பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் வழங்கப்படும்)

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (1)

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்
ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''

வைணவத்திலும் சரி... சைவத்திலும் சரி... தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது.

சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள்.

“தஸ்மாது ப்ராம்மணேன

நம்லேச்சித வை

நம அபபாஷித வை...” 

இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை. 

அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லி யிருக்கிறது என்று. 

இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்சபாஷை... அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள். எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளை தொடக்கூடாது. மிலேச்ச என்றால் ழிஷீஸீ கிக்ஷீஹ்ணீஸீ என்று அர்த்தம். சமஸ் கிருதம் தவிர  மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர் களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மையற்ற பாஷை... என்கிறது வேதம்.

இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார். 

“...தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ

நதியோஹா யதந்தரம்

தம்தேவ நிர்மிதம் தேசம்

ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா...”

அதாவது... விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்... கங்கை, யமுனை நதிகள் பாயும்... இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும்தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத் தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். அதனால்... இந்தப் பகுதியை தவிர... மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை.

இதே நேரம்... மநு இன்னொரு கருத்தையும் சொல் கிறார் பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதிகளாக... வகுத்துச் சொல்லும் போது, ப்ரும்மா வர்த்தம், ப்ரும்மரிஷி வர்த்தம் என்றெல்லாம் இமயமலைச்சாரல் பகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார். 

இதுவெல்லாம் இப்போது ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.

மநு சொல்படி, வேதச் சொல்படி பார்த்தால்... பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம். மேலும், அவர்கள் இமயமலை, விந்தியமலை, கங்கை, யமுனை பகுதிகளில்தான் வசிக்கவேண்டுமே தவிர வேறெங்கும் வசிக்கக் கூடாது.

இதையெல்லாம் பின்பற்றும் பட்சத்தில் தமிழையும் ஒதுக்கட்டும். ஆனால்... பல ஆண்டுகளுக்கு முன், தான் வாழ்ந்திருந்த நிலப்பகுதியை மட்டுமே அறிந்த எவனோ பண்ணிவைத்த மந்த்ரத்துக்கு இன்றும் குருட்டுத்தனமாக கட்டுப்பட்டு வாழ்வதும் குருட்டுத் தனமானதுதானே.

ஒரு சுவாரஸ்யமான உதாரணம் சொல்கிறேன் பாருங்கள். 

கர்மாக்களில், யாகங்களில் ஒரு வேத மந்த்ரம் சொல்வார்கள்.

“நமோ கங்கா யமுனை யோஹே

மத்யேயே வசந்தீ...

தேமே ப்ரஸனினாத் மானாஹா”...

இந்த வேத மந்த்ரத்தை நமது காவேரிக்கரையிலோ... வைகைக்கரையிலோ... தாமிரபரணி ஆற்றின் கரையிலோ உட்கார்ந்து பிராமணன் உச்சரிக்கிறான். அவனும் கைகூப்பி அவனுக்கு எதிரே உட்கார்ந் திருக்கிறவர்களையும் கைகூப்பச் சொல்கிறான்.

இந்த மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்...

“கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் இடையில் வசிக்கும் ரிஷிகளே மக்களே உங்களை வணங்கு கிறேன்” என்பதாகும்.

“அடத்திருடா... நீ உட்கார்ந்திருப்பது காவிரிக் கரையில். உனக்கு தட்சணை கொடுப்பதும் காவிரிக் கரைக்காரன்தான். நீ எதற்கு கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்து கிறாய்?

கேள்வி கேட்டால், ‘வேதத்தில் இருக்கு நான் சொல்கிறேன்’ என்பார்கள்.

வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை  -அதை பேசக்கூடாது என்றிருக்கிறது. உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது. நான் சொல்கிறவனை கும்பிடு என்கிறது. அதற்காக வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

வேதக்காரர்கள் அன்று... தாங்கள் வாழ்ந்த பிரதேச வாழ்வின் அடிப்படையில் தங்கள் நிலப்பகுதியை, நதிகளை, மலைகளை வணங்கினார்கள். 

அதைப்போல நீ உன் நிலப்பகுதியை, நதியை, மலையை வணங்கு. அதாவது இயற்கை வழிபாடு.

அதை விட்டுவிட்டு... காவேரிக்கரையில் நின்று கொண்டு கங்கையைக் கும்பிட்டால்? அந்த மந்த்ரத்தை மாற்றவேண்டும்.

சென்னையில் இருக்கும் பிராமணர்கள்...

“நமோ அடையாறு கூவம் யோஹே

மத்யேயே வசந்தீ...” 

அடையாறுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடைப்பட்ட ரிஷிகளை வணங்குகிறேன் என சமஸ்கிருதத்தில் வேண்டாம் தமிழில் சொல்லுங்கள். 

சரி... நெல்லை, மதுரை போன்ற தென்ஜில்லாக் காரர்களா? 

தாமிரபரணிக்கும் வைகையாற்றுக்கும் இடையே உள்ளவர்களை வணங்குகிறேன்... என சொல்லிவிட்டு ஆரம்பியுங்கள். பிரமாதமாக காரியம் ஈடேறும். 

தஞ்சாவூர், திருச்சி... என காவேரி பாயும் ஊர்க் காரர்கள். 

காவேரியையும் கொள்ளிடத்தையும் கைகூப்பி விட்டு... ஆரம்பிக்கட்டும்.

“கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுப்பாட்டு...” என திருமாலையில் சாதிக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். 

“கங்கையைவிட தூயதான புனிதமான காவிரி சூழ்ந்த திருவரங்கம் என்கிறார்.ஆனாலும்... நீங்கள் வேதம் சொன்னபடி கங்கையைத்தான் வணங்குவேன். காவிரியை வணங்கமாட்டேன் என்றால்...?

காவிரிக்கரையிலே நன்றாக சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு கங்கையைப் போற்றும் நமது `அறியாமை’யை போன அத்தியாயத்தில் பார்த்தோம். 

இதோடு சமஸ்கிருதத்தைத் தவிர மற்ற மொழிகளை மிலேச்ச அதாவது ழிஷீஸீ கிக்ஷீஹ்ணீஸீ பாஷை என்று சொல்லி... அவற்றை வேதம் மறுதலிக்கச் சொன்னதையும் பார்த்தோம். 

சமஸ்கிருத பாஷையைத்தான் போற்றுவோம், சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் கேட்போம் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு நானும் `ஒற்றை ஸ்லோகம்’ ஒன்று சொல்கிறேன்.

இதுவும் அந்த சமஸ்கிருதத்தில்தான் இருக்கிறது. அந்த ஸ்லோகம் சொல்கிறபடி நடப்பார்களா?

``வேத ப்ராமாண்யம் கஸ்ய மிது

கர்த்ரு வாதஹா ஸ்நானே

தர்மேச்சா ஜாதிவாத அவலேபஹ

சந்தா பாரம்பஹா பாபஹானா யசஇதீ

ஸத்வஸ்த ப்ரக்ஞாநாம் சஞ்சலிங்கானீ ஜாம்யே....’’

இந்த சமஸ்கிருத கவிதை சாற்றும் பொருள் என்ன வென்று விளக்குகிறேன் கேளுங்கள்.

மனிதன் உயிருள்ளவன், ஜீவன் உள்ளவன் சிந்திக்கவேண்டிய கடமை கொண்டவன். இப்படி சிந்தனையாளனாக இருக்க வேண்டிய... மனிதன் இன்று வெறும் ஜடமாகி விட்டான். அதாவது குட்டிச்சுவர் போலவும், சாலையில் கிடக்கும் கல்லைப் போலவும் பயனற்ற ஜடமாகி விட்டான். 

ஏன் அவ்வாறு ஜடமானான்? சிந்தனை சக்தி இழந்தான்? என்பதற்குக் காரணங்களை அடுக்குகிறது அந்த ஸ்லோகம்.

ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1. எதற்கெடுத்தாலும் வேதம் சொன்னதையே நம்பிக் கொண்டு... அதில் நல்லவை, கெட்டவை எது என்பதை அறியாமல் அப்படியே பின்பற்றுவது (`வேத ப்ராமாண்யம்’).

2. கஸ்யமிது கர்த்வாஹா...

அதாவது நம் எல்லோரையும் ஒருத்தன்தான் படைத்தான். அவன்தான் நமக்கு கர்த்தன், அதாவது காப்பாளன் என சும்மா நம்பிக் கொண்டிருப்பதால் மனிதன் ஜடமாகிறான்.

3. ஸ்நானே... இது ரொம்ப முக்கியமான வார்த்தை. 

சாதாரண காலை வேளைகளில் நாம் ஸ்நானம் செய்வது உடம்புக்கும், மனசுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் தான். 

ஆனால்... இந்த குளிக்கும் விஷயத்தை கூட்டமாக சேர்ந்து போய் ஆற்றில் குளிக்க வைத்து அதற்கு புனித நீராடல் என்றும் தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள் .சாயம் பூசினால் தண்ணீரில் போய் கழுவலாம். தண்ணீருக்கு சாயம் பூசிவிட்டால்...?

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை, மகாமகம் என்ற சில நாள்களை காரணம் காட்டி... கூட்டம் கூட்டமாக போய் ஆற்றுக்குள் இறங்கி, குளத்துக்குள் இறங்கி தீர்த்தமாடுகிறார்கள். 

தங்களது அழுக்கை கழுவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, நதிகளையும், குளங்களையும் அழுக்காக்கி விடுகிறார்கள். 

இதுபோன்று அன்றாட ஆரோக்கியப் பணிகளை குளியல் செய்வதில் மதத்தை சம்பந்தப்படுத்துவதால் மனிதன் ஜடமாகிப் போனான்.

4. அடுத்ததாக ஜாதிவாத அவலேபஹ...

அதாவது இவன் உயர்ந்த ஜாதி, இவன் தாழ்ந்த ஜாதி, இவன் தோள் பட்டையிலிருந்து பிறந்தான். அவன் தொடையிலிருந்து பிறந்தான். எனவே, இவனும் அவனும் ஒன்றாக முடியாது. 

இவன் கும்பிடும் இடத்தில் அவன் வரக்கூடாது. இவன் வசிக்கும் பகுதியில் அவன் நுழையக்கூடாது என `ஜாதிவாதம்’ சொல்லி பல கூடாதுகளை உத்தர வாகப் பிறப்பித்துள்ளவனும் அதை பின்பற்றுகிறவனும் மனிதனே அல்ல ஜடம்தான். ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.

5. சந்தாபாரம் 

மனிதன் ஜடமாய் போய் விட்டதற்கான அடுத்த `தகுதி’ இது. அதென்ன?

இன்றும் சாதாரணமாக சாலைகளிலேயே நாம் பார்க்கிறோம். பலசாலியான ஒருவன்... குடும்பம் குட்டியோடு பக்திமானாக ஒவ்வொரு வீடாக, ஒவ் வொரு கடையாகப் போய் சாட்டையால் தன்னைத் தானே அடித்து துன்புறுத்திக் கொள்கிறான். முதுகு, மார்பெல்லாம் ரத்தக் கோடுகள் வழிகின்றன. கேட்டால் கோயிலுக்கு, எல்லாம் வல்ல கடவுளுக்கு வேண்டுதல் என்பான். நாக்கில் அலகு குத்திக் கொண்டு, ரத்தம் வழிய ஊர்வலம் வருகிறான்.

இதுபோல கடவுள் பெயரைச் சொல்லி... உடல் ரீதியாக தன்னைத்தானே நீ உன்னை வருத்திக் கொள்வாயானால் நீ மனிதனே அல்ல ஜடம்தான். 

இவைகள்தான் அந்த சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்.

எல்லாவற்றிலும் சமஸ்கிருதமே இருக்க விரும்பும் இன்றைய அர்ச்சகர்கள் சிலரிடம் போய்... `இந்த ஸ்லோகத்தை சொல்லி பெருமாளுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிக் கொடுங்கோ’ என்றால் `பேஷாக பண்ணித் தரேன்’ என்பார்கள். 

ஏனென்றால்... அவர்களுக்கு வடமொழி அறிவு அந்த நிலையில் தான் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில் சொன்னால் தான் ஒத்துக்கொள் கிறேன் என்பவர்கள்.... தர்மபாலர் என்பவர் எழுதிய `பிரமாண வார்த்திகம்’ என்னும் புத்தகத்தில் உள்ள மேற்கண்ட சமஸ்கிருத ஸ்லோகத்தை ஏற்றுக் கொள்வார்களா? 

முடியாது என்று சொல்வார்களே என்றால் ஏன்? சமஸ்கிருதம் தேவ பாஷையாயிற்றே. அதில் சொன்னால் தெய்வமும் சொன்ன மாதிரியாயிற்றே. 

ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மொழி என்றால் அது கருவி. மனுஷாள் பேசிக் கொள்ள பயன்பட வேண்டியதுதான் மொழியே தவிர, அது ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ள பயன்படக் கூடாது.

இது தாழ்ந்த மொழி, இது உயர்ந்த மொழி, இது தெய்வ மொழி... இது அசுர மொழி என்றால்... அந்த மொழியே நம்மைப் பார்த்து திட்டும். இதை விளக்கத் தான் தர்மபாலரின் ஸ்லோகத்தை சொன்னேன்.

(தொடரும்)


No comments:

Post a Comment