வேலியே பயிரை மேயும் இந்தக் கொடுமை வாச்சாத்தியே கடைசியாக இருக்கவேண்டும்! மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

வேலியே பயிரை மேயும் இந்தக் கொடுமை வாச்சாத்தியே கடைசியாக இருக்கவேண்டும்! மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வோம்!

 * வாச்சாத்தியில் காவல்துறை - வனத்துறை அலுவலர்களே பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டிக்கத்தக்கது!

* அன்றைய அ.தி.மு.க. அரசு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது வருந்தத்தக்கது!  

* இழப்பீடும், நிவாரணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் குறைக்காது - எனினும் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இது தவிர்க்க இயலாது!  

* சி.பி.அய்.க்கும், நீதிபதிக்கும் நமது பாராட்டுகள்!

30 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடியின பெண்கள், காவல்துறை, வனத்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மன்னிக்கப்படவே முடியாத பெருங்குற்றமாகும். குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை வரவேற்கிறோம். வாச்சாத்தியே கடைசி நிகழ்ச்சியாக இருக்கவேண்டும்; மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப் பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (29.9.2023) தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், சுய தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதி வேல் முருகன் உத்தரவிட்டுள்ளார்.  வழக்கில் தொடர்புடைய பெண்கள் இறந்து போயிருந்தால் அவர்களது குடும்பத்திற்கு இந்த உதவிகளை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இந்த கொடூரச் சம்பவம் நடந்தபோது அப்போதைய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாச்சாத்தியில் நடந்தது என்ன?

முன்னதாகக் குற்றம் சாட்டப்பட்ட 279 பேரில் உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என, கடந்த 2011 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

என்ன நடந்தது வாச்சாத்தி கிராமத்தில்? 1992 ஆம் ஆண்டு ‘சந்தன மரக் கடத்தல்காரன்' என்று கூறப்பட்ட வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாகத் தகவல் அறிந்து, தமிழ்நாடு அரசு வனத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறை உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சுற்றி வளைத்து பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 133 பேரை கைது செய்தனர். அதில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் அடங்குவர். ஆனால், கைது செய்யப்பட்ட அப்பாவி கிராம மக்கள் சந்தன கட்டைக் கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை நடைபெற்ற நேரத்தில் வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை வனத்துறை மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்ட நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

குற்றச்சாட்டை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மறுத்தார்!

ஒரு பெண்ணாக இருந்தும்கூட இந்தக் குற்றச்சாட்டை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திட்ட வட்டமாக மறுத்தார். ஆனால், 1992 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி இந்நிகழ்வு குறித்து முறையான புகார் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு காவல்துறை இந்த புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை என வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சி.பி.அய். வழக்கை விசாரித்து 4 அய்.எஃப்.எஸ். அதிகாரிகள், வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் உள்பட 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடை பெற்று வந்தது. இந்த நிலையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால், இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 30 ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த முக்கியத்துவம் வாய்ந்த நீதியாக இது பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பின் 

முக்கிய அம்சங்கள்!

இந்த வழக்கில் பாராட்டப்படவேண்டிய நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

"பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை பணத்தி னாலோ, வேலைவாய்ப்பு வழங்குவதாலோ ஈடுகட்ட முடியாது. சந்தன மரக்கட்டைகளைத் தேட 18 பெண்களை அழைத்துச் சென்றபோது, பெண் காவலர் யாரும் அழைத்துச் செல்லப்படவில்லை.

13 வயது சிறுமி, 8 மாத கர்ப்பிணி உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கின்றனர். காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரி களின் மிரட்டல் காரணமாகவே 18 பெண்களும் தங் களுக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கூடக் கூறவில்லை.

உண்மைக் குற்றவாளிகள் 

யார் என்று தெரிந்தும்...

வாச்சாத்தி பகுதியில் சில முக்கிய நபர்கள் (‘‘மாஃபியா'') சந்தன மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட நிலையில், அப்பாவி கிராம மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு எதிராகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்டவர் களுக்கு எதிராக வனத்துறையினர் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் மாவட்ட ஆட்சியர், காவல் கண் காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் எந்த நடவடிக்கை யையும் எடுக்கவில்லை.

அன்றைய அரசு அக்கறை காட்டவில்லை

சந்தனமர கடத்தல்காரர்களைக் காப்பாற்றும் நோக்கில் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி யுள்ளனர். பழங்குடியினப் பெண்களைக் காப்பாற்ற அப் போதைய அரசு அக்கறை காட்டவில்லை. தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முயன்றது.

சி.பி.அய். தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படு கின்றன." இவ்வாறு நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்வதா?

உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு பெரிதும் வரவேற் கப்படவேண்டிய ஒன்றாகும். ‘‘வேலியே பயிரை மேய்ந்தது'' என்று சொல்லுவதுபோல, காவல்துறை யினரும், வனத்துறை  அதிகாரிகளும் பெண்களை வன் கொடுமை செய்த கொடூரம் எந்த வகையிலும் மன் னிக்கப்படவோ, சமரசம் செய்யப்படவோ முடியாத ஒன்று.

பெண்கள் என்றால் போகப் பொருள் என்று கருதும் மனித மிருகங்களுக்கு எந்த உச்சப்பட்ச தண்டனையை அளித்தாலும், அது சரியானதே! நட்ட ஈடு அளித்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் ஆக முடியாது; என்றாலும், எல்லாம் முடிந்துவிட்ட பிறகு நட்ட ஈடு வழங்குவது ஒருவகையில் நிவாரணம், ஆறுதலுக்கானது என்றே கூறவேண்டும்.

மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் முக்கியம்!

வாச்சாத்தி வன்கொடுமையே கடைசியானதாக இருக்கவேண்டும். பழங்குடி மக்கள் என்றால், கிள்ளுக் கீரை என்று கருதும் கயமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படவேண்டும்.

விசாரணையை சரிவர நடத்திய சி.பி.அய்.,க்கும், வழிகாட்டும் தீர்ப்பை வழங்கிய நீதித்துறைக்கும் நமது உளம் நிறைந்த பாராட்டுகள்!

வாச்சாத்தி நிகழ்வு குறித்த தகவல்களை நாடு முழுவதும் பரப்பி, மக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் தேவை! நம்முடைய கழகக் கூட்டங்களில் இது முக்கியமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பழங்குடி மக்கள் நம் மக்கள் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படுத்துவதே மனிதநேயம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.9.2023


No comments:

Post a Comment