அங்கே - இங்கே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

அங்கே - இங்கே!

அங்கே: கொலம்பிய அமேசான் காடுகள் - கொடிய விலங்குகள் வாழும் அந்தக் காட்டிற்குள் ‘வயர்லெஸ்’ கருவிகளில் உண்டான இரைச்சலையும் தாண்டி ஆரவார ஒலி கேட்டது. 2023 ஏப்ரல் 1ஆம் தேதி காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அந்நாட்டு இராணுவத்தினர் மகிழ்ச்சியுடன் அறிவித்ததின் வெளிப்பாடுதான். 

அந்த அமேசான் வனப் பகுதியை ஒட்டிய கிராமமான அராரா குவாராவில் விபத்து நடந்தது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், ஒரு வயது குழந்தை அவர்களின் தாய், விமான ஓட்டி உள்பட ஏழு பேர் ‘சென்னர்’ எனும் ஒற்றை இயந்திரம் பொருந்திய இலகுரக விமானத்தில் கடந்து பயணம் மேற்கொண்டனர். திடீரென்று அந்த விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. சற்று நேரத்தில விமானம் மறைந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கியது. விபத்து நடந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு கடந்த மாதம் மே 16ஆம் தேதி நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்களும், பயணிகள் மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது.  அது கொடிய மிருகங்களும் உயிர்க்கொல்லி பூச்சிகளும் காணப்படும் பகுதி.

காட்டுக்குள் அந்தக் குழந்தைகள் தவித்து வந்துள்ளனர். காணாமல் போன சிறுவர்களுக்காக காட்டில் ஆங்காங்கே உணவுப் பொட்டலங்கள் வீசப்பட்டது. இந்நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் 150 ராணுவ வீரர்கள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 200 பேர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

விமான விபத்துக்குப் பின்னர் தங்களிடமிருந்த ஃபெரினா என்ற மாவை உட்கொண்டு அக்குழந்தைகள் உயிர் வாழ்ந்தனர். இம்மாவு தீர்ந்ததும் காட்டில் உள்ள பழங்கள், விதைகளை உண்டு உயிர் வாழ்ந்தனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். குழந்தைகள் பலகீனமாக இருந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இங்கே: ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளியம்மாள் வரலாறு, வள்ளி முருகன் திருமணம் குறித்து ஆண்டுதோறும் ஏதாவது முருகன் கோயிலில் கும்மி பாட்டு பாடி நடனமாடி வழிபடுவது வழக்கம். நிகழாண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஆசிரியர் தமிழச்சி தாரணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி - முருகன் திருமணம் குறித்து கும்மி பாட்டு பாடியும், நடனமாடியும் வழிபாடு செய்தனர். இதில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 7 வயது சிறுமி முதல் 70 வயதுள்ள பெண்கள் வரை கலந்துகொண்டனர். ஒரே குழுவாக இணைந்து கும்மி பாட்டு நடனம் ஆடுவதால் மன அழுத்தம் நீங்கி, உடலும் மனமும் ஆரோக்கியம் அடைவதோடு தன்னம்பிக்கை ஏற்படுமாம். என்னே மூடநம்பிக்கை!

நன்றி!

இப்படிக்கு,

- எஸ்.நல்லபெருமாள், வடசேரி

No comments:

Post a Comment