மாற்றுப் பரிகாரம் தேடுவது தமிழ்நாடு அரசின்- முதலமைச்சரின் இன்றியமையாக் கடமையாகும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

மாற்றுப் பரிகாரம் தேடுவது தமிழ்நாடு அரசின்- முதலமைச்சரின் இன்றியமையாக் கடமையாகும்!

 *  நீண்ட காலமாக சிறையில் வாழும் 49 பேர் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்வதற்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடலாமா?

* அரசின் முடிவை அரசின் ஊதியம் பெறும் ஆளுநர் தடுக்கலாமா?

நீண்ட காலம் சிறையில் இருக்கும், நோய்வாய்ப்பட்டு நலிந்திருக்கும் கைதிகளை விடுதலை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆணை பிறப்பித்தும், அரசு ஊதியம் பெறும் ஒரு ஆளுநர் தடுத்து நிறுத்தலாமா? அதற்கு மாற்றுப் பரிகாரத்தை முதலமைச்சர் தேடுவது இன்றியமையாததாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்த குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கான தமிழ்நாடு அரசின் கோப்புகள் ஆளுநர் ஆர்.என்.இரவியிடம் அனுப்பப்பட்டது.

அண்ணா நடந்து காட்டிய மனிதநேய 

முன் உதாரணம்!

அறிஞர் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்வது திராவிடர் ஆட்சியில் வழமை. காரணம், தூக்குத்தண்டனை பெற்ற கோவா கைதிக்காகவே, முதலமைச்சராக இருந்த அண்ணா மனிதநேயத்துடன், ரோமாபுரிக்குச் சென்று கத்தோலிக்க கிறித்துவ தலைவர் மதகுரு போப்பாண்டவரை நேரில் சந்தித்து, அவரது விடுதலைக்காக போர்ச்சுக்கீசிய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டி கேட்டுக்கொண்டவர் அண்ணா!

போப் அவர்களும் கருணை உள்ளத்தோடு பரிந்துரை செய்தார். போர்த்துக்கீசிய அரசும் விடுதலை செய்தது. அந்தக் கைதி விடுதலையானதும், அறிஞர் அண்ணாவை சந்தித்து நன்றி சொல்ல வந்தார். அண் ணாவின் நினைவிடம் சென்று வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, நன்றி கூறினார். (அவரது தன் வரலாறு நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்).

அந்தப்படி இல்லாது 49 கைதிகளின் விடுதலையை தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பது - கருணையற்ற கொடுஞ்செயல் ஆகும்!

பூணூல் போடும் புரோகிதப் பணிதான் ஆளுநருடையதா?

தற்போதைய குற்றவியல் சட்டத்தின் பார்வை, முந்தைய காலம் போல் - அடிக்கு அடி, பல்லுக்குப் பல், கைக்குக் கை, தலைக்குத் தலை என்ற தத்துவம் கொண்டது அல்ல. மாறாக, குற்றவாளிகள் திருந்தி, புது வாழ்வு பெறவேண்டும் என்பதுதான்!

தமிழ்நாடு அரசின் முடிவிற்கு இவர் என்ன மறுப்புக் கூறுவார்? நீண்ட காலம் இருந்த தண்டனை போதாதா?

தமிழ்நாட்டு ஆளுநர் செயலுக்கு மறுப்புத் தெரி வித்து, (கிடப்பில் போட்ட கொடுமை) ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு நீண்ட காலம் சிறையி லிருந்தவர்களை உச்சநீதிமன்றம்,  விடுதலை செய்த பிறகும்கூட, அவரால் புத்திக் கொள்முதல் செய்து கொள்ள முடியாதா? என்று தமிழ்நாட்டு மக்கள் கொதிப்புடன் கேட்கின்றனர்!

அவருடைய கடமையை முறையாக செய்யாமல், பூணூல் போடும் புரோகிதப் பணியை - தமிழ்நாடு அரசின் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு போட்டி அரசினை அனுதினமும் நடத்தி அடாவடித்தனம் செய்கிறார்.

சட்ட அமைச்சர் ரகுபதியின் பேட்டி

இந்தக் கொடுமையை, மற்றொரு அரசியல் வக்கிரம மான ஒன்றை - தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் நேற்று (17.10.2023) செய்தியாளர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார்!

‘‘அந்த 49 பேருக்கான விடுதலை குறித்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடமாட்டார் (முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யவிட மாட்டார்) என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் சொல்லுகிறாரே என்று செய்தி யாளர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள்; அப்படியானால், அதன் அர்த்தம் என்ன? அண்ணாமலை சொன்னால் தான் ஆளுநர் செய்வார் என்றால், அண்ணாமலைதான் ஆளுநர் என்றுதானே ஆகிறது?'' என்று கூறினார்.

ஆளுநர் பச்சையாகவே தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று அடையாளம் காட்டி, நாளும் தமிழ்நாட்டு அரசின் முடிவுகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்து, அரசமைப்புச் சட்டப்படி அவரது கடமையை அவர் செய்யத் தவறுகிறார்; அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த பதவி பிரமாணத்திற்கு எதிராகவே நடந்து, அந்த பெரும் பொறுப்பிற்குத் தனக்கு தகுதியில்லை என்பதாக சொல்லாமல் சொல்கிறார்.

வெறுப்பு அரசியலை ஆளுநரே செய்யலாமா?

அரசு ஊதியம் பெறும் ஆளுநர் 

மாநில அரசின் முடிவை தடுப்பதா?

‘‘அவர்கள் தீவிரவாதிகள் - முஸ்லிம்கள்'' என்பது ஆளுநர் மற்றும் அண்ணாமலையின் பதில்கள்! ஆனால், மாலேகான் குண்டுவெடிப்பு சதி வழக்கில் பிணை பெற்ற தீவிரவாதி, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று, அவைக்குள்ளே கோட்சே புகழ் பாடி வருகிறாரே! இதைவிடவா - மோசமான உடல்நிலையில் உள்ள இவர்களின் விடுதலை - பொது அமைதிக்கும், பொது ஒழுக்கத்திற்கும் கேடு செய்துவிடப் போகிறது?

மனிதநேயத்தின் உச்சம் Empathy -ஒத்தறிவு - அதை தமிழ்நாடு அரசு பயன்படுத்திடுவதை ஆளுநர் என்ற அரசு ஊதியம் பெறும் ஊழியர் தடுத்து நிறுத்துவது கண்டனத்திற்குரியது; கருணையிலாச் செயல்; அரசமைப்புச் சட்ட விரோதமும் ஆகும். இதற்குரிய மாற்றுப் பரிகாரம் தேடிடுவது தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் அவர்களது இன்றியமையாக் கடமையாகும்.

மதவெறி மடியட்டும்! மனிதநேயம் மலரட்டும்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.10.2023


No comments:

Post a Comment