இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும்கூட1956 வரை தொடர்ந்து கேரளத்தில் நடந்த தோள்சீலைப் போராட்ட வரலாறு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும்கூட1956 வரை தொடர்ந்து கேரளத்தில் நடந்த தோள்சீலைப் போராட்ட வரலாறு!

மணிமலர்காவு போராட்டத்தை ஒருங்கிணைத்த தேவகி நம்பீசனுக்கு வீரவணக்கம்! 

தொடரட்டும் மனித உரிமைப் போராட்டம்! 

1956 வரை தொடர்ந்து கேரளத்தில் நடந்த தோள்சீலைப் போராட்ட வரலாறு! மணிமலர்காவு போராட்டத்தை ஒருங்கிணைத்த தேவகி நம்பீசனுக்கு வீரவணக்கம்!  தொடரட்டும் மனித உரிமைப் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  அவரது அறிக்கை வருமாறு:

பெண் விடுதலைக்கான தடத்தில் எவ்வளவு நீளமான தடை தாண்டும் ஓட்டத்தைக் கடந்து வந் திருக்கிறோம் என்று அறிந்துகொள்வது, இன்னும் கடக்க வேண்டிய தொலைவுக்கான நம்பிக்கையைக் கொடுக்கக் கூடியது.

இளைய தலைமுறைக்கு 

எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பு!

தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண் டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உரிமைக் கான குரல் எழுப்பத் தொடங்கியதே கொண்டாட்டத் திற்குரிய ஒன்று தான் என்ற வகையில் தான் தோள் சீலைப் போராட்டத்தின் இருநூறாம் ஆண்டு, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு, சேரன்மாதேவி  குருகுலத்தில் உணவிலும், உணவுக் கூடத் திலும் சம உரிமைக்கான போராட்டத்தின் நூற்றாண்டு ஆகிய வற்றை நாம் நடத்துகிறோம். இந்த வரலாறு களை மீண் டும் மீண்டும் எடுத்துச் சொல்வதன் மூலம் - நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வதன் மூலம் மீண்டும் அத்தகைய நிலைக்கு நாம் போய்விடக் கூடாது என்பதை எச்சரிக்கையாக இளைய தலை முறைக்கு எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்புகளே இவை.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், அதையொட்டிய பகுதிகளிலும் வாழ்ந்த பார்ப்பன ரல்லாதபிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் மாராப்பு எனப்படும் மார்புச் சீலை அணியக் கூடாது; தங்கள் மார்பை மறைக்கக் கூடாது; முலை வரி விதிக்கப்படும் என்றெல்லாம் இருந்த கொடுமையை எதிர்த்துத் தம் மார்பகங்களை அறுத்துக் கொடுத்து உயிர் துறந்த வீராங்கனை நங்கேலி போன்றோரின் வீரஞ்செறிந்த ஈகத்தால் ஊக்கம் பெற்று, கிறிஸ்துவ மிஷனரிகள், அய்யா  வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி சாமிகள் போன்றோரின் ஆதரவுடன் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நெடிய போராட்டத்திற்குப் பிறகு தோள் சீலை அணியும் உரிமை 1865 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 

1950-கள் வரை இக் கொடுமை தொடர்ந்துள்ளது!

ஆனால், அதற்கும் பிறகு 90 ஆண்டுகள் வரை, அதாவது 1956 வரை கூட வேறு வடிவத்தில், மதச் சடங்காக இந்த அநீதி  தொடர்ந்துள்ளது என்பது எத்த கைய கொடுமை! மலபார் பகுதியில் பல வடிவங்களில் 1950-கள் வரை இக் கொடுமை தொடர்ந்துள்ளது. 

கோவில் விழாக்களுக்குச் செல்லும்போது மார்புச் சீலை அணியக்கூடாது என்று நாயர் சமூகத்துப் பெண்களுக்குத்  தடை விதிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து, கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட் டத்தின் வேலூர் அருகில் உள்ள மணிமலர்க்காவு கோவிலில் மருமரக்கால் சமரம் என்றழைக்கப்படும் தோள்சீலைப் போராட்டத்தின் நீட்சியாக 1956 ஆம் ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பெற்றது. அதில் ஏராளமான மகளிர் பங்கேற்றனர். சுமார் 400 நாயர் சமூகத்துப் பெண்கள் மேலாடை அணியாமல் பங்கேற்ற அந்த நிகழ்வில் 125 மகளிர் மேலாடை (ஜாக்கெட்) அணிந்து சென்று, தங்களுக்கும் மத வழிபாட்டு உரிமை, இந்த உடை அணிந்தவாறு வழங்கப்பட வேண்டு மென்று கோரி போராடியுள்ளனர். அதன்பிறகே நாயர் சமூகத்துப் பெண்கள் மேலாடை அணிந்து அந்த கோவில் விழாக்களில் பங்கேற்கவும், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் கோவில் விழாக்களில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டனர். அதில் பங்கேற்ற மகளிரில் இன்னும் சிலர் வாழ்ந்து வருகின்றனர்.  மணிமலர் காவு போராட்டத்தில், தங்கள் பள்ளிப் பருவத் தில் பங்கேற்ற சீரு குன்னத், மீனாட்சி வெள்ளரொட்டில் போன்றோர் இப் போராட்டத்தைக் குறித்த தங்கள் நினைவுகளை முன்பே பதிவு செய்திருக்கின்றனர்.

வெற்றிக்கு வழிவகுத்த தேவகி நம்பீசன்

இப் போராட்டத்தின்போது, தனது மகப்பேறு காரணமாக நேரடியாகப் பங்கேற்க முடியாவிட்டாலும், அனைவரையும் ஒருங்கிணைத்து போராட் டத்தின் வெற்றிக்கு வழிவகுத்த தேவகி நம் பீசன் என்னும் பெருமாட்டி தனது 90 ஆம் வயதில் கடந்த ஞாயிறு அன்று (11.06.2023) மறைவெய்தியுள்ளார். இடதுசாரி இயக்கப் பின்னணி கொண்ட இவரது வாழ் விணையர் தோழர் நம்பீசன் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொண் டாற்றியவர்; அவரும் இப் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் தொண்டாற்றியுள்ளார்.

தோழர் தேவகி நம்பீசன் அவர்கள் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதையும், விவசாயி களுக்கான போராட்டத்தில் பங்கேற்றவர் என்பதையும் அவரது வாழ்க்கைப் பதிவுகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

மதத்தின் பெயரால், சடங்குகளின் பெயரால்....

எண்ணிப் பாருங்கள், இந்தியா சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்படும் 1947-க்குப் பிறகு ஏறத்தாழ 10 ஆண்டுகள் மேலாடை அணியக்கூடாது என்ற கொடுமை மதத்தின் பெயரால், சடங்குகளின் பெயரால் வழக்கத்தில் இருந் திருக்கிறது என்பது எத்தகைய மோசமான நிலை! சமூக மாற்றத்திற்காகப் போராட்டங்கள் நடைபெறவில்லையா னால், அத்தகைய காட்டுமிராண்டித்தனங்கள் தானே இன்றும் தொடர்ந்திருக்கும். 

இத்தகைய சமூகப் போராளிகளின் வாழ்க் கையை நாம் பலருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். மறைந்த வீராங்கனை தேவகி நம்பீசன் அவர்களுக்கு நமது வீரவணக்கம்! 

வீரஞ்செறிந்த வீராங்கனையின் வரலாறு நம் இளைய தலைமுறையினருக்குப் பாடத் திட்டங்களாகட்டும்!

தொடரட்டும் மனித உரிமைப் போராட்டம்! 

உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக திராவிட மக்களை ஆக்கும் வரை நம் மனித உரிமைப் போராட்டப் பயணம் தொடரட்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.6.2023


No comments:

Post a Comment