வன்முறையை தவிர்க்க கோவில்களை இழுத்து மூடிவிடலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 22, 2023

வன்முறையை தவிர்க்க கோவில்களை இழுத்து மூடிவிடலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 22 திருவிழாவை நடத்துவதில் யார் பெரிய ஆள்? என்று வன்முறைக்  களமாக கோவில்கள் பயன்படுத்தப்படுவதால், வன்முறையைத் தவிர்க்க கோவில்களை இழுத்து மூடிவிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு என்ற 92 வயது முதியவர், தன் மகன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "சீர்காழி நகரில் உள்ள ருத்ரா மகாகாளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு தீ மிதி உற்சவத் திருவிழா 23.7.2023 முதல்  1.8.2023 வரை நடைபெற உள்ளது.

 இந்த நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் விதமாக காவல்துறை பாதுகாப்பு கேட்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதியே மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்க வில்லை. எனவே, பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ஏ.தாமோதரன், "இந்த கோவிலில் திருவிழா நடத்துவ தில் 2 குழுக்களுக்கு இடையே பிரச்சினை உள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர் சமாதான கூட்டம் நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை" என்றார்.

நீதிபதி உத்தரவு

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:- இதுபோன்ற வழக்குகளை தினமும் இந்த நீதிமன்றம் விசாரிக்கிறது. கோவில் விழாவை யார் நடத்துவது? என்று ஒவ்வொரு கோவிலிலும் இரு குழுக்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக இறைவனை வழிபடத்தான் கோவில் உள்ளது. ஆனால், கோவில் திருவிழாக்கள் என்பது யார் ஏரியாவில் பெரிய ஆள்? என்பதை நிரூபிக்கும் வன்முறைக் களமாக உள்ளன. இதுபோன்ற கோவில் திருவிழா வில் பக்தி என்பதற்கு இடமே இல்லை. கோவில் என்பது இதுபோல வன் முறைக் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. இதுபோன்ற வன் முறையைத் தவிர்க்க கோவில்களையே மூடிவிடலாம். இதுபோன்ற வழக்குகளை இந்த நீதிமன்றம் தினமும் விசாரிப்பதே வேதனையாக உள்ளது. பக்தியே இல்லாத இதுபோன்ற கோவில் திருவிழா பிரச்சினையை தீர்ப்பதற்கு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வீண்தான். அவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கின்றனர். காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு இதைவிட முக்கியமான பணிகள் பல உள்ளன. எனவே, இதுபோன்ற கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க தேவை இல்லை. கோவில் திருவிழாவை, அகங்காரத்தை முன்னிறுத்தாமல், அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை அந்தக் குழுக்களுக்கே விட்டு விடுகிறேன். ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச் சினை ஏற்பட்டால், அதற்கு காரணமான நபர்கள் மீது சம்பந்தப்பட்ட காவலர்கள் சட்டப்படி நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். கோவில் திருவிழாவையும் மேற்கொண்டு நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி விடவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

 இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment