என்றென்றும் வழிகாட்டும் மறைமலையடிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

என்றென்றும் வழிகாட்டும் மறைமலையடிகள்

[சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950] 

மறைமலை இலக்குவனார்

தமிழ்ச் சான்றோர்களைக் குறிப்பிடும் போது வாலாயமாகக் கூறும் ‘தமிழ்த்தாயின் தவப்புதல்வர் களுள் ஒருவர்’ என்னும் சாற்றுமொழி அடிகளாருக்குப் பொருந்திவராது. ஏன்?ஏனைய சான்றோர்களைப் போன்று மொழிவளர்ச்சியிலும் இலக்கியப் படைப் பாக்கத்திலும் தம் புலமைத்திறமும் படைப்பாற்றலும் உறுதுணையாய்க் கொண்டு உழைத்ததுடன் அடி களார் அமைந்துவிடவில்லை.தமது அறிவுத்திறத்தைத் தகைமைசான்றதாக நிலைநிறுத்திய காலம் தொடங்கித் தம் வாழ்நாள்முழுமையும்  கண்ணை இமை காப்பதைப்போல் தமிழுக்கு எத்திசையிலிருந்தும் ஊறு வராமல் காப்பதே குறிக்கோளாகக் கொண்டு ஓயாது உழைத்து ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பதைப் போல் தமிழ்க்காப்புக் களம் அமைத்துப் பாடாற்றிய பெருந்தகை என்பதால் இவரைத் தமிழுக்குத் தாய் போன்ற தகைசால் புலவர் என அறிமுகம் செய்தலே பொருந்தும்.

தமிழினத்துக்கு இவர் தம் கொடையாக அளித்துச் சென்றுள்ள அறிவுக்கருவூலமாகிய நூல்களே இவரது மலையொத்த புலமைக்குச் சான்றளிப்பன.மருத்துவம், இயற்கை வாழ்க்கை, மொழியாக்கம், சைவம், மெய்ப் பொருளியல் ஆராய்ச்சி, பழந்தமிழிலக்கிய ஆய்வு, நல வாழ்வு, உளவியல், மரபுக்கவிதை, புதுமைநெறி மடல் இலக்கியம், புதினம்,நாடகம், இறையியல், மொழி பெயர்ப்பிலக்கியம், சிந்தனைக் கட்டுரைகள், தன் முன்னேற்ற இலக்கியம் அல்லது ஆளுமை வளர்ச்சி இலக்கியம், பண்பாட்டு ஒப்பியல்,சிறுவர் இலக்கியம் எனப் பல்வேறு இலக்கிய வகைமைகளில் தடம்பதித்த ஒரே தமிழறிஞர் இவரே.

ஆங்கிலத்திலும் மொழி ஆராய்ச்சி,பண்பாட்டு ஆய்வு,ஒப்பியல் ஆய்வு ஆகிய துறைகளில் நூல் படைத்தளித்தவரும் தமிழ்,ஆங்கிலம் எனும் இரு மொழிகளிலும் இதழ்நடத்தி இதழின் வாயிலாகவும் எழுதிக் குவித்தவரும் இவரே.

தமிழ்,ஆங்கிலம்,வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்ற அடிகளாரின் வடமொழிப்புலமை அக்காலச் சங்கராச்சாரியா ராலேயே பாராட்டப்பெற்றது.முப்புரிநூல் இல்லை யெனும் காரணத்தால் ஜாதிப்பாகுபாடு காரணமாக இவருக்கு வடமொழிக்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட  அவலச்சூழலிலும் ‘வடமொழி பயின்றே தீருவேன்’ என்னும் வைரநெஞ்சுடன் வடமொழி பயின்றுவந்த தனது பார்ப்பனத்தோழன்வழி வடமொழியறிவு பெற்றுப் பின் நூல்களின் துணைக்கொண்டு ஆழ்ந்த ஆய்வுடனும் கூர்த்த நோக்குடனும் செறிவும் விரிவும் மிக்க இலக்கிய இலக்கணநூல்களையும் வேதங் களையும் உபநிடதங்களையும்  கற்றதன் விளை வாகவே புலமையால் இமயம் ஒத்த பெருமையும் திண்மையும் பெற்றார்.

சிக்காகோ உலகச் சமய மாநாட்டுக்குச்  சென்று வந்த விவேகானந்தர் அங்கே வேதாந்தத்தை மட்டுமே அறிமுகப்படுத்தினார் என்னும் செய்தி யறிந்து சைவசித்தாந்தத்தை அவர் அறிந்திலர் என்பதைக் கேள்விப்பட்டுச் சூளை சோமசுந்தரநாயகர் (ஆகத்து 16,1846--பிப்ரவரி 22,1901) விவேகானந்தரைக் கருத்துப்போருக்கு அழைத்ததும் வேதாந்தமே முதன்மை மிக்கது என வாதிட்ட விவேகானந்தரை எதிர்த்து சைவசித்தாந்தமே தொன்மையும் முதன் மையும் வாய்ந்தது என்னும் தம் கருத்தைத் தக்க சான்றுகளுடன் சூளை சோமசுந்தரநாயகர் நிறுவி யதும் விவேகானந்தர் தம் தோல்வியை ஒப்புக் கொண்டதும் இன்றைய தலைமுறைக்குச் சொல்வார் இலர்.சைவசித்தாந்தத்தைத் தெரிந்துகொள்ளாமல் சிக்காகோ மாநாட்டுக்குச் சென்றது தம் தவறென விவேகானந்தர் ஏற்றுக்கொண்டார்.இதன் விளை வாகச்   ‘சைவ சித்தாந்த சண்ட மாருதம்’  எனவும் ‘பரசமயகோளரி’ எனவும் நாயகர் பாராட்டப்பட்டார்.

இதனைப் போன்றே மனோன்மணீயம் சுந்தரனார் விவேகானந்தரைத் திருவனந்தபுரத்தில் உள்ள தமது வளமனைக்கு அழைத்து விருந்துகொடுத்தபோது சிறுபான்மை உயர்வகுப்பினர் பெரும்பான்மை யோரை அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கும் கொடு மையை எதிர்த்து விழிப்புணர்வு தமிழ்நாட்டில் ஏற்பட்டுவருகிறது என்பதையும், வடநாடு இவ் வகையில் விழிப்புணர்வு கொள்ளாதிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.’உங்கள் கோத்திரம் என்ன?’ எனத் துறவி விவேகானந்தர் தம்மை வினவியகாலை இத் தகைய வினாக்களைத் தென்னகத்தில் கேட்க வேண்டாம் என மனோன்மணியம் சுந்தரனார் தெளிவுபடுத்தியுள்ளார்.

சோமசுந்தரநாயகரும், மனோன்மணியம் சுந்தர னாருமே மறைமலையடிகளுக்கு வேலைவாய்ப்புக் கிட்டவும் சான்றோர் அவையில் அறிந்தேற்புப் பெறவும் அடித்தளம் அமைத்தவர்கள் என்பதையும் இவர்களது அஞ்சாமையும் துணிவும் மறைமலை யடிகளின் ஆளுமை வீறுபெற்றோங்க அடித்தளமாயின.

சோமசுந்தர நாயகரின் மாணவர் மறைமலை யடிகள் பிற்காலத்தில் தனித் தமிழில் ஈடுபாடு கொண்டதால் அவரது ஆசான் நாயகரும்  தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார் என்பது அடிகளாரின் தமிழ்வீறு எத்தகையது என்பதற்குச் சான்றாகிறது.

சோமசுந்தர நாயகர் தம் மாணவரான மறை மலையடிகளைத் தம் மகனாகக் கருதி மதித்தார். மறைமலையடிகளும் அவ்வாறே தம் ஆசிரியரைப் பெரிதும் போற்றினார். சோமசுந்தர நாயகர் மறைந்த போது மறைமலையார் 'சோமசுந்தரக் காஞ்சி' யைப் பாடினார். மேலும் 'சோமசுந்தரக் காஞ்சியாக்கம்’ என்னும் நூலையும் 'சோமசுந்தர நாயகர் வரலாறு' என்னும் நூலையும் மறைமலையடிகள் எழுதினார்.

தமிழ்மறுமலர்ச்சிக்கும்  தமிழ்த்தேசிய உணர் வெழுச்சிக்கும் அடித்தளம் அமைத்த மனோன் மணியம் சுந்தரனாரின் தாக்கமே அடிகளார் இவ்விரு வரலாற்றுத் திருப்பங்களுக்கும் உந்துவிசையாகச் செயற்படக் காரணமாகியது.

அடிகளார் வள்ளலாரின் பாடலில் இடம்பெற்ற ‘உற்ற தேகம்’ என்னும் தொடரை ‘உற்ற யாக்கை’ எனக் கூறினால் சிறப்பாக இருக்கும் எனத் தம் அருமைத் திருமகளார் நீலாம்பிகையம்மையிடம் கூறியதன் விளைவும் தொடர்செயல்முறையுமே தமிழியக்கத்தின் தோற்றத்திற்குக் காரணமாயின என்பது உண்மைதான்.ஆனால் இதனைத் ‘தனித் தமிழியக்கம்’ என மொழித்தூய்மைவாதம் என்னும் ஒற்றைக் கோணத்தில் அணுகுதல் பெரும்பிழை.

மறைமலையடிகள் கண்டதும் நிறுவியதும் வழி காட்டியதும் தொடர்ந்து வழிகாட்டிவருவதும் தமிழி யக்கம் என்னும் களப்பணிக்குத்தான் என்பதைத் தமிழினம் உணரவேண்டும்.

ஆட்சிமன்றில் தமிழ், வழக்குமன்றில் தமிழ், உயர் கல்வியரங்குகளில் தமிழ், இசையில் தமிழ், கூத்து முறைகளில் தமிழ்,வணிகத்தில் தமிழ்,வழிபாட்டில் தமிழ் எனத் தமிழ் எழுச்சிபெறவேண்டும் என்ப தனைத்தான் அடிகளார் தமது ஒவ்வொரு பொழிவிலும்,ஒவ்வொரு கட்டுரையிலும்,ஒவ்வொரு நூலிலும் வலியுறுத்திவந்தார்.இத்தகைய முழுமை பெற்ற மறுமலர்ச்சி இயக்கமே தமிழியக்கம் என அடிகளார் அறிவுறுத்தியதைத் தெளிவுறப் புரிந்துகொண்டுதான் “தமிழியக்கம்’’ என்னும் கொள்கை விளக்கநூலைப் புர்டசிக் கவிஞர் பாரதி தாசனார் படைத்தளித்தார்.

எனவே அடிகளார் கண்டது “தனித் தமிழியக்கம்” என மொழித் தூய்மைவாதத்துக்குள் மட்டும் முடங்கிப் போய்விடாமல் ‘தமிழியக்கம்’ என்பது நாம் அடைய வேண் டிய தமிழ்மறுமலர்ச்சி என்பதை நினைவில் கொள் ளுங்கள்.

“மறைமலையடிகள் திராவிடம் என்னும் கருத்தாக்கத்தை தமிழியம் என்னும் கருத்தாக்கத்திற்கு எதிரான ஒன்றாக பார்த்தார். அது தெலுங்கர்களால் முன்வைக்கப்படுவது என தொடர்ந்து அய்யம் கொண்டிருந்தார். பின்னர் அவருடைய வழி வந்தவர்கள் திராவிட இயக்கத்துடன் இணைந்து செயல் பட்டாலும் தமிழியக்கத்தை திராவிடக் கருத்தி யலுக்கு எதிராக நிறுத்தும் போக்கு தொடர்கிறது. அதன் தொடக்கப்புள்ளி மறைமலையடிகளே.”

என்னும் தமிழ்விக்கியின் கூற்று போகிறபோக்கில் ஒரு கலகத்தை மூட்டிப் பார்க்கும் சாணக்கியக் குறும்பாகத் தோன்றுகிறது.

திராவிட இயக்கம் இல்லையெனில் அடிகளின் தமிழியக்கக்கனவு கனவாகவே போயிருக்கும். தமிழியக்கம் என்னும் தொடரிப்பாதையின் இரண்டு இணையச்சுகளாகத் திகழ்பவர்கள் அடிகளாரும் தந்தை பெரியாருமே ஆவர்.

அடிகளாரின் தமிழியக்கம் ஒரு புலமை முயற்சியாகச் சுருங்கிப் போய்விடாமல் மக்கள் இயக்கமாக விரிவுபெற்று ஒரு நூற்றாண்டு தொடர்ந்து வருவதற்குத் திராவிட இயக்கமே காரணம்.

மொழிப்பார்வையுடன் சமூகப்பார்வையும் ஒருங் கிணைந்து செயற்பட்டமையே இதன் வெற்றிக்குக் காரணமாக விளங்கியது.

வைதீகர்களும் சைவர்களும் ‘நமச்காரம்’ எனவும் வைணவர்கள் ‘சேவீச்சுக்கிறேன்’ எனவும் கிறித்த வர்கள் ‘ச்தோத்திரம்’ எனவும் இசுலாமியர்கள் ‘சலாம் அலைகும்’எனவும் சிற்றூர்ப்புறத்து அடித்தளமக்கள் ‘கும்பிடறேனுங்க சாமி” எனவும் தத்தம் ஜாதி சமயப் பின்புலத்தோடு வழங்கிய மரியாதைச் சொல் ‘வணக்கம்’ என்றானபின் ஜாதி சமய உணர்வு தொலைந்துபோவதைச் சுயமரியாதை இயக்கமே மக்கள்மன்றத்திற்கு அறிவுறுத்தியது. எனினும் பெரும் போராட்டத்துக்குப் பின்னரே இச் சொல் மக்கள் வழக்கில் நிலைபெறுவதில் வெற்றியடைய முடிந்தது. ”வணக்கம்’ என்று சொன்னாலே “நீ சு.ம.காரனா?’’ எனக் கேட்கும் காலம் ஒன்றிருந்தது.

தமிழியக்கம் முழுமையாக வெற்றி இலக்கை யடைய ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது.இன்னும் முழுமையான வெற்றியடையவில்லை. ஆட்சி மன்றும், வழக்கு மன்றும், வழிபடும் கோயிலும் முற்றிலும் தமிழ் கோலோச்சும் இடமாக இன்னும் மாறவில்லை.அடிகளாரின் வழியில் அவர் காட்டிய முனைப்புடன் நாம் செயற்படவேண்டும்.ஒன்று படுவோம் ’உழைப்போம் ; உறுதியாக வென்று விடுவோம்.


No comments:

Post a Comment