பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூர ஆணவக் கொலை: பெற்றோர்களே துப்பாக்கியால் சுட்ட கொடுமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூர ஆணவக் கொலை: பெற்றோர்களே துப்பாக்கியால் சுட்ட கொடுமை!

போபால், ஜூன் 20 - மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷிவானி (வயது 18). இவரும், அருகில் உள்ள பாலுபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராதேஷ்யாம் (21) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.அவர்கள் இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்றபோதும், அவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி முதல் இளம்பெண் ஷிவானியும், இளைஞர் ராதேஷ்யாமும் காணாமல் போய் விட்டனர்.இதுகுறித்து ராதேஷ்யாமின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். 

ஷிவானியின் குடும்பத்தினர்தான் அவர்களை கொலை  செய்திருக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டினர்.ஆனால், காதல் இணை வேறு ஊருக்கு ஓடிச் சென்றிருக் கலாம் என்று முதலில் கூறிய காவல் துறையினர், இணையரின் குடும்பத்தினரின் தொடர் வற்புறுத்தலால் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் குடும்பத்தினரிடம் அவர்கள் துருவித் துருவி விசாரித்தனர்.

அப்போது ஷிவானியின் தந்தை ராஜ்பால்சிங் தோமர், தாங்கள்தான் கடந்த 3ஆம் தேதி காதல் இணையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றோம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும், அன்று இரவு தானும், தமது குடும்ப பெண்களும் சேர்ந்து காதலர்களின் உடல் களுடன் கனமான கற்களை கட்டி, முதலைகள் நிறைந்த சம்பால் ஆற்றில் வீசிவிட்டதாகவும் தெரிவித்தார். அதை யடுத்து அந்த ஆற்றில் காதலர்களின் உடல்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினரையும், நீச்சல் வீரர்களையும் காவலர்கள் ஈடுபடுத்தியுள்ளனர்.

கொலை நடந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், காதலர்களின் உடல்கள் முதலைகள் அல்லது மீன்களுக்கு இரையாகியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.காதலர்களின் உடல்கள் கிடைத்தால்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆணவக் கொலை, மத்தியப் பிரதேசத்தை அதிரவைத்துள்ளது.

No comments:

Post a Comment