நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

நூல் அரங்கம்

பொ.நாகராஜன் 

பெரியாரிய ஆய்வாளர்


நூல்: “பெரியார் கணினி”

ஆசிரியர்: புலவர் நன்னன்  

வெளியீடு: ஏகம் பதிப்பகம்

முதல் பதிப்பு 1996

பக்கங்கள் 1136

விலை: ரூ 650/- பெரியாரியலை -  இலக்கியமாக அறிய;  இலக்கணமாக கற்க; அறிவுக் களஞ்சியமாக உணர; ஆதாரமாக காட்ட; பொன்மொழியாகப் பொறித்து வைக்க; எந்த நேரத்திலும் எளிதாக தேட; எல்லோருக்கும் பயன்தரும் கணினியாக உதவ; பெரியார் எழுத்துக்களின் பெரும் தொகுப்பு நூலாக,  என்சைக்ளோப்பீடியாவாக படைக்கப்பட்டது தான் - பெரியார் கணினி ! 

வரலாற்றில் புத்தர், வள்ளுவருக்குப் பிறகு சுய சிந்தனையாளராக, எந்த முன்னோடிகளின் வழியையும் பின்பற்றாமல், தானாக சிந்தித்து, தனக்கான கொள்கைகளை வகுத்து, தனக்கான இயக்கத்தை உருவாக்கியவர் - தந்தை பெரியார் ! அவரின் எழுத்துக்கள் 1925ஆம் ஆண்டு குடிஅரசில் வெளியானது முதல் அவரது இறுதிக் காலம் 1973ஆம் ஆண்டு விடுதலை இதழ்களில் வெளி வந்தது வரை அத்தனையும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன!

அந்த அரிய களஞ்சியத்திலிருந்து புலவர் நன்னன் அய்யா அவர்கள் - 48 முதன்மைத் தலைப்புகளை உருவாக்கி, அதன் கீழ் 309 துணைத் தலைப்புகளை உள்ளடக்கி, அத்தோடு 11 கிளைத் தலைப்புகளையும் சேர்த்து, ஒரு கணினியின் தகவல் மய்யத்தைப் போல, மொத்தம் 4884 கருத்துக் கனிகளை, பெரியாரின் எண்ணங்களை, எழுத்துகளை உள்ளடக்கி தந்த தொகுப்பு நூல் தான் - பெரியார் கணினி !

நூலாசிரியர் புலவர் நன்னன் அய்யா அவர்கள் 30.07.1923 அன்று பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி சான்றும், எம்.ஏ., பி.எச்.டி. பட்டமும் பெற்றார். பெரியாரியல் மற்றும் தமிழ் மொழி பற்றி பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார். அவரது ஆகச் சிறந்த படைப்பாக கருதப்படுவது பெரியார் கணினி. நன்னன் அய்யா 07.11.2017 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார் !

நூலின் அணிந்துரையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், "சற்றொப்ப அய்யாயிரம் பொன் மொழிகள் எனத்தகும் கருத்துகளாய் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன! இத்தனை முத்துக்களையும் எடுத்துக் கோர்த்து, எழிலார் நூல் வடிவில் தர வேண்டுமென்ற எண்ணம் நன்னன் போன்ற ஒரு சிலருக்கே ஏற்பட முடியும்!"... என மிகச் சரியான தனது கணிப்பை பதிவு செய்துள்ளார்!

மற்றுமொரு அணிந்துரையாக அன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தனது விரிவான உரையின் இறுதியில், "இது தமிழ் இனத்தின் மூச்சு; தமிழர்களின் மானம்; தமிழர்களின் மறுவாழ்வு; ஆகிய அத்தனைக்கும் வழிகோலும் அடிப் படையாய் அமைவது!"... என்று மனதாரப் பாராட்டியுள்ளார்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள் தனது அணிந்துரையில், "தொகுப்பிலக்கியத்தில் இது ஒரு புதிய பொன்னேடு! பெரியாரைப் பற்றிய இந்தக் கணினி நன்னன் நூல்களுள் மிகப் பெரிய சீரிய நூல் (  Mag'num Op'us ) என்று கூற வேண்டும்!"... என நூலாசிரியருக்கு மகுடம் சூடிப் பாராட்டியுள்ளார்!

இந்த நூலின் சிறப்பென்னவென்றால், தகவல் களஞ்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்ட 4884 தரவுகளும் எந்த இதழிலிருந்து, எந்த தேதி, மாதம், ஆண்டு வெளியானது என்ற விவரத்தோடு அவைகள் எந்த பக்கம் எந்த பத்தியில் பிரசுரமானது என்ற ஆதாரத்தையும் கொண்டதாக அமைந்துள்ளது! 

அந்த அடிக்குறிப்புகளின் அட்டவணைகள் மட்டுமே 75 பக்கங்களை கொண்டது! அந்த வகையில் இதுபோன்ற ஒரு தொகுப்பு நூலை காண்பது மிக அரிதினும் அரிது! இந்த மிகப் பெரிய சாதனையைப் படைத்த புலவர் நன்னன் அவர்களை பெரியார் தொண்டர்கள் என்றும் மறக்க இயலாது!

பெரியார் கணினியில் தரப்பட்டுள்ள 4884 கருத்துக் கனிகளிலிருந்து சுவைத்துப் பார்க்க, இங்கே சில கனிகள்:

1.8.5 :  நெருப்பு சுடாமல் குளிர்ச்சியாக மாறலாம்; வேப்பெண்ணெய் தேனாக மாறலாம்; ஆனால் பதவியில் அமர்ந்தவன் மட்டும் பெரும்பாலும் யோக்கியனாக இருக்க முடியாது! (விடுதலை - 04.10.1950)

7.1.10 : ‌கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும், எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து! உலகத்தின் பொதுச் சொத்து அல்ல! ஒழுக்கம், நாணயம் மட்டுமே பொதுச் சொத்து! (விடுதலை - 17.12.1964 )

8.4.2.2 :  கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல! அது இழிவின் அறிகுறி! இழிவிற்காக அவமானப்படுகிறோம்; துக்கப்படுகிறோம்; அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்து விட்டோம் என்பதன் அறிகுறி! (குடிஅரசு - 05.06.1948) 

8.4.4.11 :  திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே - அதாவது எந்த மனிதனும் எனக்கு கீழானவனல்ல; அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல! ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே! (விடுதலை - 23.10.1958)

9.4.2 :  கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்க கூடாது? (குடிஅரசு - 03.11.1929 )

9.15.5 :  தனிப்பட்டவரின் மனதிலுள்ள கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ, நம்பிக்கை இல்லாத உணர்ச்சியைப் பற்றியோ நமக்கு கவலையில்லை! ஏனெனில் ஒருவனுடைய தனிப்பட்ட ஆத்திக - நாத்திக கொள்கையானது பொதுநல விஷயங்களைப் பாதிக்காது! (குடிஅரசு - 29.06.1946 )

10.1.27 :  முட்டாள் தனமாகக் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று கூறினார்களே ஒழியக் கல்விச் சாலை இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று கூறவே இல்லை! ( விடுதலை - 05.05.1966)

10.7.24 :  மனிதன் பிறந்த நாள் முதல் கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணாக்கனாகவே இருக்கின்றான். அவன் கற்றுக் கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது ! ( விடுதலை - 22.06.1965 )

13.1.6 :  நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்கு கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது! (குடிஅரசு - 15.09.1935 ) 

14.11.21 :  காந்தியாரைக் கொன்றது இந்த நாட்டிலுள்ள இன்றைய மதமும் அரசியலும் தான் என்பது நினைவிருக்கட்டும்! இவை அடியோடு மாற்றப்பட்டு ஒழிக்கப்படாலன்றி நாம் மக்களாக இருக்க முடியாது! ( விடுதலை - 09.04.1950 )

17.2.4 :  மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்! ( விடுதலை - 10.05.1936) 

30.3.2 :  சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை! நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லை! (குடிஅரசு - 28.10.1943 )

பெரியார் கணினியில் உள்ள கடலளவு கருத்து முத்துக்களிலிருந்து, ஒரு கையளவு முத்தை அள்ளித் தந்தேன்! ஒவ்வொரு பகுத்தறிவுவாதியும், பெரியாரியவாதிகளும் கட்டாயம் படித்துப் பாதுகாக்க வேண்டிய ஆவணப் பெட்டகம்!

பெரியார் கணினி - அதைப் பெரிதும் கவனி!

No comments:

Post a Comment