பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

பதிலடிப் பக்கம்

ஆளுநரின் பதற்றம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)



பேராசிரியர்

சுவாமிநாதன் தேவதாஸ்

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் 04-05-2023 அன்று வெளிவந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நேர்காணல் அரசியலில் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. காரணம், ஆளுநரின் பதில்கள் பெரும்பாலும். உண்மைக்கு மாறானதாக, திசை திருப்புகின்ற நோக்கத்தில் அளிக்கப்பட்டிருப்பதே.

பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட மசோதாக் களை பற்றி பேசும் போது, அவற்றிற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றளவில் குறிப்பிட்டிருக்கிறார். உயர் கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி உடையதாக, அரசியல் குறுக்கீடுகளில்லாமல் இருக்க வேண்டு மென்று யூஜிசி சட்டங்கள் கூறுவதாகவும், ஆனால் தமிழ் நாட்டின் நிலை வேறு மாதிரியாக இருப்பதாக கூறுகிறார். பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் கூட் டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டு, அவற் றின் தன்னாட்சிநிலை முழுவதுமாக பறிக்கப்பட்டிருக் கிறது. பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் என்பவர் சரியானவராக இருக்க வேண்டும். அவரை தெரிவு செய்யும் அதிகாரம் பல்கலைக்கழக வேந்தரிடம் இருக்கிறது. அந்த அதிகாரமும் முதலமைச்சரிடம் சென்று விட்டால் பல்கலைக்கழகங்கள் அரசியல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற அய்யத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் என்பது அதன் நிர்வாகத்தின் உயரிய குழு. அப்படிப்பட்ட குழு பல்கலைக்கழக வளாகங்களில் நடத்துவது மரபு. ஆனாலும் சில வேளைகளில், நிர்வாக காரணங்களுக்காக, உயர்கல்வித்துறை செயல ரின் அலுவலகத்தில் நடந்து வருவது என்னவோ உண் மைதான். ஆனால் அது தவிர்க்கப்பட வேண்டியது. சிண்டிகேட் குழு பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கின்ற போது, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அது உதவும்.  

தமிழ்நாட்டில் அமைக்கப்பட இருக்கின்ற சித்தா பல்கலைக்கழக மசோதா பற்றிய கேள்விக்கு "யூஜிசினு டைய சட்டத்திற்கு உட்பட்டு இருக்குமானால் மசோதா விற்கு ஒப்புதல் அளிக்க இருந்ததாகவும், ஆனால் மசோதாவில் பல்கலைக் கழகத்திற்கு வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று உள்ளதால் . இது முடியாது என்று சொல்லிவிட்டேன். அதனால் இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது" என்று ஆளுநர் பதிலளித்துள்ளார். ஒரு மாநில ஆளுநரின் உச்சபட்ச அதிகாரங்கள் என்னவென்று இந்திய அரசியல் சாசனம் தெளிவுபடுத்திருக்கிறது. ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கலாமா, எவ்வளவு காலம் நிறுத்தி வைக்கலாம், ஒப்புதல் மறுக்கலாமா என்பதெல்லாம் பொது வெளியில் அதிகமாக பேசப்பட்டு பொதுமக்கள் தெளிவுடன் இருக்கிறார்கள்.

மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தர் களாக நியமிக்கப்பட்டால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி பறிக்கப்பட்டு விடும் என்று யூஜிசி ஒழுங்கு விதிகள் (Regulations) எதுவும் கூறவில்லை. அப்படி யாயின் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருக்க வேண்டிய அவ சியமில்லை என சட்டம் எப்படி இயற்றிட முடியும்? தமிழ்நாட்டில், The Tamil Nadu Music and Fine Arts Act,2013 என்ற சட்டத்தினை இயற்றி, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் 2013இல் ஏற்படுத்தப்பட்டு 2014-2015 கல்வி ஆண்டு முதல் இயங்கி வருகிறது.  இந்த பல் கலைக்கழக 2013 சட்டப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பல்கலைக்கழக வேந்தராக இருப்பார். அவர் வேந்தர் என்ற முறையில், பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச் சிகளுக்கு தலைமையேற்று தகுதி வாய்ந்தவர்களுக்கு பட்டங்கள், பட்டயங்கள் முதலானவற்றை வழங்குவார்" (Chapter III, 9(1) of The Tamil Nadu Music and Fine Arts Act, 2013 reads: "The Chief Minister of the State of Tamil Nadu shall be the chancellor of the university. He/she shall by virtue of his/her Office be the head of the university and shall, when present Preside at any convocation of the University and confer Degrees, Diploma or other academic distinctions upon persons entitled to receive them") இந்த சட்டமும் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு தமிழ்நாட்டு முதல் அமைச்சரை வேந்த ராக கொண்டு பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. 

இருப்பினும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட பல மசோதாக்கள், குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர் நியமனம் குறித்த மசோதாக்கள் ஆளுநர் ரவியை பதற்றத்துக்குட்படுத்தி இருக்கிறது என்று தெளிவாக புரிகிறது. வேந்தர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய கருத்துக்களை பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு கொடுக்கின்ற வாய்ப்பு கைநழுவுவதை ஆளுநரால் ஏற்றுக்கொள்ள முடியாததன் வெளிப்பாடாகவே அவரது நேர்க்காணல் பார்க்கப்படுகிறது. 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பவர், ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவராகத்தான் இருக்க முடி யும். ஏனென்றால், முதலமைச்சர் பதவி என்பது ஆளு நர் பதவி போன்று நியமான பதவி அல்ல.  சனநாயக முறைப்படி தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்று, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத் திற்கு வருகின்ற பதவி முதலமைச்சர் பதவி. நமது இந்திய அரசியல் சாசனத்தில், மாநில ஆளுநரின் அதிகார வரம்புகள் அறுதியிட்டிருப்பதை அறிந்திருந்த போதிலும் ஆளுநரின் நேர்காணலில் தெளிவில்லை என்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று. 

அரசு நிதியின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங் களில்தான் (State funded) மாநில ஆளுநர், பல்கலைக் கழக வேந்தர் பொறுப்பை ஏற்க முடிகிறது. தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களை விட தனியார் வசம் இருக்கின்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்  (Deemed to be universities and private universities) அதிக எண் ணிக்கையில் இயங்குகின்றன. இப்பல்கலைக்கழகங் களில், யுஜிசி ஒழுங்கு விதிகளின்படியே (UGC Regulations) அவற்றின் வேந்தர்களை அந்தந்த பல்கலைக்கழகங்களை நடத்துகின்ற sponsoring society தீர்மானிக்கிறது. நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் செலவினங்களில் 51% அதிக மாக அரசின் பங்களிப்பு இருக்குமானால், அப்படிப் பட்ட பல்கலைக் கழகங்களில் வேந்தர்கள், சம்பந்தப் பட்ட அரசு மூலமே நியமிக்கப்படுகிறார்கள். அரசு மூலம் நியமனம் பெறும் வேந்தர்கள் ஆளுநர்களாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகம் (Gandhigram Rual Institute-GRI). ஒன்றிய அரசின், கல்வி அமைச்சகமே இந்த பல்கலைக்கழகத்தின் (GRI) sponsored society. இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உள்ள ஒருவரே ஒன்றிய அரசால் வேந்தராக நியமிக்கப்படு கிறார். (Among the authorities of the Gandhigram Rural Institute, there shall be a Chancellor who shall be appointed by the Central Government). பல நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் தலைசிறந்த பல்கலைக்கழகங் களாக கல்விப் பணி ஆற்றி வருகின்றன. அவற்றின் வேந்தர்கள் ஆளுநர் அல்லவே. 

பல்கலைக்கழகங்கள் அரசியலாக்கப்பட்டு விடும் என்று ரவி பதற்றப்படுவது பல்கலைக்கழகங்களின் மீதான அவரது அக்கறையை காட்டுவதாக தெரிய வில்லை. தமிழ்நாட்டு அரசின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களில் பிரச்சினைகள் நிரம்ப உண்டு. பல்கலைக் கழகம் என்பது அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி நிறு வனமாக செயல்பட வேண்டும். ஆனால் பல்கலைக் கழகங்களில் ஆய்வுகள் நடப்பது நிதி பற்றாக்குறையால் வெகுவாக குறைந்து வருவது கவலைக்குரிய ஒன்று. ஏறக்குறைய அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆசிரியர் பற்றாக்குறை, ஆராய்ச்சிகட்டமைப்பு வசதி குறைவு போன்ற பிரச்சினைகளால் ஆராய்ச்சிகளில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்பது உண்மை. இவற்றை தீர்ப்பதற்கு ஆளுநர் எப்போதா வது அரசிடம் பேசி இருப்பாரா என்பது தெரியவில்லை. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் போவதை பற்றி கவலைப்படும் ஆளுநர், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் எத்தனை துணைவேந்தர்களை தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து, விளிம்பு நிலை சமூ கங்களிலிருந்து நியமித்திருக்கிறார். இந்தியா ஒன்றியம் அல்ல, இந்தியா ரிஷிகளால் உருவாக்கப்பட்டது, திருக்குறள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டது என்றெல்லாம் ஆளுநர் பல்கலைக்கழக மாணவர் களிடம் ஆசிரியர்களிடம் பேசுவது அரசியல் இல் லையா? அவை உண்மைக்கு புறம்பானவை என்று தெரிந்தும் அவர் பேசுவது அரசியல் அல்லவா.

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்க ளுக்கு வகுப்பு நடத்துவது சவால் மிகுந்ததாக இருந்தது. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் (on-line classes)  நடத்தப்பட்டன. இதனால் கற்றல் குறைபாடு ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு, குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கான சில பாடங்கள், பாடத் திட்டத்தி லிருந்து தற்காலிகமாக, நேரடி வகுப்புகள் தொடங்கும் வரை குறைக்கப்பட்டன. இதை பயன்படுத்தி, கல்வி பாடத்திட்டங்களில் சீர்திருத்தம் என்ற போர்வையில், கல்வியை காவி மயமாக்கிட திட்டமிட்டு NCERT மூலம் கல்வி பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அறிவியல் பாடங்களில் திரிபுகள் (Distortions) செய்யப்பட்டு வருகின்றன. முகலாயர்களைப் பற்றிய வரலாற்று செய்திகள், 2002 குஜராத் படுகொலைகள் கலவரம் சம்பந்தமான வரலாற்று உண்மைகள், இப்படி பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் பாடத் திட் டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவினு டைய முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய வரலாற்றுச் செய்திகள் 11 ஆம் வகுப்பு பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதனை, இந்திய வரலாற்று காங்கிரஸ் (The Indian History Congress) என்ற புகழ்மிக்க வரலாற்று அறிஞர்கள், பேராசிரியர்களை கொண்ட நிறுவனம், NCERTக்கு கண்டனம் தெரிவித்து, நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்த்திட விண்ணப்பம் போட்டுக் கொண்டிருக்கிறது. 

இதைவிட இன்னொரு விபரீதமான முடிவு.  பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் சார்லஸ் டார்வி னின் பரிணாம கோட்பாடே  (Darwin's theory of evolution)  நீக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் மாண வர்களுக்கு உயிரியல் பரிணாமக் கோட்பாடு என்பது அடிப்படைத் தேவையாகும். இதை நீக்கியது விபரீத மான முடிவு என்றும், மாணவர்களின் அறிவியல் திறனை மழுங்கடிக்கும் செயல் என்றும் 1800 க்கும் அதிகமான இந்தியாவிலுள்ள தலைசிறந்த அறிவிய லாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் NCERTக்கு திறந்த மடல் (Open Letter) மூலம் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். டார்வினின் உயிரியல் பரிணாம கோட்பாட்டிற்கு பதில் எந்த கோட்பாட்டை NCERT புகுத்த எத்தனிக்கிறது என்பது புதிராக உள்ளது. 

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பள்ளிக்கல்வி யின் தரத்தினை மேம்படுத்த ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கிடும் நோக்கத்தில், ஒன்றிய அரசு 1961 ஆம் ஆண்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council of Educational Research and Training-NCERT) என்ற தன்னாட்சி நிறுவனத்தை அமைத்தது. தேசியத் தின் பண்பைக் கொண்டதாகவும், நாட்டின் பன்முகத் தன்மையை, மாறுபட்ட கலாச்சாரத்தை அங்கீகரித்து ஊக்குவித்து, தேசிய அளவிலான பொதுவான கல்வி அமைப்பினை வடிவமைத்தல், ஆதரித்தல் என்ற நிலைப்பாட்டை கொண்ட இந்த நிறுவனத்தை, தங் களின் அரசியல் சித்தாந்தங்களை புகுத்தும் கருவியாக, கைப்பாவையாக ஒன்றிய அரசின் ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. இதை தமிழ்நாடு ஆளுநர் எப்படி பார்க்கிறார்? திராவிடம் அல்லது திராவிட மாடல் என்பது, நமது அரசியல் சாசனத்தின் அடிநாதமாக விளங்குகின்ற, அடிப்படைக் கூறுகளான சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்ற உயரிய கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை தமிழர்கள் நன்கறிவர். 


No comments:

Post a Comment