அந்தோ, திருவெறும்பூர் கிரேசி மறைந்தாரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

அந்தோ, திருவெறும்பூர் கிரேசி மறைந்தாரே!

திருச்சி மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் கொள்கை வளர்க்க அரும்பாடுபட்ட தோழர்களில் துப்பாக்கித் தொழிற்சாலை தோழர் ஜோசப் அவர்களும் ஒருவர். அவரோடு திருமணம் ஆன நிமிடத்திலிருந்து  சகோதரி கிரேசி  அவர்களும் இயக்கத்தில் இணைந்து கடைசி வரை கழகப் பணி ஆற்றி வந்தவர். கழகத்தின் ஒரு பொதுக் கூட்டத்திற்குச்  சென்று திரும்பும் பொழுது வழியிலேயே தாலியைக் கழற்றி கணவர் கையில் கொடுத்த கொள்கை வீராங்கனை அவர்! 

அதே போன்று திருவெறும்பூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவராக இருந்து மாவட்ட செயலாளராக இருந்து, மாநில மகளிரணி பொறுப்புகளில் எல்லாம் இருந்து, இப்பொழுது மண்டல மகளிர் அணி செயலாளராகப் பொறுப்பேற்று, திருச்சி மாவட்டத்திற்கு ஒரு தூணாக இருந்தவர்!  தலைமை அறிவிக்கின்ற ஆர்ப்பாட்டம், போராட்டங்கள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், அனைத்திலும் கிரேசி அம்மையார் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லலாம்; அந்த அளவிற்கு இயக்கச் செயற்பாட்டாளராக இருந்தவர். அவருக்கு   அன்புச் செல்வி, மலர்க்கொடி, தேன்மொழி, அறிவுச்சுடர், அருள்மொழி ஆகிய அய்ந்து  மகள்கள் உள்ளனர்.

 அய்வரும் தமது தாயாரை மிகவும் போற்றி மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டனர். சென்னையில் வைத்து மருத்துவமனையில் கவனித்து வந்தார்கள். உடல் நிலை கோளாறு காரணமாக திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை அருகில் உள்ள துப்பாக்கி நகரில் மகள்   வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். அங்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராஜ், பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்  மற்றும் தோழர்கள் சென்று நலம் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில் தான் கிரேசி (வயது 76) இன்று (20.8.2023) இயற்கை எய்தினார். 

மானமிகு கிரேசியின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும்,  கழகத்தின ருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் 

சென்னை
20.8.2023

குறிப்பு: நாளை (21.8.2023) காலை 10 மணி அளவில் திருவெறும்பூரில் இறுதி ஊர்வலம் நடைபெறும். தொடர்புக்கு: 9840901270 

 


No comments:

Post a Comment