தில்லை பொன்னம்பல மேடை வழிபாடு தடை ஆண்டவன் வேடிக்கை பார்க்கலாம் 'திராவிட மாடல்' அரசு வேடிக்கை பார்க்காது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

தில்லை பொன்னம்பல மேடை வழிபாடு தடை ஆண்டவன் வேடிக்கை பார்க்கலாம் 'திராவிட மாடல்' அரசு வேடிக்கை பார்க்காது

த.சீ.இளந்திரையன் 

திராவிடர் கழக  இளைஞரணி மாநில செயலாளர்

ஊருக்கு ஊர் ஒரு சிறப்புண்டு. தில்லை எனும் சிதம்பரத்தில் சிறப்பும் உண்டு. தீட்சிதர்களால் சிக் கலும் உண்டு. நேற்று இன்றல்ல சிக்கல். புராண காலத் திலிருந்தே தொடங்கி விட்டது. ஆம்,  'தில்லைக்கு வா' என்று நந்தனை ஈசன் அழைக்க ஈசனின் அழைப்பை ஏற்று தில்லை சென்றாராம் நந்தன்.

 நந்தன் சிதம்பரத்து எல்லையில் தங்கினாராம். அப்போது, அந்தணர்களின் கனவில் தோன்றிய ஈசன் நம் பக்தன் திருநாளைப் போவார் ஊருக்கு வெளியே  தங்கியுள்ளார் அவரை சிறப்பு செய்து அழைத்து வாருங்கள் என்றாராம்.

 ஊரே திரண்டு சென்று சிறப்பு செய்து நந்தனாரை கோயிலுக்கு அழைத்து வந்தார்களாம். அப்போது அதிலிருந்த அந்தணர் ஒருவர், "ஈசன் கனவில் சொன்னார் என்று ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தவனுக்கு கும்பமரியாதை செய்து கோயிலுக்குள் அழைப்பதா? இதை ஏற்க முடியாது. ஈசன் கனவில் சொன்னது உண்மையாக இருக்குமானால் இங்கே ஓர் அக்னி பரீட்சை வைப்போம். திருநாளைப் போவார் என்று இறைவனே அழைத்ததாக நீங்கள் சொல்லும் இவர் அக்னியில் இறங்கி திரும்பட்டும் பார்க்கலாம்.” என்று அந்தணர் சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்களாம். 

ஆனால், நந்தனோ தீயில் சென்று பெரும் ஜோதியாக இறைவனை அடைந்தாராம். நிற்க, கனவில் வந்த ஈசன் நேரில் வந்து என் உத்ரவையே மீறுகிறாயா என்று அந்த தீட்சிதரை கேட்டிருந்தால் நந்தன் பிழைத்து, இன்னும் சிவன் புகழ் பாடியிருப்பானே!

 அன்று ஆண்டவன் சொல்லியும் நந்தனுக்கு வழிவிட மறுத்தார்கள் இன்றோ அரசாங்கம் சொல்லியும் பக்தர்கள் பொன்னம்பல மேடையில் (கனகசபை ) ஏறி ஆண்டவனை வணங்க வழிவிட மறுக்கிறார்கள். ஆண்டவன் ஈசன் வேண்டுமானால் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் 'திராவிட மாடல்' அரசோ அப்படி பொறுத்துக் கொண்டிருக்காது. 

சிதம்பரம் நடராஜன் கோயில் திருத்தேர் விழாவையொட்டி, கனகசபையில் பொதுமக்கள் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாள்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாகக் கோயில் தீட்சிதர்கள் கனகசபை வாயிலில் அதற்கான பதாகையை வைத்தனர். திருவிழா முடியும் வரை, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து  சிதம்பரம் தில்லைக்காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமாருடன் கோயிலுக்குள் சென்றனர்.

கோயிலுக்குள் கனகசபை அருகே சென்ற செயல் அலுவலர் சரண்யா மற்றும் பணியாளர்கள் `பக்தர்கள் கனகசபை மேல் ஏறக்கூடாது` என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதாகையை ஏன் அகற்றுகிறீர்கள் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கு செயல் அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் "அரசாணையை மீறி கனகசபை மீது ஏறக்கூடாது" என பதாகை வைக்கக் கூடாது. இதை உடனடியாக அகற்றுங்கள் என கூறினார். ஆனால் தீட்சிதர்கள் பதாகையை அகற்றாமல் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

கனகசபை விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் பரணிதரன் கூறியதாவது: “கனக சபை மீது பக்தர்கள் அனைவரும் நின்று தரிசனம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  

இந்நிலையில் தீட்சிதர்கள் இதுபோன்ற செயல் களில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக சார் ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரி களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நல்ல முடிவு வரும். இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு இந்த ஆணை பிறப்பித்தது” என தெரிவித்தார்..

இதனைத் தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி மாலை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தீட்சி தர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது. பதாகை அகற்றிய பிறகும் தீட்சிதர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கனக சபையில் ஏறி வழிபட மறுத்து வந்தனர். இந்த நிலையில், ஜூன்.27 மாலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெமினி எம்.என். ராதா உள்ளிட்ட சிலர்  கனகசபை வாயிலில் அமர்ந்து கனக சபையில் வழிபட அனுமதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு கூட்டமாகச் சென்று, கனக சபையில் வழிபடுவதற்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள். இதனால், கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், அரசு ஆணையை நிறை வேற்றும் வகையில் கனக சபையின் மற்றொரு வழியாக காவல் துறையினருடன் ஏறிச் சென்றனர்.

தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளி, கனக சபையை பூட்டிவிட்டு கீழே வந்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். 

பரபரப்பான இந்தச் சூழலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஒரு வழியாக கனகசபை மீது அதிகாரிகள் துணையுடன் பக்தர்கள் சென்று வழிபாடு செய்தனர் என்ற போதிலும் இரு தரப்பிற்கும் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை திராவிடர் கழகம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 

தில்லை நடராஜன் கோயில் தொடர்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பேச்சு தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதாவது,

சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது தானா? உண்மை வரலாறு என்ன?

முதலாம் ராஜராஜன் முதலாவது ராஜேந்திர சோழன் ஆகியோரின் மனைவிகள், தங்கைமார்கள் 50 வேலி நிலங்களை சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். எதற்காகத் தெரியுமா? நடராஜன் கடவுள் முன் தேவாரம், திருவாசகம் ஓதுவதற்காகத்தான்.

அவ்வாறு அங்கு ஓதப்படுகிறதா? தேவாரம், திருவாசகம் பாடிய ஆறுமுகசாமி என்கிற முதிய வரான ஓதுவாரை இதே சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் அடித்து உதைக்கவில்லையா? நீதிமன்றம் உத்தரவுப்படியல்லவா தேவாரம் திரு வாசகம் ஓதுவதற்கு அனுமதி கிடைத்தது (2.3.2008).

சிதம்பரம் நடராஜன் கோயிலில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து சிதம்பரத்தில் தனிக் கூட்டம் போட்டு பொது மக்களுக்கு உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறினேன் (5.4.1982) அது சிதம்பர ரகசியம் எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்

1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. அப்பொ ழுதே சிதம்பரம் தீட்சிதர்கள் கூக்குரல் போட்டதுண்டு.

அப்பொழுது இந்து அற நிலையத்துறை தலைவராக இருந்து நீதிபதி சதாசிவ அய்யர் தீட்சிதர்களின் மனுவின்மீது கீழ்க்கண்ட தீர்ப் பினை அளித்தது குறிப்பிடத்தக்கது (31.12.1925).

இந்தக் கோயிலுக்கு நகைகள் தவிர வேறு சொத்துக்கள் எதுவுமேயில்லையென்று தீட்சிதர்கள் சொல்லுவதும்  சரியல்ல. ஆகவே  தீட்சதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்துள்ளனர்.  மேற் கண்ட ஆலயத்திற்கு எந்தவித வரவு - செலவு கணக்குகளையும் வைக்காமல், தீட்சதர்கள் நம் பிக்கைத் துரோகக் குற்றச் சாட்டிற்கு உள்ளாகிறார்கள் என்று இந்து அறநிலையத்துறைப் பாதுகாப்புக் குழுத் தலைவராக இருந்த சதாசிவ அய்யரே எழுத்துப் பூர்வமாகக் கூறிவிட்டாரே!

நீதிபதி டி. முத்துசாமி அய்யர் 

என்ன சொன்னார்?

1883இல் இந்தக் கோயில் தீட்சிதர் களிடையே இரு குழுக்கள்- பிளவுகள் ஏற் பட்டன. குத்தகை வசூல், சிப்பந்திகளுக்குச் சம்பளம், ஆலய பழுது பார்த்தல், கோயில் திருவிழா நடத்துதல் ஆகியவற்றில் செலவு செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிணக்கு அது. வழக்கு நீதிமன்றம் சென்றது. தென்னாற்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது (ஓ.எஸ்.எஸ்.7/1887) அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் சென்றது.

1888இல் நடைபெற்ற இந்த வழக்கினை திருவாரூர் டி.முத்துசாமி அய்யர், ஷெப்பர்டு(Sheperd) என்ற வெள்ளைக்காரர் அடங்கிய அமர்வு(Division Bench) விசாரித்துத் தீர்ப்பும் கூறியது.

முற்காலம் தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோகப்பட்டு வந்து இருக்கிறது. இக்கோயில் தீட்சதர்களுக்கு சொந்த சொத்து என்பதற்குச் சிறுதுளியும் ஆதாரம் கிடை யாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்களே!

தில்லையில் தமிழில் பாடுவதற்கு அனுமதி யில்லை. பொன்னம்பல மேடையில் ஏற அனுமதி மறுப்பு. உண்டியல் காசுக்கு கணக்கில்லை. இப்படி தனிதர்பார் நடத்தும் தீய தீட்சிதர்களின் கொட்டத் துக்கு திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிதம்பரம் மக்களின் வேண்டுகோள்!


No comments:

Post a Comment