கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்! [2]
(Presence of mind and quick action)
நூற்றாண்டு விழா நாயகர் நமது கலைஞரின் சாமர்த்தியமான; சமயோஜித நடவடிக்கைப்பற்றி முன்பு - பகவத் கீதையை கோபாலபுரம் வந்து தந்த திருவாளர் இராம. கோபாலனிடம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய 'கீதையின் மறுபக்கம்' நூலினை மறுதலை அன்பளிப்பு அளித்து படிக்கச் சொன்ன நயத்தக்க நாகரிகச் 'சொடுக்கு' எவரும் வியக்கும் எதிர்வினைச் செயலாக்கம் அல்லவா?
அதுபோல அவர்தம் நீண்ட பொது வாழ்வில் சட்டமன்ற நடவடிக்கைகளில் சிக்கலான நிலைமைகளைக் கூட சிரிப்பு வரும்படி செய்து, தனது கெட்டிக்கார பதிலால் எவரையும் சிரிக்க வைத்து, அவரது அறிவாற்றலை பாராட்டும்படியும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன!
ஒரு சம்பவம்: அவரது அமைச்சரவையில் முதல் முறையாக அமைச்சராக ஒரு பட்டதாரி இளைஞர் -
அவரது துறை சம்பந்தப்பட்ட மான்யக் கோரிக்கை பட்ஜெட் விவாதத்தின்போது, அவரது உரை அச்சிட்ட குறிப்புகள் துணை கொண்டு அமைச்சர் விளக்கம் கூறிப் பேசி வந்தநேரத்தில், அதே பக்கத்தை தவறுதலாக மீண்டும் அதில் இணைத்ததையும் கவனிக்காமல் இரண்டாவது முறை(Repetition) யாகவும், அந்தப் பக்கத்தை வேகமாகப் படித்து முடித்தார்!
எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் உடனே எழுந்து, ஒரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி அமைச்சர், கூறியதையே மீண்டும் கூறினார் என்று அவைத் தலைவரிடம் சற்று கேலி தொனிக்கும் வகையில் கூறினார்!
முதல் அமைச்சர் கலைஞர் இதனை ஆரம்பத்திலேயே கவனித்து விட்டார்! இடையில் குறுக்கிட முடியாது; அநேகமாக யாரும் கவனித்திருக்க வாய்ப்பிருக்காது என்று எண்ணி அமைச்சரை சபை முடிந்த பிறகு அழைத்துத் திருத்திட நினைத்து பொறுமையுடன் இருந்தவரை எதிர்க்கட்சி உறுப்பினரின் இந்த சுட்டிக் காட்டல் மனதளவில் சற்று உறுத்தலாக இருப்பினும், நிலைமையை சமாளித்திட முதல் அமைச்சர் கலைஞர் எழுந்து நின்று,
"ஆம், நமது அமைச்சர் அவர்கள் இரண்டாம் முறையும் ஒரு குறிப்பைப் படித்தார் என்பதை நானும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.
அதை அவர் தவறுதலாகவோ, கவனக் குறைவாகவோ படிக்கவில்லை; மாறாக, சில உறுப்பினர்கள், - இவர் குறிப்புகளைக் கூறியது போது சற்று கண் அயர்ந்திருந்த நிலையை கவ னித்து விட்டு, அவர்களுக்கு அச்செய்தி போய்ச் சேர வேண்டுமே என்பதற்காகத்தான் மீண்டும் இரண்டாவது முறையாகப் படித்தார்" என்றார்!
அவையில் ஒரே கைத்தட்டல் - கலகலப்பு - சிரிப்பு - எல்லாம்! தனது இளைஞரான - புதுமுகமான சக அமைச்சரை தக்க சமயத்தில் "காப்பாற்றியதும்", அவை நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பதோடு, கலகலப்பை உண்டாக்கி யதும் அவரது கூர்த்த சமயோஜித புத்தி!
மற்றொரு முறை அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதல் அமைச்சர். அப்போது, திருச்செந்தூர் கோயிலில் வேல் காணாமற் போனதைக் கண்டுபிடித்த, சுப்பிரமணிய பிள்ளை என்ற அதிகாரி மரணம் - இவைகளுக்கு "நீதி கேட்டு நெடிய பயணத்தை" மதுரையிலிருந்து துவங்கி நடத்தி பிறகு திரும்பிய நிலையில், சட்டமன்ற நடவடிக்கை நடந்தபோது, ஆளுங்கட்சிக் கொறடா முசிறிபுத்தன் என்பவர், "எதிர்க்கட்சித் தலைவர் வேலைத் தேடிப் போனார்; இவர் போவது அறிந்து முருகனே திருச்செந்தூரிலிருந்து வெளியே போய் விட்டார்" என்று கலைஞரைக் கேலி பேசினார். அவையில் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அதனைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் குறுக்கிட்டு நிதானம் பொங்க பதிலளித்தார்.
"நான் நடைப்பயணம் சென்றது காணாமற் போன வேலைத் தேடித்தான். ஆனால் மாண்புமிகு ஆளுங்கட்சி உறுப்பினர் பேச்சி லிருந்து மற்றொரு விஷயமும் மறைக்கப்பட்டது தெரிய வருகிறது. திருச்செந்தூர் முருகனும் காணாமற் போய் விட்டார் என்ற தகவல். இப்போது மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதையும் கண்டுபிடிக்க ஆவன செய்வாரா?" என்றார்.
முதல் அமைச்சர் முதல் குற்றம் சாட்டியவர் வரை அவை முழுவதும் சிரித்து மகிழ்ந்தார்கள்!
"கலைஞர் கலைஞர்தாம்பா", என்ற மெல்லிய குரல் அனைத்துக் கட்சியினரிடமும் சபை முழுவதும் எதிரொலித்தது.
(வளரும்)

No comments:
Post a Comment