தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

 ‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!

நேர்காணல்: உடுமலை வடிவேல்

பெரியார், சுயமரியாதையை உயிர்ப்பிக்கின்ற வற்றாத நதி! அதன் இலக்கு, சுயமரியாதைக் கடல்! இது எல்லா மக்களுக்குமானது! அந்த சுயமரியாதை நதியில், ஜாதி, மத, பாலியல் பேதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே கலந்துவிடுவார்கள்! இது நேரடியாக மழைநீர், மண்ணுக்கு வருவதைப் போன்றது. தேக்கங்களில் உபரி நீரைத் திறந்துவிடுவார்கள் அல்லவா? அதுவும் அந்த சுயமரியாதை நதிக்குத்தான் வந்துசேரும். இது பரம்பரையாக சுயமரியாதைக்காரர்களாக இருப்பவர்களின் வாரிசுகள்! அவர்களை கைப்பிடித்து அழைத்துவந்து, சுயமரியாதை நதியை அறிமுகம் செய்வித்து, கலக்கவிடுவார்கள்! இன்னும் சிலர், நதியின் ஓட்டத்தை தடுக்க முயன்று, முடியாமல் தாமும் நதியுடன் சேர்ந்து சுகமடைவர்! இவர்கள் எதிர் சித்தாந்தக்காரர்கள்! சரியான புரிதலில்லாத வைதீகக் குடும்பங்களில் பிறந்த ஓரிருவர் இயல்பாகவே சுயமரியாதை உணர்வு பெற்று, எங்கெங்கோ ஓடிவிட்டு பின்னர் தானாக அந்த சுயமரியாதை நதியைத் தேடி வந்து, ’செம்புலப் பெயல் நீர்போல’ தாமாகக் கலந்துவிடுவர்! இவர்கள் சுயமரியாதைச் சுயம்புகள்! அப்படிப்பட்ட ஆயிரமாயிரம் சுயமரியாதைச் சுயம்புகளில் பா.தெட்சிணாமூர்த்தி எனும் பா.தென்னரசும் ஒருவர். அவரை 2023 சனவரி 2 ஆம் நாள் பட்டாபிராமில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடினோம்.

அய்யா வணக்கம்.

வணக்கங்கய்யா.. 

கேள்வி: முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: அம்மா  பவுனம்மாள், பிறந்தது பட்டாளம் தேவராஜ் முதலி தெருவில். அப்பா பாலகிருஷ்ணன், அவர் பிறந்தது ஆம்பூர், அப்பா காங்கிரஸ்காரர். கூடப் பிறந்தவங்க மொத்தம் ஏழு பேரு. நான் அஞ்சாவது பிள்ளை. 1947 இல் ’உமராபாத்’தில் பிறந்தேன். இது அன்றைய வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூரிலிருந்து 8 கி.மீ இருந்தது. அப்பாவுக்கு எழுதப் படிக்க தெரியாது. காமராசர் சொன்னார் என்று, எங்கப்பா 1965 இலேயே 5 ஆம் வகுப்பு வரையிலுமான தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். அதனாலேயே, இப்போதும் அந்தப் பகுதியில் ‘பள்ளிக்கூடத்தான் பேரன்’ என்றே எனக்கொரு பெயருண்டு. ஆனால், எனக்கு எட்டாம் வகுப்பு வரையில் படிக்கத்தான் வாய்ப்பு இருந்தது.

கேள்வி: ஓ... நீங்க எந்த வயதில் இயக்கத்திற்கு வந்தீர்கள்? 

பதில்: இயக்கத்திற்கு வருவதற்கு முன்பேயே இயக்க உணர்வு வந்துவிட்டதுங்கய்யா... எனக்கு 14 வயதிருக்கும்போதே தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. ஏன்னா? எங்கப்பா முஸ்லிம்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து, கைகட்டி நின்று எஜமான்னு சொல்லுவாரு. நான் அதை எதிர்த்துப் பேசுவேன். ’அவரும் மனிதர், நீங்களும் மனிதர், அவரை ஏன் எஜமான் என்கிறீர்கள்?’ என்பேன். இதற்காகவும் ”கோவிந்தா”ன்னு சொல்லச் சொல்லியும் கட்டிவைத்து அடிப்பாரு. ’முடியாது, ’கோவிந்தன்’ இருந்தால்தானே சொல்வதற்கு’ என்று, அந்த வயதிலேயே பதில் சொல்லியிருக்கேன். உமராபாத் என்ற இடத்திலிருக்கும் கைலாசகிரி மலைக்கு பறையர்களுக்கு ஒரு வழி? வசதி உள்ளவங்க போறதுக்கு ஒருவழி? ”ஏண்டா, ஆண்டவனைக் கும்பிடுவதற்கு இரண்டு வழியா?” என்று தகராறு செய்தேன். வேலூர் கலெக்டர் வந்தாரு! எனக்கு பதிலாக எங்க அப்பாவை கைது பண்ணிட்டாங்க. 

கேள்வி: ஓ, சரி, தந்தை பெரியாரை எப்போது சந்தித்தீர்கள்?

பதில்: 1956 அல்லது 1957 இல் என்று நினைக்கிறேன். ஆம்பூரிலிருந்து 10 கிலோ மீட்டரில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசினார். அப்போது அங்கிருந்த பார்ப்பன வழக்குரைஞர் குப்புசாமி என்ற பார்ப்பான் வைத்ததுதான் சட்டம். அவர் சுகர்மில் இயக்குநர் வேற? அறங்காவலர் குழுத் தலைவரும் அவர்தான். ஒரு மணியகாரருக்கு இருக்கிற அதிகாரம் அந்த பாப்பானுக்கு இருந்தன. பள்ளிக்கூட சான்றிதழா? அவன்தான் கையெழுத்துப் போடணும். ஜாதி சான்றிதழா? அவன்தான் கையெழுத்து போடணும். அவன் பில் பாஸ் பண்ணாதான், விவசாயிக்கு கரும்புக்கு கட்டிங் கிடைக்கும். இதற்காக ஆறு மாசம் வரைகூட விவசாயிகள் காத்துக்கிடப்பார்கள். பள்ளிக்கூட வாத்தியாருக்கு இரண்டு இலவச வீடுகள் இருக்கும். பாப்பான்தான் வாத்தியாரு. அப்புறம்? வீடும் அவனுக்குத்தான். வெள்ளைக்காரன் காலத்திலேயே இவங்க இந்த இடத்தை புடிச்சிட்டாங்க. இப்படி பலப்பல கொடுமைகள். அவர்களால் ஊரே பாதிக்கப்பட்டிருந்தது. கவுண்டர்கள், கம்மாநாயுடு, நாலு வகை செட்டியாருங்க எல்லாரும் சேர்ந்து, அந்த பார்ப்பானைக் கண்டித்துத்தான் பாலூரில் கூட்டம் போடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில்தான் பெரியார் பேசுகிறார். 

அந்தக் காலனியில் தினமணி, கல்கண்டு படிக்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ’பெருமாள்’ என்றொருவர் இருந்தார். கையில் தடியுடனும், அதன் நுனியில் பொரி மூட்டையைக் கட்டிக்கொண்டு தோளில் போட்டுக் கொண்டு வருவார். அவர்தான் எனக்கு பெரியார், காமராசர், தமிழ்வாணன் ஆகியோரைப் பற்றி படிச்சுப் படிச்சு சொல்வார். அந்தப் பெருமாள்தான், என்னை பெரியார் பேசுகிற அந்தக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அபோதுதான் பெரியாரை நான் நேரில் பார்த்தேன். அன்றைக்கு அய்யா பேசினது சரியாக நினைவு இல்லை. ஆனால், ’நான் இங்கே அறிவாளின்னு வரல! புத்திக் கூர்மை உள்ளவன்னு வரல! நான் சொன்னா நீங்க எல்லாத்தையும் கேட்டுக்கணும்னு நான் சொல்லல! என் மனசுக்கு பட்டதை நான் சொல்லப் போறேன். அதை ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் உங்க விருப்பத்தை பொறுத்தது’ அப்பிடின்னு பேசுனதுதான் நினைவில் இருக்கு. 

கேள்வி: உங்களுக்கு திராவிடர் கழகத்தில் சேரக்கூடிய வாய்ப்பு எப்போது வந்தது?

பதில்: 1962 இல் தொழில் செய்வதற்காக சென்னைக்கு வந்துட்டேன். அரசு உத்தியோகம் இல்லாததால் எனக்கு பொண்ணு குடுக்க மாட்டேன்னுட்டாங்க. வியாபாரத்தை அவர்கள் தொழிலாகவே கருதவில்லை. வேற வேலை பார்க்க வேண்டுமென்று எனக்கும் தோன்றவில்லை. ஆனால், வியாபாரத்தில்தான் கட்டுக் கட்டாக பணம் வந்தது. அப்போதுதான் எனக்கு அரசியல் தொடர்பு ஏற்பட்டது. சத்தியவாணிமுத்து 1967 தேர்தலில் நின்றார்கள். அவங்களுக்கு நானும் வேலை செய்தேன். காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ரொம்பத் தொல்லை கொடுக்கும். அப்போது சலூன் கடை, லாண்டரி கடைகள்தான் திமுகவுக்கு கிளைக் கழகம். அங்கேதான் பேச்சு! சந்திப்பு!

கேள்வி: ஓ...நீங்க முதலில் தி.மு.க.வில் இருந்தீர்களா?

பதில்: ஆமாங்கய்யா, 1968லேயே தி.மு.க. தொழிலாளர் கழகத்தில் உறுப்பினராக இருந்தேன். 1970 இல் தான், பட்டாளம் மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தை ஆசிரியர் துவக்கி வச்சாங்க. அந்த ஆண்டுதான் பகுத்தறிவாளர் கழகமும் தொடங்கப்பட்டது. அதற்குப்பிறகுதான் ஆசிரியர் தொடர்பு எனக்குக் கிடைத்தது. ஆசிரியர் என்னை தொழிற்சங்கத் தேர்தலில் நிற்கச் சொன்னார். நான், அழகிரி, வேலு, கருங்குழி கண்ணன், வெங்கடேசன், சண்முகம், குப்புராசு மச்சான் ஓட்டேரியில் இருக்கிற யமரோஸ் ஏழு பேருமே ’திராவிடர் கழக தொழிலாளர் அணி’யில் தேர்தலில் நின்று, வெற்றி பெற்றவர்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஆசிரியரிடம், ’தொழிற்சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கிடைக்கிற சலுகை காரணமாக கேளிக்கை, பொழுதுபோக்குன்னு ஊர் சுத்திட்டு இருப்பாங்க. அதனால கழகத்துக்கு பயன்பட மாட்டாங்க’ என்று சொன்னேன். ஆசிரியரும் அதை ஆமோதித்தார். 

அந்த சமயத்தில்தான் சங்கராச்சாரியார் பின்னி மில்லுக்கு வந்தாரு. நான், ’ஓடிப்போன சங்கராச்சாரிக்கு இங்கென்ன வேலை? பண்டு, பலகாரத்தோட சோறு போட வருகிறாரா?’ என்று தட்டியில் எழுதி வச்சிட்டேன். அப்போது கேண்டீனில் உணவு அஞ்சு ரூபாயிலிருந்து, அறுபது ரூபாய்க்கு விலை ஏத்தியிருந்தாங்க. அதைக் கண்டித்துத்தான் ஆர்பாட்டம், பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. என்னைக் கைது பண்ணிட்டாங்க. அதுக்கப்புறமும் பூஜை பண்றதுக்கு சங்கராச்சாரியாரை கூட்டிட்டு உள்ளே வராங்க. எங்க பக்கம் நாலு பேர் சேர்ந்து பம்பை அடிச்சாங்க. சத்தம் பெருசா இருந்துச்சு. சங்கராச்சாரி போயிட்டாரு. பூஜையும் நடக்கவில்லை. 

கேள்வி: திராவிடர் கழகத்திற்கு எப்போது வந்தீர்கள்?

பதில்: திராவிடர் தொழிலாளர் கழகம், திராவிடர் கழகம் என்று பொறுப்புகளுக்கு மாறி, மாறி வந்துட்டேன். தொழிற்சங்கத்தில் இருந்து மங்களபுரம் திராவிடர் கழகத் தலைவர். பிறகு, வட சென்னைக்கு செயலாளர். மறுபடியும் மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர். மறுபடியும் மங்களபுரம் கிளைக்கழகப் பொறுப்பு. அப்போது, பெரம்பூர் பாசறை பாலனின் அண்ணன் நெடுஞ்செழியனுக்குப்பிறகு, ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, ’தொழிலாளர் கழகத்தினுடைய தலைவரா இரு’ன்னு சொன்னாரு. அப்போதுதான் குணசீலன் ஓய்வுபெற்று வெளியே வந்தார். உடனே அவரைத் தலைவராகப் போட்டுட்டு, என்னைச் செயலாளராகப் போட்டாங்க. நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சைக்கிளிலேயே போவோம்; கூட்டம் போடுவோம். என்னை உடகார வைத்துக்கொண்டு குணசீலன் சைக்கிளை மிதிப்பாரு. சென்னையிலிருந்தும் ஆவடிக்கு வருவோம். செய்த பணிகளைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லுவோம். மாதவரத்தில் ’ஒருநாள் குடும்பவிழா!’ நடத்தினோம். அதில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்தினோம். ஆசிரியர் முழுமையாக உடனிருந்தார்.  

கேள்வி: உங்கள் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்க.

பதில்: 1975 இல் திருமணம் நடந்தது. இணையர் பெயர் உமாராணி. கொள்கையில் என்னைவிடவும் அவர் வேகமாக இருந்தார். ஜீவா, மீனா, சித்ரா ஆகியோர் மகள்கள். எல்லாரும் நன்றாக படித்திருக்கிறார்கள்; நன்றாக இருக்கிறார்கள். இணையர் உமாராணி, ’பெரியார் சமூகக் காப்பு அணித் தலைவர்’ உள்ளிட்ட, மகளிர் அணியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வந்திருக்கிறார்.

கேள்வி: பெரியார், மணியம்மையார் ஆகியோருடனான நேரடியான அனுபவம் பற்றி சொல்லுங்கள்

பதில்: பெரியாரிடம் நேரடியான அனுபவம் குறைவு. மணியம்மையார் கிட்ட சொல்ல முடியும். அதில் எப்போதும் நினைவிலிருப்பது அப்பல்லாம், காஞ்சிபுரம், திருத்தணி போன்ற வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கு திடலில் வைத்து சோறு போடணும். அப்போதிருந்த எம்.ஆர்.ராதா மன்றம் பள்ளமாக இருக்கும். அதில் ஓரமாக உட்கார வைத்துதான் சோறு போடுவோம். அப்பொழுது கவிஞர் வீட்டில் இருந்து கரண்டி, கிண்ணம் வாங்கிட்டு வந்து, வந்தவங்களுக்கு சோறு போட்டு அனுப்புவோம். சமைக்கிறதுக்கு எப்படியோ மணியம்மையார் ஆளுங்களை வைத்து செஞ்சிடுவாங்க. பரிமாறுவது, இலையெடுப்பது எல்லாமே நாங்கதான். ரொம்ப தூரம் போற தோழர்கள், பட்டினியா போகக் கூடாது அப்படிங்கறது மணியம்மையாரோட கருத்து. 

(தொடரும்....)


No comments:

Post a Comment