அதாவது 2022-செப்டம்பர் முதல் 2023-ஆகஸ்ட் வரை திராவிடர் கழகம் 90-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி யிருக்கிறது. ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைக்கும் வழக்கத்தைத் திராவிடர் கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆசிரியர் விடுத்தஅறிக்கைகள்

மானிட சமுதாயம் பாதிக்கப்படும்போது மனிதநேயம் கொண்ட தலைவர்கள் அமைதியாக இருப்பதில்லை. உடனடி யாகத் தங்கள் கருத்துகளை வெளிப் படுத்துவார்கள். அவ் வாறு உலக மக்கள் குறிப்பாக உலகத் தமிழ் மக்கள் துன்புறும் போது அல்லது வேறு ஏதேனும் இடையூறு ஏற்படுமோ என்று அவர்கள் அச்சம் கொள்ளும்போது தலைவர்களின் அறிக் கைகள் வெளிவரும்.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள தலைவர்கள் பலரும், ‘இந்தச் சிக்கலைப் பற்றித் திராவிடர் கழகத் தலைவர் என்ன கருதுகிறார் என்பதை அறிந்து கொண்ட பிறகே தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆசிரியரின் அறிக்கை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இங்கு எல்லோருக்கும் இருக்கிறது. அந்த வகையில் கடந்த பெரியார் ஆண்டில் ஆசிரியர் விடுத்த அறிக்கைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 300 ஆகும். இவ் அறிக்கைகளைக் கால வரிசைப்படி நிரல்பட அடுக்கி வைத் திருக்கும் நம் தோழர்களை மனந்திறந்து பாராட்டுவோம். மனித நேயத்தின் மணிமகுடமாக விளங்கும் திராவிடர் கழகத்தோழர் களின் தொண்டறத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

திராவிடர் கழகத் தலைவரின் 

ஓய்வறியாச் சுற்றுப்பயணம்

அகவை 90 ஆனாலும் தனது சுற்றுப்பயணத்தை ஓய்வறியாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். உலகில் எந்தத் தலைவரும் இந்த வயதில் இப்படிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக வரலாறு இல்லை. கடந்த பெரியாராண்டில் மட்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் சுற்றுப்பயணம் செய்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 305 ஆகும். இத்தகைய நிகழ்ச்சிகளின் நெருக்கடிக்கு இடையில் படிப்பது, இதழ்களுக்கு கட்டுரை எழுதுவது, கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைகளை மேற்பார்வை செய்தல், இயக்கப் பணிகளைக் கவனித்துத் தோழர்களை ஊக்கப்படுத்துதல், என்று ஆசிரியர் நாள்தோறும் மேற்கொள்ளும் பணிகளை நினைத்துப் பார்க்கும்போது நமக்கு மெய்சிலிர்க்கிறது! தனது உடல்நலத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் முந்நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள நிகழ்வுகளைப் பெரியார் பிறந்தநாள் மலர் பதிவு செய்திருக்கிறது.

இவ்வளவு சிறப்புக்குரிய விடுதலை - தந்தை பெரியார் 145-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாகவும், கலைப்பெட்டகமாகவும் திகழ்கிறது. மலரை அழகிய முறையில் வடிவமைத்த கலைஞர்களுக்கும், ஒளிப்பட வல்லுநர்களுக்கும், செம்மையான முறையில் அச்சிட்டளித்த அச்சகத்தோழர்களுக்கும் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்க ளுக்கு, மலரை உருவாக்குவதில் துணைநின்ற தோழர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியும் பெரியார் பிறந்தநாள் வாழ்த்துக் களும் உரியனவாகும்.

No comments:

Post a Comment