ஜாதிக் கலவரங்களை உருவாக்கலாமா? என்று ஒரு பக்கத்தில் திட்டமிடுகிறார்கள்; இன்னொரு பக்கத்தில் சமூகநீதியைப் பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

ஜாதிக் கலவரங்களை உருவாக்கலாமா? என்று ஒரு பக்கத்தில் திட்டமிடுகிறார்கள்; இன்னொரு பக்கத்தில் சமூகநீதியைப் பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்!

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கவேண்டிய பொறுப்பு திராவிடர் கழகம் போன்ற சமூகப் புரட்சி இயக்கங்களுக்கு உண்டு! 

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, ஆக.16 ஜாதிக் கலவரங்களை உருவாக்க லாமா? என்று திட்டமிடுகிறார்கள் ஒரு பக்கத்தில்; இன்னொரு பக்கத்தில் சமூகநீதியைப் பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவை அத்தனையையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை உண்டாக்கவேண்டிய பொறுப்பு திராவிடர் கழகம் போன்ற சமூகப் புரட்சி இயக்கங்களுக்கு உண்டு  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மத்தியப் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் சமூகஅநீதியைக் கண்டித்து கடந்த 12.8.2023 மாலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

கொடுக்கவேண்டிய அளவை 

மறுத்திருக்கிறார்கள்

மத்தியப் பல்கலைக் கழகங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமுதாயத்தினருக்குக் கொடுக்கவேண்டிய மிக முக்கியமான அளவை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். அதைத்தான் சற்று புள்ளிவிவர ரீதியாக சற்று முன்னர் உங்களுக்கு விளக்கி இருக்கிறேன்.

இந்தியா முழுவதும் 45 மத்தியப் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன; அய்.அய்.டி.களைத் தவிர. அந்தப் பல்கலைக் கழகங்களை எடுத்துக்கொண்டால், எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார்கள்?

45 இடங்களில் வெறும் 

7 இடங்கள்தான்!

எஸ்.சி. சமுதாயத்திற்கு ஒன்று, எஸ்.டி., சமுதாயத்திற்கு ஒன்று ஓ.பி.சி.க்கு 5 இடங்கள். இப்படி மொத்தம் 7 தான். 45 பல்கலைக் கழகங்களில் 7 இடங்கள்  போனால், மீதமுள்ள 38 இடங்களில் பார்ப்பனர்கள், உயர்ஜாதிக் காரர்கள்தான் பதவியில் இருக்கிறார்கள்; துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர் போன்ற பதவிகளில்.

இப்படி சமூகநீதி என்பது மோடி ஆட்சியில், பி.ஜே.பி. ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் ஒழிக்கப்படுகிறது என்பது ஒன்று.

அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படைக் கட்டுமானத்தையே குலைத்திருக்கிறார்கள்!

இரண்டாவதாக, உயர்ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று ஒரு தந்திரத்தைக் கையாண்டு, அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப் படைக் கட்டுமானத்தையே குலைத்து, பொருளாதார அடிப்படை என்பதை அவர்கள் உள்ளே நுழைத்து - அதன்மூலமாக ஏற்கெனவே சாப்பிட்டு, அஜீரணத்தோடு இருக்கக்கூடியவர்களை முன்னால் கொண்டு வந்து விருந்தளித்து - பசியேப்பக்காரர்களை வெளியே தள்ளக்கூடிய அளவிற்கு, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று அதிகமாக இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உச்ச, உயர்நீதிமன்றங்களிலும் சமூகநீதியை நடை முறைப்படுத்துவதில்லை.

ஆனால், சமூகநீதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் எடுத்த எடுப்பிலேயே முகப்புரையிலேயே குறிப்பிடப் பட்டு இருக்கின்ற ஒன்று.

ஆர்.எஸ்.எஸின் உத்தரவை 

நடைமுறைப்படுத்தும் ஒன்றிய மோடி அரசு

ஆகவேதான், அந்த சமூகநீதியை ஒன்றிய அரசு செய்வதில்லை. காரணம் என்னவென்றால், 

ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கையை நடைமுறைப் படுத்துவது தான் மோடி ஆட்சி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உத்தரவு போடுவதை அவர் செய்வார்.

உயர்ஜாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படை யில் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை முதல் கட்டமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்க்கவேண்டும்; இட ஒதுக்கீட்டையே ஒழிக்கவேண்டும் என்பதற்காகத் தான் இந்த வேலையை செய்கிறார்கள்.

ஆகவே, அதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்தப் பணியை செய்கின்றோம்.

திராவிடர் கழகம் போன்ற 

சமூகப் புரட்சி இயக்கங்களுக்கு உண்டு!

இந்தச் சூழ்நிலையில், ஜாதிக் கலவரங்களை உரு வாக்கலாமா? என்று ஒரு பக்கத்தில் திட்டமிடுகிறார்கள்; இன்னொரு பக்கத்தில் சமூகநீதியைப் பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவை அத்தனையையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை உண்டாக்கவேண்டிய பொறுப்பு திராவிடர் கழகம் போன்ற சமூகப் புரட்சி இயக்கங்களுக்கு உண்டு.

எனவே, இதை தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்வதற்கு இது ஒரு தொடக்கம்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாதிகளுக்கிடையே மோதல்களை உருவாக்கி - கலவரங்களை உருவாக்க திட்டமிடுகிறார்கள்!

செய்தியாளர்: நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டி இருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: அதுகுறித்து கண்டன அறிக்கையை எழுதியிருக்கிறேன். அரசாங்கம் அதற்குரிய முயற்சி களை எல்லாம் எடுத்திருக்கிறார்கள்.

நாங்குநேரி நிகழ்வை தனிப்பட்ட ஒரு நிகழ்வாகக் கருதக்கூடாது. அந்த நிகழ்வு என்பது, சமூகத்தில் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, உயர்ஜாதிக்காரர்களை ஒன்றுதிரட்டி, அவர்களைப் பின்னால் வைத்துக்கொண்டு, ‘‘நம் கையைக் கொண்டே, நம் கண்ணைக் குத்துவது என்று சொல்வார்கள்''  - அதுபோல அந்த சமூகத்தில் இருக்கக்கூடிய பல ஜாதி களுக்கிடையே மோதல்களை உருவாக்கி, அதன்மூலம் தமிழ்நாடு ஓர் அமைதி பூமி அல்ல என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு பின்னணி உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனுடைய முகத்திரையைக் கிழித்து மக்களுக்குக் காட்டவேண்டிய பொறுப்பு அனைத்து முற்போக்குக் கட்சிகளுக்கும் உண்டு. ஆகவே, அந்தப் பணியை நாங்கள் செய்வோம்.

நுண்ணறிவுப் பிரிவினர் மட்டுமல்ல, ஒவ்வொரு பிரிவினரும் அறியவேண்டும்.!

செய்தியாளர்: பள்ளி மாணவர்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று சொல்கிறீர்களா?

தமிழர் தலைவர்: பள்ளி மாணவர்களை மட்டுமல்ல; ஒவ்வொரு ஜாதிக்காரர்களையும் தூண்டிவிடுகிறார்கள்; அதற்குப் பின்னணி இருக்கிறது.

எனவேதான், நாங்குநேரி நிகழ்வை தனித்த நிகழ் வாகக் கருதக்கூடாது. அதற்குப் பின்னால் இருக்கின்ற சதியை நுண்ணறிவுப் பிரிவினர் மட்டுமல்ல, ஒவ்வொரு பிரிவினரும் அறியவேண்டும்.

ஏனென்றால்,  ஜாதிப் பெருமைகளை அவர்களி டையே பரப்பி, அந்த ஜாதிப் பெருமையை வேகமாகப் பரப்பவேண்டும் என்பதற்காக, தனிப்பட்ட நபர்களுக்குள் கலகம் ஏற்படுவதுபோன்று காட்டினாலும், அதற்கு அடிநீரோட்டம் என்னவென்றால், வடமாநிலங்களில் ஜாதி வெறி, மதவெறியை ஊட்டி, எப்படி பெரும்பான்மை - சிறுபான்மை என்றாக்குகிறார்களோ, அதுபோல, தமிழ்நாட்டில் செய்ய முடியவில்லை என்பதற்காக, இப்படி தனித்த நிகழ்வுகளை அவர்கள் நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.

பிரச்சாரப் பெரும் பணிகளை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்!

ஒரு பக்கம் தமிழ்நாடு அரசு, ‘திராவிட மாடல்' அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தாலும், இது ஒரு மனநோய் என்ற அளவில், பிரச்சாரப் பெரும் பணிகளை திராவிடர் கழகம், ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து வேகமாக செய்யும்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment