சிறுபான்மையினர் நலன் காக்க தி.மு.க. தொடர்ந்து செயலாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

சிறுபான்மையினர் நலன் காக்க தி.மு.க. தொடர்ந்து செயலாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஆக.24  சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் திமுக தொடர்ந்து செயலாற்றும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி யளித்துள்ளார். 

சென்னை கோயம்பேடு, புனித தாமஸ் கல்லூரி அரங்கில், மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்து கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில்  நடைபெற்றது.தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளிலும் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் மாவட்ட அளவில் 228 மாணவ, மாணவியர்களும், மாநில அளவில் 6 மாணவ, மாணவியர்களும் வெற்றி பெற்றனர்.

 விழாவில் மாநில அளவில்வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக் கங்கள், சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

அதைத்தொடர்ந்து அவர் பேசியதா வது: இந்த பேச்சுப் போட்டிகளின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள இளம் பேச்சாளர்கள்தான், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு. பேச்சாற்றலால் நம் தமிழ் நிலம் பண்படுத்தப்பட்ட வரலாற்றை நீங்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். அதனை எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

திராவிட இயக்கம் என்பதே பேசிப் பேசி, எழுதி, எழுதி வளர்ந்த இயக்கம். திமுகவின் கூட்டங்களை ‘மாலை நேரக் கல்லூரிகள்’ என்று அழைப்பதுண்டு. அந்தளவுக்கு அறிவாற்றல், சொல்லாற்றல் அதில் அடங்கியிருக்கும். பெரியார், அண்ணா, கலைஞர் என இவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டுநம்முடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஓரளவுக்கு பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கெல்லாம் காரணமானவர்களில் முக்கியமானவர் பீட்டர் அல்போன்ஸ் தான். சட்டப்பேரவையில், அமைதியாக உட்கார்ந்து இருக்கக்கூடாது. எதிர்க்கட் சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் அப்போதைக்கப்போது எழுந்து சில கேள்வியை கேட்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். திமுக அரசு எப்போது ஆட்சிப் பொறுப் பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறு பான்மையினர் நலனுக்காக போராடக் கூடிய, வாதாடக் கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றித் தந்திருக்கிறது.

அவற்றின் நீட்சியாக, சிறுபான்மையினர் விடுதி மாணவ, - மாணவியருக்கு, "புத்த பூர்ணிமா", "மகாவீர்ஜெயந்தி", பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற சிறுப £ன் மையினர் விழாக்களுக்கு சிறப்பு உணவு வழங்க ஆணையிட்டுள்ளோம். 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி களில், ரூ.14 லட்சம் செலவில் ‘செம்மொழி நூலகங்கள்’ ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், ரூ.5.90 லட்சம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிராமப்புற சிறுபான்மையின மாண வியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.3.60 கோடியில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'ஹஜ்'   பயணம் மேற்கொண்ட 3,987 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இப்படி சிறுபான்மையினர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை அரசின் மூலமாக நாம் தொடர்ந்துசெய்து வருகிறோம். 

சிறுபான்மையினர் உரிமை களைக் காக்க, மக்கள்மன்றத்திலும் திமுக தொடர்ந்து செயலாற்றும் என்று உறுதியளிக் கிறேன். நம் தமிழ்நாட்டிற்கு என்று தனிகுணம் உண்டு. சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என்று பண்பட்ட பண்பாட் டைக் கொண்ட நம் தமிழ் மண்ணின் உணர்வை மாணவர்கள் அனைவரும் பெற வேண்டும். ஒற்றுமையோடு வேற் றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி நமது சமூகத்தை வழிநடத்த வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், கே.எஸ்.மஸ்தான், சென்னை மேயர்ஆர்.பிரியா, மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்  சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா   சிறுபான்மையினர் நலஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி, துறையின் செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment