மாநிலக் கல்லூரியில் - நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

மாநிலக் கல்லூரியில் - நூல் வெளியீட்டு விழா

"தமிழையும், தமிழர்களையும் காக்க உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம்"

உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேச்சு

சென்னை, மே  7 - சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன் தலைமையில் கல்லூரித் திருவள்ளுவர் அரங் கில் நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன் முடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என் றால் எவர் தமிழர்?" என்ற நூல் குறித்து 31 கட்டுரையாளர்கள் திறனாய்வு செய்து எழுதிய “பெரியார்: அவர் ஏன் பெரியார்?" எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை எழுத்தாளர் பெருமாள்முருகன் பெற்றுக் கொண்டார். 

மாநிலக் கல்லூரி முதல் வரும், கட்டுரைத் தொகுப்பாசி ரியருமான முனைவர் இரா.இராமன் நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் வரவேற்றார்.

இக்கருத்தரங்கில் பேராசிரி யர்கள் வீ.அரசு, எழுத்தாளர் சு.வேணுகோபால், அ.நவீனா, இரா.சுப் பிரமணி, ஜெ.சுடர் விழி, ஹாஜாகனி, மோகன வசந்தன், கு.பத்மநாபன், ஏ.தனசேகர், க.காசி மாரியப்பன்,  'சுவீடன்' விஜய் அசோகன், முனைவர் பா.அமுல் சோபியா ஆகியோர் பங்கேற்றனர்.

நூலை வெளியிட்டு அமைச் சர் முனைவர் க.பொன்முடி பேசுகையில்,

இது நமது  முதலமைச்சர் பயின்றதும், பலர் தமிழை வளர்த்ததும், திராவிட இயக் கம் பற்றிப் பல ஆய்வுகளைச் செய்த பேராசிரியர்கள் பணி யாற்றியதுமான கல்லூரி. இந்த மாநிலக் கல்லூரியில் "பெரியார்" குறித்த நூலை வெளியிடுவது பொருத்தமானதாகும். ஊடக வியலாளர் நண்பர் ப.திருமா வேலன் எழுதிய பல நூல்கள், திராவிடச் சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளன. குறிப்பா கப் பெரியார் குறித்துப் பல நூல்களை அவர் எழுதியுள் ளார். அதில் இந்தத் தொகுப்பு நூல்கள் இரண்டும் மிக முக் கியமானவை. இதனை நன் குணர்ந்து,  தொகுப்பாசிரியர்கள் கல்லூரி முதல்வர் இரா.இராமன் மற்றும் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சீ.ரகு ஆகியோர், 31 கட்டுரையாளர் களிடமிருந்து சிறந்த திறனாய் வைப் பெற்றுப் "பெரியார்: அவர் ஏன் பெரியார்?" என்ற நூலாக வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

ஒவ்வொரு கல்லூரி நூலகத் திலும் கட்டாயமிருக்க வேண் டிய புத்தகம் இது. மாணவர்கள் தவறாமல் படித்துத் தங்கள் சிந் தனையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 

மக்களிடையே ஏற்றத் தாழ்வு, வேற்றுமைகளை அகற் றிச் சமூக நீதியை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் தந்தை பெரியாரால் உருவாக் கப்பட்ட திராவிட இயக்கம். பெரியாரைத் தொடர்ந்து அண்ணா, கலைஞர் தற்போ தைய முதலமைச்சர் தளபதி யார் வரை அதனைச் செயல் படுத்தி வருகின்றனர்.

கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம் பப் பள்ளியை உருவாக்கிய நமது மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் 'திராவிட மாடல்' ஆட்சியைச் சிறப்புடன் நடத்திவரும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில், தமிழ் நாட்டில் 21 அரசு கலைக் கல்லூரிகளை உருவாக்கி உயர் கல்விக்கு இது ஒரு சிறந்த பொற்காலம் என்பதை நிரூ பித்துள்ளார்.

மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி  கிடைக்க வேண்டும் என்று நமது அரசு எண்ணற்ற பல திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோ றும் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கும் முதலமைச்சரின் பெண்கல்வித் திட்டம், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித்திறன் களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்த “நான் முதல்வன்” திட்டம் என நமது முதல்வர் பல்வேறு திட்டங் களை வகுத்துச் செயல்பட்டு வருகிறார். இதனால் நமது மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. 

தமிழ்நாடு முதலமைச் சரைப் போன்று மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ள நமது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் எண்ணற்ற பல புதிய திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறார். அதற்குச் சான்றாக இந்தக் கல்லூரியில் உணவு விடுதி அமைக்கத் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 76 இலட்சத்தை வழங் கியுள்ளார். 

தமிழையும், திராவிடத்தை யும் பிரித்துப் பார்க்க முடியாது, தமிழுக்கும் தமிழர்களின் முன் னேற்றத்திற்காகவும் உருவாக் கப்பட்டதுதான் திராவிட இயக்கம். இந்த இயக்கம் உரு வாக்கப்பட்ட பின்புதான், கல்வி அனைவருக்கும் பொது வானதாக மாறியது. அனைத் துத் தரப்பினரும் கல்வி கற்க வேண்டும் என்று தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், தற்போது நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனத் தொடர்ந்து நம் திரா விடத் தலைவர்கள் பாடுபட்டு வருகின்றனர்.

இந்த மண்ணின் மைந்தர் கள் திராவிடர்களே. இந்த வர லாற்றுப் பெருமையை இளை ஞர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்பதற்காக எழு தப்பட்டவையே பெரியாரைப் பற்றிய ப.திருமாவேலனின் நூல்கள்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இன்றைய  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக இன்றைய மாணவ - மாணவியர்  தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், ப.திருமாவேலனின் நூல்களை அவசியம் படிக்க வேண்டும். நாளைய சமுதாயத்தை வழிநடத்தப்போவது  மாணவர்களே என்று கூறினார். 

கல்லூரித் தமிழ்த்துறை இணைப்பேராசிரியரும், இணைத் தொகுப்பாசிரியரு மான முனைவர் சீ.ரகு நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment