ஜனநாயக யுத்தத்தில் ‘‘இந்தியா'' கூட்டணியைப் பலப்படுத்துவோம்!
‘‘பட முடியாதினி துயரம்; பட்டதெல்லாம் போதும்'' என்று மக்கள் ஓலமிடும் நிலையை மாற்றுவோம்! ஜனநாயக யுத்தத்தில் ‘‘இந்தியா'' கூட்டணியைப் பலப்படுத்துவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அரசு பதவிக்கு வரும் போது (2014 ஆம் ஆண்டு) தனது தேர்தல் அறிக்கை யிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் ‘‘வெளிப்படைத் தன்மை (Transparency in Administration) என்பது எங்கள் அரசுக்குரிய தனித்தன்மையாக இருக்கும்; குறைந்த ஆட்சி - நிறைந்த ஆளுமை - (Minimum Government with Maximum Governance)'' என்றெல் லாம் மேடை தவறாமல் வாய் கிழியப் பேசினார்கள் - அப்பாவி மக்களை நம்ப வைத்தார்கள்.
வளர்ச்சி, இளைஞர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள், விலைவாசியைக் கட்டுப்படுத்தல், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குதல் என்பது போன்று பல வாக்குறுதிகளைக் கூறினர்.
என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளுக்கே அதிர்ச்சி!
இரண்டாவது முறை ‘புல்டோசர்' மெஜாரிட்டியைப் பெற்றவுடன், அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத் தையும் அந்தப் ‘புல்டோசர்' மெஜாரிட்டி, பண பல, புஜ பல, பராக்கிரமம், ஊடகப் பிரச்சாரம் (Money Power, Muscle Power, Media Power) எல்லாவற்றின் துணை கொண்டு, நாட்டை விட்டே விரட்டிடும் பணியை வேகமாகச் செய்து வருகின்றனர்!
நாட்டில் சட்டம் - ஒழுங்கு அறவே காணாமற்போன நிலையால் என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளுக்கே அதிர்ச்சி ஏற்பட்டு, அக்கூட்டணியிலிருந்தும் சில கட்சிகள் வெளியேறும் நிலை வேகமாகி வருகிறது!
மணிப்பூரின் மோசமான நிலை
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு எப்படி உள்ளது என்பதற்கு வடகிழக்கு மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்குமேல் நடந்துவரும் உயிர்ச்சேதங்கள், கலவரங்கள், தீ வைத்தல்கள், பாலியல் வன்கொடுமை, மகளிரை நிர்வாணப்படுத்தியமை முதலியன அன்றாட அவலங்களாக நடைபெற்று நாம் நாகரிகம் படைத்த ஒரு மனித சமூகத்தில்தான் வாழு கிறோமா என்ற கேள்வியைக் கேட்கவே தூண்டுகின்றன!
நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருப்பதால் தான், உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கைத் தொடுத்து, மணிப்பூர்பற்றிய விசாரணையின் போது கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத் ததோடு, ‘‘அம்மாநில காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் வந்து ஆஜராகவேண்டும் - மணிப்பூரில் முற்றி லும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது (Complete Breakdown of Constitutional Machinery)'' என்று பிரகடனப்படுத்திடும் நிலை ஏற்பட்டுவிட்டது!
நாட்டின் பிரதமர், இன்னும் அங்கே செல்லவில்லை; ஆறுதல் கூறி அம்மக்களின் வழியும் ரத்தக் கண்ணீரைத் துடைக்க எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், ‘‘லோக சஞ்சாரம்'' நடத்தி வருகிறார்; மக்களவையிலோ பிரதமரைக் காணாமல் தவித்து, கடைசியில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரும் அளவிற்குச் சென்றுள்ளனர் எதிர்க்கட்சிகள். முடிவு எப்படி என்பது தெரியும்; ஆனால், அப்படியாவது நாடாளுமன்றத்தில் ஒரு விவாதக் களமாட முடியும் என்பதால்தான் அந்த உத்தியை எதிர்க்கட்சியினர் கையாளுகிறார்கள்!
அரியானா - இன்னொரு ‘‘மணிப்பூரா?''
இந்த நிலையில், டில்லி தலைநகர் அருகே உள்ள, அரியானா மாநிலமும், மற்றொரு மணிப்பூர் ஆகிவிடுமோ என்னும் அளவுக்கு மதக் கலவரங்களின் வெறித்தனம் அங்கேயும் உருவாகியிருப்பது அனைத்து மனிதாபிமான முற்போக்காளர்கள், உண்மை ஜனநாயக விரும்பிகளின் வேதனையாக உள்ளது!
அதுபற்றியும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறது.
பற்றி எரியும் தீயை எப்படி அணைத்து மக்களைக் காப்பாற்றவது என்பதுதான் முக்கிய சிந்தனையாக இருக்கவேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளின் குரலை எப்படி அடக்கலாம் என்றுதான் ஆளும் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்;
ஜூம்லா பேர்வழிகளைத் தடுப்போம்!
நாடு எவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்று கொண் டுள்ளது என்பதை எண்ணும்போது, வேதனைதான் மிஞ்சுகிறது!
இதற்கு ஒரே விடை - விடியல்! மீண்டும் ‘இந்த ஜூம்லா' வாக்குறுதிப் பேர்வழிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது - எதிர்க்கட்சிகளுக்காக அல்ல; ஜனநாயகக் காப்பு சக்திக்காகவே என்று மக்களுக்கு உணர்த்திடவேண்டும். பெரும் பகுதி மக்கள் ‘‘பட முடியாதினி துயரம்; பட்டதெல்லாம்போதும்'' என்று ஓலமிடும் நிலைமை நாளுக்கு நாள் மங்குவதற்குப் பதிலாக, பெருகிவருகிறது!
எனவே தலைவர்களே, மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தென்னாட்டை - குறிப்பாக தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியையும், அதன் ஆற்றல்மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் அணுகுமுறையையும் கூர்ந்து கவனித்து, உங்களது தன்முனைப்பைச் சற்று தள்ளி வைத்து, நாட்டுநலம்பற்றி மட்டுமே குறி என்ற பெருநோக்கோடு ஓரணியில் திரண்டு, தேர்தல் போரணியாகி, இந்த ஜனநாயக மீட்பு யுத்தத்தில் ‘இந்தியா' ‘I-N-D-I-A' (Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியைப் பலப்படுத்தி, புதியதோர் அரசியல் திருப்பத்தை உருவாக்குங்கள்!
உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதை நாடு தழுவிய பிரச்சாரப் பெருமழையாக மக்களுக்கு உணர்த்தி, ‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டோர்'' பற்றி அம்பலப் படுத்த ஆயத்தமாகுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.8.2023
No comments:
Post a Comment