கருநாடகா கற்பித்த பாடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

கருநாடகா கற்பித்த பாடம்!

கருநாடகா சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல மைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந் நிலையில், பேரவைத் தலைவராக யு.டி.காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து யு.டி.காதரை பேரவைத் தலைவராக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சட்டப்பேரவையில்   முன்மொழிந்தனர்.

இதற்கு உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், யு.டி.காதர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சேர்ந்து இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். 54 வயதாகும் காதர், கருநாடக சட்டப்பேரவைத் தலைவராகும்  முதல் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பாஜக ஆட்சியிலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக காதர் பதவி வகித்தது நினைவு கூரத்தக்கது.

பதவிப்பிரமாணம் ஏற்கும் போது  கோலார் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபா சஷிதர், புத்தர், அம்பேத்கர் மற்றும் பசவண்ணா மீது ஆணை என்று குறிப்பிட்டு, பதவிப்பிரமாணம் ஏற்றார். அதனை அடுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அம்பேத்கர், பசவண்ணா பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 

 இதனை அடுத்து பதவிப்பிரமாணம் எடுக்கவந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பசுமாடு, ராமர், கிருஷ்ணர்  பெயரில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண் டனர். 224 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் கடந்த 22 ஆம் தேதி 182 பேர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மறுநாள் 34 பேர் பதவியேற்றனர். எஞ்சியவர்களும்  பேரவைத் தலைவர் தேர்தலில் வாக் களிக்கும் விதமாக, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.  

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்  தங்களது தலைவர்கள் டி.கே.சிவக்குமார் மற்றும் தேவ கவுடா பெயரை குறிப்பிட்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர் இதற்கு போட்டியாக பாஜகவினர்  பசுமாடு, ராமர், கிருஷ்ணர் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்தனர். ஆனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் மோடி பெயரைக்குறிப்பிட்டு பதவிப்பிரமாணம் எடுக்கவில்லை.

இது போன்ற செய்திகள் உலா வந்து கொண்டுள்ளன. 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் தந்தை பெரியார் வாழ்க என்று முழக்கமிட்டனர். 

சிலர் 'வெல்க திராவிடம்'  என்றும் முழக்கமிட்டனர். தமிழ்நாடு பெரியார் மண்.  திராவிட மண் என்று ஏன் சொல்லுகின்றனர் என்பதற்கான காரணத்தை வட மாநிலங்களைச் சேர்ந்த பிஜேபி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அப்போது தெளிவாகப் புரிந்து கொண்டனர்.

இப்பொழுது கருநாடகாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் புத்தர், அம்பேத்கர், பசவண்ணா பெயர்களில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பிஜேபியினர் பசு மாடு, ராமன், கிருஷ்ணன் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் மதவாதத்தைப் பெரிதுபடுத்தி தான் பிஜேபியினர் கருநாடக வாக்காளர்களிடம் பலத்த அடிவாங்கினர். அடிபட்டும் புத்தி வரவில்லை யென்றால் இவர்கள் திருந்தப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.

பிஜேபி சார்பில் ஒரே ஒரு முஸ்லிம்கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. பிஜேபியின் மூக்கை அறுக்கும் வகையில் கருநாடக சட்டப் பேரவைத் தலைவராக முஸ்லிம் ஒருவர் ஒரு மனதாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

புது நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவையும், மத அடையாளத்தோடு, யாக சடங்குகளோடு நடத்தி முடித்துள்ளனர். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மதத்தைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் என்ன ஆகும் என்பதற்குக் கருநாடக மக்கள் நல்ல வகையில் பாடம் கற்பித்து விட்டனர்.

அந்த வகையில் பிற மாநிலத்தவர்களும் கருநாட கத்தைப் பின்பற்றி நாட்டைக் காப்பாற்றுவார்களா?

No comments:

Post a Comment