பெற்றோரை பராமரிக்கவில்லையா? செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

பெற்றோரை பராமரிக்கவில்லையா? செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து

சென்னை, செப்.10  'பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை, செட்டில்மென்ட் பத்திரத்தில் வெளிப்படையாக இடம் பெறவில்லை என்றாலும், ஆவணத்தை ரத்து செய்யக் கோரி, அதை நிபந்தனையாக கருதலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் பேகம்; தன் பெயரில் உள்ள சொத்தை, மூத்த மகன் முகமது தயானுக்கு எழுதி வைத்தார். பெற்றோரை கவனிப்பதாக, அவரும் உத்தரவாதம் அளித்திருந்தார்.  அதனால், மகன் பெயரில் செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. பின், 'என்னையும், கணவரையும் பராமரிக்கவில்லை; அடிப்படை தேவைகளை, மருத்துவ சிகிச்சையை மகன் வழங்கவில்லை' என, பேகம் புகார் அளித்தார்.பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டப்படி, செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய, வருவாய் கோட்ட அதிகாரியிடம் பேகம் முறையிட்டார். விசாரணைக்கு பின், செட்டில்மென்ட் பத்திரத்தை அதிகாரி ரத்து செய்தார். அதை எதிர்த்து, மகன் மேல்முறையீடு செய்தார்; மாவட்ட ஆட்சியர் அதை நிராகரித்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன் றத்தில் முகமது தயான் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'காலியிடத்தை விலைக்கு வாங்கி, சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்டினேன். எந்த நிபந்தனையும் இன்றி, என் தாய், செட்டில்மென்ட் எழுதி கொடுத்தார். சகோதரியின் தூண்டு தலில், இந்த புகாரை கொடுத் துள்ளார். 'பெற்றோரை, நான் பராமரித்துள்ளேன். செட்டில் மென்டில் எந்த நிபந்தனையும் விதிக்காத போது, அதை ரத்து செய்வது, சட்டத்தை மீறுவது போலாகும். எனவே, செட்டில் மென்ட் பத்திரத்தை ரத்து செய்தது முறையற்றது' என்று கூறியுள் ளார். இம்மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ர மணியம் விசாரித்தார். அரசு தரப் பில், சிறப்பு பிளீடர் வெங்கடேஷ் குமார் ஆஜரானார். 

நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: மூத்த குடி மக்கள் பராமரிப்பு விதிகளின்படி, வயதானவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை, மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது. இயல் பான வாழ்க்கை என்பதில் பாது காப்பும், கண்ணி யமும் அடங்கி உள்ளது.  வெறும் வாழ்க்கை  என்று இல்லாமல், கண்ணியமான, பாதுகாப்பான வாழ்க்கை பற்றி தான் சட்டத்தில் கூறப்பட் டுள்ளது. உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி போன்றவை வாழ்வில் அடங்கி உள் ளன.வெறும் உணவு, இருப்பி டம் மட்டும் போதுமானது அல்ல; மருத்துவ வசதி, உணவு, இருப்பிடம், கண்ணியம் உள்ளிட்ட தேவைகள், குடும்ப தகுதிக்கு ஏற்ப இருக்க வேண்டும். உணவு, இருப் பிடம் வழங்குவதை மட்டுமே முகாந்திரமாக எடுத்து, செட்டில் மென்ட் நிலைக்கத்தக்கது என்று கூற முடியாது. இயல்பு வாழ்க் கைக்கான தேவையை, பெற்றோ ருக்கு வழங்க வேண்டிய பொறுப்பு, குழந்தைகளுக்கு உள்ளது.

மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை, எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றை, முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனக்கு அடிப்படை தேவைகளை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்படி, விருப்பக் கொடை அல்லது வேறு வழியில் சொத்தை எழுதி கொடுத்தவருக்கு, அந்த தேவைகளை வழங்க தவறும் பட்சத்தில், மோசடியாக அல்லது வற்புறுத்தலால், அந்த சொத்தை பெற்றதாக கருதி, ரத்து செய்ய முடியும்.அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை, செட்டில்மென்ட் அல்லது விருப்பக் கொடை பத்திரத்தில் வெளிப்படையாக இடம்பெற வேண்டும் என்பது அல்ல.  

மூத்த குடிமக்களை பராமரிக்க வேண்டும் என்பது புரிந்து கொள்ளத்தக்க நிபந்தனையாகும். இதில் மீறல் நடந்தால், செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய வகை செய்யும் சட்டப்பிரிவை பிரயோகிக்கலாம். மூத்த குடிமக்களை பராமரிக்க வேண்டும் என்பதற்காக, அன்பு, பாசத்தை, செட்டில்மென்ட் பத்திரத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. பத்திரம் எழுதிய பின், பராமரிப்பு வழங்க மறுத்தால், மோசடியாக, வற்புறுத்தலால் சொத்தை பெற்றதாக கருத முடியும். எனவே, நிபந்தனையை ஆவணத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியதில்லை. அன்பு, பாசத்தால்தான், மூத்த குடிமக்கள் பத்திரம் எழுதி வைக் கின்றனர்.  

பராமரிக்க வேண்டும்என, வெளிப்படையாக நிபந்தனை விதிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை நிராகரிக்க முடியாது. ஆவணத்தில் நிபந்தனை இல்லா விட்டாலும், விருப்பக் கொடை பத்திரம் அல்லது செட்டில்மென்ட் பத்திரம் எழுதுவதற்கு, அன்பு, பாசம் தான் ஈடாக கருதப்படுகிறது. இதை மீறினால், ஆவணத்தை ரத்து செய்ய, அதற்கான சட்டப் பிரிவை பிரயோகிக்க லாம்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, நிவாரணம் பெற தாய்க்கு உரிமை உள்ளது. அதிகாரியின் உத்தரவில் குறை இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment