‘‘தந்தை பெரியாரே என்றும் தலைவர் - திராவிடர் கழகம்தான் தி.மு.க.வுக்குத் தாய்க்கழகம்'' என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் இன்று! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

‘‘தந்தை பெரியாரே என்றும் தலைவர் - திராவிடர் கழகம்தான் தி.மு.க.வுக்குத் தாய்க்கழகம்'' என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் இன்று!

மதவெறி, ஜாதிவெறிக்கு விடை கொடுக்க சூளுரைத்து சுயமரியாதையை மீட்டெடுப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் அண்ணா பிறந்த நாள் அறிக்கை

அண்ணாவின் பிறந்த நாளில் மதவெறி, ஜாதி வெறி ஆகியவற்றிற்கு விடை கொடுக்க  சூளுரைத்து சுயமரியாதையை மீட்டெடுப்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தந்தை பெரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் அண்ணாவின் 

115 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று (15.9.2023).

அறிஞர் அண்ணாவின் அரசியல் வியூகமும், விற்பன்னர் என்ற விவேகத் திட்டங்களும் அவரை அரசியலில் ஒரு முத்திரை பதிக்க வைத்தன!

தந்தை பெரியாரே என்றும் தலைவர்!

திராவிடர் இயக்கம் - தொடக்கத்தில் அரசியல் கட்சியாக மலர்ந்து ஓர் இடைவெளி வந்ததை இட்டு நிரப்பி ஈடில்லா அரசியல் சாதனையை அண்ணா பரப்பினார் ஆட்சி அமைத்ததன்மூலம்!

ஆனால், அதேநேரத்தில் இரண்டு அம்சங்களில் மிகவும் தெளிவாக அவர் செயல்பட்டார்.

ஒன்று, தந்தை பெரியாரே என்றும் தலைவர்!

இரண்டு, திராவிடர் கழகம்தான் தி.மு.க.வுக்குத் தாய்க் கழகம்.

 ‘வழி நடத்துங்கள் அய்யா' என்றார் அண்ணா!

தொடக்கத்தில் சொன்ன விளக்கத்தை ஆட்சி அமைக்கும் முன்பே அகிலத்திற்கும் அதை நிரூபித்தார். தந்தை பெரியாரை திருச்சிக்குச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்று, ‘வழி நடத்துங்கள் அய்யா' என்று வாஞ்சையுடன் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் வகுத்த அரசியல் அடிக்கட்டுமானம் திராவிடர் ஆட்சிகளை அரை நூற்றாண்டு அசைக்க முடியவில்லை என்பது வரலாற்றுச் சாதனை!

முத்தமிழறிஞர் கலைஞர் அண்ணாவின் அருமைத் தம்பி மட்டுமல்ல; அரசியலில், அண்ணா ஆட்சியின் கொள்கைகளுக்கு ஒரு தனிச் செயல்வடிவம் தந்ததோடு, தந்தை பெரியார் பாராட்டி மகிழும் வகையில் ஆட்சியைத் தொடர்ந்தார்!

‘திராவிடம் வெல்லும், அதை வரலாறு எங்கும், என்றும் சொல்லும்!'

அதையே இன்றுள்ள முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின்  ஆட்சி ‘திராவிடம் வெல்லும், அதை வரலாறு எங்கும், என்றும் சொல்லும்' என்ற கொள்கை லட்சியம் வாயிலாக உலகத்திற்கே பிரகடனப்படுத்தி வருகிறார்!

‘இந்தியா' கூட்டணிமூலம் திராவிடத்தின் தேவை திக்கெட்டும் உணரப்பட்டு, தேர்தலுக்கு இதுவே சரியான ஆயுதமாகி, வெற்றிக் கனி பறிக்க வேக நடை போடுகிறது!

அண்ணாவின் பிறந்த நாளில் மதவெறி, ஜாதி வெறி ஆகியவற்றிற்கு விடை கொடுக்க  சூளுரைத்து சுயமரியாதையை மீட்டெடுப்போம்!

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2023

No comments:

Post a Comment