பிற இதழிலிருந்து... சிங்கப்பூர் சமூக இலக்கிய இதழ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

பிற இதழிலிருந்து... சிங்கப்பூர் சமூக இலக்கிய இதழ்

 'செம்மொழி' ஆசிரியரின் கேள்விகளுக்கு

'விடுதலை' ஆசிரியரின் விடைகள்!

டிசம்பர் 2, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர். பெரியார், மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர், ஆசிரியர், டாக்டர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள்!

இந்நாள், சுயமரியாதை நாளாக தமிழர்களால் எழுச்சியோடு இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல, வீரமணி என்ற பெயரை உச்சரித்தாலே சமூக நீதிதான் நம் நினைவுக்கு வரும்.

இந்த ஆண்டு ஆசிரியரின் 90ஆவது ஆண்டு பிறந்த நாள். 90 வயதை தொட்டிருக்கும், விழா நாயகர் தமிழர் தலைவர் அவர்கள் 80 ஆண்டு பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இது வேறு எந்தத் தலைவருக்கும் இருக்காத சாதனையாகும்.

தனது 80 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுக்கும் மிகத் துல்லியமான பதிவு வைத்திருக்கும் சாதனையாளர். பகுத்தறிவுக் கொள்கை தாங்கி 88 ஆண்டுகளாக வெளிவருகின்ற ஒரே தமிழ் நாளேடாக உலக அளவில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் 'விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகளாக இருந்து வரும் சாதனைக் குரியவராக ஆசிரியர் வீரமணி அவர்கள் திகழ்ந்து வருகிறார்.

ஆசிரியர் வீரமணியின் 90ஆவது பிறந்தநாளில், (2.12.2023) முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தார்கள்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான ஆசிரியர், டாக்டர் கி.வீரமணி அவர் களின் பிறந்தநாள் விழாவில் செம்மொழி ஆசிரியர் இலி யாஸ் தமது துணைவியாருடன் கலந்துகொண்டார்.

அன்றைய பரபரப்பான நாளிலும், செம்மொழி இத ழுக்காக மகிழ்ச்சியோடு நேர்காணல் தந்தார். அந்த நேர்காணல் இதோ...

90 வயதை எட்டியிருக்கும் உங்களுக்கு, சிங்கப்பூர்த் தமிழர்கள் சார்பாகவும், 'செம்மொழி' இதழின் சார்பாகவும் எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் இளமையின் ரகசியம் என்ன?

மிக்க நன்றி!

நமக்கு இளமையா? முதுமையா? என்ற கேள் வியை எழுப்பிக் கொள்ளாது; என் கொள்கைப் பயணத்தைத் தொடருவதே காரணமாக இருக்கலாம். உழைப்பிற்கும், லட்சியப் பயணத்திற்கும் வயது ஒருபோதும் தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதை எனது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பயின்று கொண்டு இருப்பவன் என்பதும் காரணமாக இருக்கக்கூடும்!

தொடர்ந்து கொள்கை ரீதியான வாக்குவாதங்கள். நாள்தோறும் எழுதுவது, பேசுவது, ஒரே மாதிரியான கருப்புச் சட்டை அணிவது இவற்றால் சலிப்பும், அலுப்பும் தட்டவில்லையா, உங்களுக்கு?

நாளும் கொள்கை வாழ்வு வாழுபவர்களுக்கு, பெரியாரைச் சுவாசிப்பவர்களுக்கு ஒருபோதும் சலிப்போ, அலுப்போ தட்டாது.

கருப்பு எம்மைப் பொறுத்தவரை வெறும் நிறமாக இருந்தால், அணியும்போது சலிப்பு, அலுப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி இல்லையே! மாறாக அது லட்சியப் பயண அடையாளச் சீட்டு என்கிற பாதுகாப்புக் கருவி என்கிறபோது சலிப்புத் தோன்றாது; இராணுவ வீரருக்கு உடை மிடுக்கே தவிர, சலிப்பு தருவது அல்லவே - அதுபோலத்தான்! 

முதன்முதலாக எந்த ஆண்டில், எப்போது கருப்புச் சட்டை அணிய ஆரம்பித்தீர்கள்?

கருப்புச் சட்டை அணியும் கட்டளைப் பிறந்த 1946 முதல் கருப்புச் சட்டை அணியும் கடமை ஏற்பட்டது.

கழகப் பொறுப்பினை ஏற்ற பிறகு, தொடர்ந்து இதை அணிவது எனது வழக்கமாகவே ஆகிவிட்டது: (சில விலக்குகள் எப்போது என்றால், மருந்துவமனை, மற்ற சில ஓரிரு இடங்களில்), 

எத்தனையோ தமிழ்நாட்டு முதலமைச் சர்களை நேரடியாக உங்கள் வாழ்வில் பார்த்து வந்திருக்கிறீர்கள்; ஒவ்வொரு வரிடமும் நீங்கள் கண்ட தனித்தன்மைகள், திறமைகளைப்பற்றி உங்கள் பார்வையில் சொல்லுங்கள்?

முதலமைச்சர் ஓமாந்தூரார் (ஓ.பி. இராமசாமி ரெட்டியார்) ஆட்சியில் கொண்ட நிலைப்பாட்டில் உறுதி மாறாத உறுதி கொண்ட நெஞ்சத்தவர்.

முதலமைச்சர் காமராசர் எளிமையோடு, எதையும் நடைமுறைக் கண்ணோட்டத்தில் வெகுமக்கள் உணர்வை மதித்த கல்வி வள்ளல்.

முதலமைச்சர் அண்ணா மாற்றாரைத் தனது பக்குவப்பட்ட அணுகுமுறையால் கவர்ந்த தடம் மாறாத கனிவுமிக்க மனிததேயம். அனை வரையும் அரவணைக்கும் அன்பின் விளைச்சல்.

முதலமைச்சர் கலைஞர் கடும் உழைப்பும், ராஜதந்திரம் கலந்த வெற்றியும் அணைத்த உறுதிப்பாடு கொண்ட ஆளுமை நாயகர் - வெற்றி, தோல்விகளால் பாதிக்கப்படாத தனிமைத்துவ உறுதி!

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அரசியல் எதிரிகளின் முடிவி னைக்கூட பரிசீலித்து, தனது அன்பாலும், அணுகுமுறையா லும் கவர்ந்த காந்த முதலமைச்சர். ஈகை வள்ளல்,

முதலமைச்சர் ஜெ.ஜெய லலிதா துணிச்சலின் சிகரம். அச்சம் அறியாத ஆளுமையின் பீடம்! எதையும் உடனுக்குடன் புரிந்துகொள்ளும் பக்குவப் பேழை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "சமூகநீதியின் சரித்திர நாயகர்' - உழைப்பாலும், அமைதியான ஆளுமையாலும் தளும்பாத ஆற்றொழுக்கம். அவசரப்படாத ஆளுமை  - நிதானத்துடன் எதையும் பதற்றமின்றி அணுகும் அற்புத வீரர்.

மேற்காட்டிய அத்துணை முதல மைச்சர்களும் பெரிதும் 'பெரியாரைத் துணைக்கோடல்' கொண்டு ஒழுகிய பெருமக்கள் ஆவர்.

சிங்கப்பூர் அன்றும் (1967 - 2022) இன்றும்? 

அன்றைய சிங்கப்பூர் எழுப்பப் பட்டுக் கொண்டிருந்த மாளிகை (1967).

இன்றைய சிங்கப்பூர் கட்டி முடிக் கப்பட்ட மற்ற நாடுகள் பார்த்துப் பாடம் பெறும் மகத்தான ஆளுமை அரண் மனை! (2022).

நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ வைப்பற்றி?

நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ ஓர் அதிசய பல்கலை ஆளுமை ஒப்பற்ற ஆட் சியாளர் பல நாடுகள். இந்த சிறிய நாட்டில் திகழும் இவ்வளவு பெரிய ஆளுமைபோல நம் நாட்டிற்கு வாய்ப்பு ஏற்பட வில்லையே என்று ஏங்கும் வண்ணம் எழிலார்ந்த மக்கள் தலைவர்

கட்டுப்பாட்டின்மூலம் வளர்ச் சியை நாளும் பெருக்கிய எடுத்துக் காட்டான ஏந்தல் அவர்!

எதிலும் தனித்தன்மையாளர். பல் வேறு இனத்தவரை ஒருங்கிணைத்த மனிதநேய ஆளுமைச் செம்மல்!

தமிழவேள் கோ.சாரங்கபாணி, வை.திருநாவுக்கரசு, தேவன் நாயர், எஸ்.ஆர்.நாதன் ஆகியோரைப்பற்றி உங்கள் பார்வை?

தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ் மக்கள் தனி இடம், தனிப் பெருமையுடன் வாழ வழிவகுத்த, குடியுரிமை பெற வைத்த வள்ளல் - அன்றாட அறிவுப் பணி ஆயுதம் அவரது 'தமிழ்முரசு'.

வை. திருநாவுக்கரசு அவரைப் பின்பற்றி தமிழுக்கும், 'தமிழ் முரசு' ஏட்டுக்கும் ஏற்றம் வழங்கிட அதிக விளம்பரமின்றிப் பணி செய்த ஆளுமைத் தோழர்.

மேனாள் அதிபர் தேவன் நாயர் நடமாடும் பல்கலைக் கழகம்போல் படிப்பும். நுண்ணறிவும், பண்பாடும் மிக்க, ஆளுமை நிறைந்த பண்புப் பெட்டகம் - பயில்தொறும் பண்பாளர்.

மேனாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பின்னரும் சிங்கப்பூருக்குத் தனது தொண்டைத் தந்தும் உயர்த்திட உழைத்த மாமேதை - தமிழ் இனத்தின் ஒளிவீச்சு அனை வரையும் கவர்ந்த ஆளுமை - அன்பு மனம் கொண்ட மனிதநேயர் !

பல நாடுகளைச் சுற்றி வந்தவர் நீங்கள். சிங்கப்பூர்த் தமிழர்களைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

சோம்பல் அறியாது உழைப்பவர்கள் - மொழி உணர்வு, இனப்பற்றுடன் சிங்கப்பூரியர்களாகவே வாழ்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் நற்குடி மக்கள்.

கழகம் - பல்கலைக் கழகம் இரண்டுக்கும் தலைமைப் பொறுப்பேற்று திறம்பட நடத்திவரும் உங்களுக்கு எது மனநிறைவைத் தருகிறது?

இரண்டு கண்களும், இரண்டு காதுகளும், இரண்டு கால்களும், இதயம், மூளை என இரண்டும். இரண்டு கைகளும் எனக்கு முக்கியமே! எது முக்கியம் என்ற கேள்விக்கு விடை எளிதானதல்ல.

கழகம் அடித்தளம் - அஸ்திவாரம்.

கல்வி - பல்கலைக் கழகம் அதனால், உயரமாக எழும்பி நிற்கும் அறிவகம்! இல்லையா?

இப்போது எது முக்கியம்? நீங்களே சொல்லுங்கள்!

முதன்முதலாக உங்கள் 75ஆவது பிறந்த நாள் விழாவில் நீங்கள் கலந்துகொண்டபோது, அன்றைய முதலமைச்சர் டாக்டர் கலைஞரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தீர்கள். இப்போது 90 ஆவது பிறந்த நாளின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களிடம் கோரிக்கை ஏதும் வைக்கவில்லையே, ஏன்?

இன்று அதுபோல் கோரிக்கை எழுப்புவதற்கு அவசியமே இல்லாமல் போனது. ஏனென்றால், 'பெரியார் உலகம்' திட்டத்திற்கு இன்றைய முதல மைச்சர் ஆட்சிக்கு வந்தவுடன் அனுமதி அளித்து விட்டார்; கேட்பதற்கு முன்னே விடை கிடைத்து விட்டதே!

நன்றி: 'செம்மொழி' (ஜனவரி - மார்ச்  - 2023)

ஆசிரியர் வீரமணியின் 90ஆவது பிறந்த நாளின்போது செம்மொழி ஆசிரியர் இலியாஸ் தமது துணைவியாருடன் சென்னை சென்று பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்த போது....


No comments:

Post a Comment