பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

பதிலடிப் பக்கம்

செக்குலரிசத்துக்குத் துக்ளக் கூறும் 

வெண்டைக்காய் விளக்கெண்ணெய் வியாக்கியானம்!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

- கலி.பூங்குன்றன்

செக்யூலரிசம் என்றால் என்ன?

"செக்யூலர்" (Secular),   "செக்யூலரிஸம்" "செக்யூலர் கவர்ன் மெண்ட்", என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தி லும் இவை இடம் பெற்றுள்ளன.

இந்த "செக்யூலர்" "செக்யூலர் கவர்ன் மெண்ட்" என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.

"மதமற்ற அரசாங்கம்" என்று அடி நாளிலும்; பின்னர் "மதச்சார்பற்ற அரசாங்கம்" என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

குழப்பம்

ஆனால், "அண்மையிலோ - ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்து கொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, "செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவதல்ல -  எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும்" என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.

"செக்யூலரிஸம்" என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் - "இந்த உலகுக்கானது - மறுவுலக சம்பந்தமில்லாதது" என்பது. இதனை ஆரிய வடமொழியில் "லோகாயிதம்" என்கின்றனர். இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த "லோகாயி"தத்தின் தொடர்ச்சியாக "பர மார்த்திகம்" என்பதையும் பிணைத் துள்ளனர். அதாவது "லோகாயித்" வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, "லோகாயிதம்" என்பதன் உண்மைக் கருத்தையும், நோக்கத்தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும், கடவுளியலையும் பிணைத்து விட்டனர்.

உண்மை விளக்கம்

"செக்யூலரிஸம்" என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும், பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. பகுத்தறி வியல் (Rationalism) என்பது அறிவைப் பயன்படுத்தி, மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே "செக்யூலரிஸம்" ஆகும்.

இந்த "செக்யூலரிஸம்" என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர் களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டுகளையும், மதமடமைக் கொள்கைகளையும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கினார். "நாத்திகர்" என்ற குற்றத்துக்காக 1841-1842ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.

நடைமுறையில் பரப்பியவர்

தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக் தான் முதன் முதல் தமக்கும், தம் கோட்பாட்டினருக்கும் "செக்யூ லரிஸம்" என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களையும் லண்டனில் பல இடங்களில் தோற்று வித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத்திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.

"பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன்" என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணி யாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப் படுத்தினார்.

இந்த "செக்யூலரிஸம்" என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் "இந்த உலக வாழ்க்கை சம் பந்த மான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு" என்பதாகும்.

இங்கர்சால் விளக்கம்

மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் "இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனுதாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி! அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும், விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு, அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வாழ்வை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூலரிஸம்."

ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம் பிக்கை கொள்ளச் செய்வது.

நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம்பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். 

இந்த பகுத்தறிவியக்க "செக்யூலரிச" மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த "செக்யூலர்" - "செக்யூலரிஸம்" என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு - மதம், கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் என்ன கூறுகிறார்?

"Secular' என்பது எந்த மொழியில் உண்டாக் கப்பட்டதோ, அந்த மொழியில் அந்தச் சொல் லுக்கு என்ன பொருள் என்ப தைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும்; கவனத்தில் ஏற்க வேண்டும்.

ஆங்கில மொழியில் உள்ள அந்தச் சொல்லுக்கு "இந்த உல குக்கானது - மறு உலக சம்பந்தமற்றது" என்று பொருள் சொல் லப்பட்டு இருக்கிறது.

மறு உலகைப்பற்றிச் சொல்லாத மதம் இந்த நாட்டில் உண்டா? 'செக்குலர்' என்ற சொல்லுக்கு மறு உலக சம்பந்தமற்றது என்ற பொருள் இருப்பதன் மூலம் மதத்தை மறுப்பது என்பது மேலோட்டமாகவும் தெரிகிறது - ஆழத்தில் சென்று பார்த்தாலும் புரிகிறது.

"அரசாங்கமோ அல்லது பொதுத் துறை நிறுவனங்களோ அல்லது அமைச்சர்கள் போன்று பதவியில் இருப்பவர்களோ, மத காரியங்களுக்கு உதவியாக இருப்பதோ, மதக் காரியங்களில் நேரிடை யாக ஈடுபடுவதோ, மதத்தின் கவர்ச்சியை அதிகப் படுத்துவதில் முக்கியஸ்தர்களாகத் தொடர்பு கொள் வதோ கூடாது" என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார் வி.ஆர்.கிருஷ்ண (அய்யர்). (இல்லஸ்டிரேட் வீக்லி ஆஃப் இந்தியா (6.2.1972)

பக்ருதீன் அலி அகம்மது 

வழிபட்ட விநாயகர்

'செக்குலரிசம்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "மதச்சார்பு இன்மை" என்று தமிழில் கூறு கின்றோம். 'மதச்சார்பின்மை' என்றால் எல்லா மதங்களையும் சமநோக்கில் பார்ப்பது என்று உண்மையிலேயே மத நம் பிக்கை உள்ளவர்கள் வியாக்கி யானம் செய் கிறார்கள்.

'செக்குலரிசம்' என்கிற பெய ரால் சிறுபான்மை மக்களுக்குத் தான் இங்கே சலுகை அதிகம்; பெரும் பான்மை மக்களுக்குரிய இந்து மதம் புறக்கணிக்கப்படுகி றது என்று சங்கராச்சாரியார் வரை கூப்பாடு கோவிந்தம் போடுவது இங்கே வாடிக்கை.

சிறுபான்மை மக்களுக்கு அதிக இடம் கொடுத்ததால் தான் பெரும்பான்மை மக்கள் விரக்தி அடைகிறார்கள்! அதனால்தான் மதக் கலவரம் நடைபெறுகிறது என்று கூறும் பார்ப்பனர்கள் இங்கு உண்டு.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ''சக்ரவர்த்தி யின் திருமகன்'' நூல் எழுதிய ராஜ கோபாலாச்சாரியார் 'செக்குலரிசம் பற்றி கூறும் கருத்து இதோ!'

'ஸெக்யூலரிசம் என்பது தவறாக புரிந்துகொள்ளப் பட்ட வார்த்தை. ஒரு நாடு தன்னை ஸெக்யூலர் நாடு என்று அறிவித்து விட்டதென்றால் அதற்காக அந்நாட்டு அரசு நாத்திக அரசாகவோ, மத விரோத அரசாகவோ இருக்கவேண்டுமென்ப தில்லை. ஸெக்யூ லரிசம் என்பதன் பொருள் என்னவென் றால் பல மதங்களை சேர்ந்த மக்கள் எல்லோரும் சமமாகவும், மத சம்பந்தமாக எந்த வித பாகுபாடுமின்றியும் நடத்தப்படவேண்டும்.

"மைனாரிட்டி மக்களுக்கு செய்யப்படும் எந்த நியாயமும் மெஜாரிட்டி மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயமாகி விடக்கூடாது" என்று "What is Secularism?" என்ற தலைப்பில் 20.11.1970இல் Bhavan's Journalஇல் எழுதியுள்ளார் என்று ஏப்ரல் (1993) ‘காமகோடி' இதழில் வெளிவந்துள்ளது.

மைனாரிட்டி மக்களுக்கு செய்யப்படும் நியாயம் மெஜா ரிட்டி மக்களுக்கு இழைக்கப்ப டும் அநியாயம் என்பதுபோல் அரசியல்வாதி ஆச்சாரியார்களும், ஆன்மிகவாதி சங்கராச்சாரியார்களும் ஒரே சுருதியில் கூறி வருவது இங்கு வாடிக்கையாகப் போய்விட்டது.

உண்மையிலேயே இங்கு ஒரு இந்து மத ராஜ்யம்தான் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. ஒரு அரசாங்க விழா - அரசாங்க புதிய கட்டடத் திறப்பு நிகழ்ச்சி என்றாலும்கூட அங்கே இந்து" மதக் கூத் தடிப்புதான்! புரோகி தர் வந்து மந்திரம் ஓதுவதிலிருந்து, குத்துவிளக்கு ஏற்றுவதிலிருந்து, புண்ணியதானம் செய் வதுவரை எல்லாம் பார்ப்பனமயம்தான். ஆயுத பூசை என்ற பெயரால் அரசு அலுவலகங்களில் நடைபெறும் கழுதை கூத்துக்கு அளவே கிடையாது. குடியரசுத் தலைவராக ஒரு இஸ்லாமியர் வந்தால்கூட, நடைமுறைகள் இந்து மத சனாதன குட்டைக்குள் விழவேண்டிய நிலை இங்கே!

பக்ருதீன் அலி அகம்மது குடி யரசுத் தலைவராக இருந்த போது பூனாவில் விநாயக பூசை நடத்தினார் என்பது பல பேருக்கு ஆச்சரியமான செய்தியாக இருக் கலாம். அவருடன் சென்ற இரு பத்திரிகையாளர்கள் புரோகித வேலையைச் செய்திருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் சிலை வழி பாட்டை நம்பலாமா? இந்து மதவாதிகளைத் திருப்திப் படுத் துவதற்காகத்தான் இதை அவர் செய்தார் என்று "Women's Era"  (அக்டோபர் 1974) இதழ் எழுதி யது.

செக்குவரிசம் என்று சொல்லிக்கொண்டாலும், எல்லா மதத்தையும் சமமாகப் பாவித் தல் என்று விளக்கங்கள் சொன்னாலும் நடைமுறையில் இங்கு 'இருப்பது என்பது இந்து மத வழிபாட்டு செயல் பாடுகள்தான்.

இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவர் மாளிகை பற்றி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' (26.8.1974) எழுதிய கட்டு ரையை இந்த இடத்தில் எடுத்துக் காட்டு, வது மிகப் பொருத்தமாகும்.

ராஷ்டிரபதி பவனில் பூஜை கூடம்

"இந்திய அரசு மதச்சார்பற்றது என்று அரசமைப்புச் சட்டத்தில் தீட்டிக்காட்டப்பட்டுள்ளது ஆனால், அதன் தலைமை ஆட்சி யாளரான பிரதம அமைச்சர்கள், ஜனாதிபதிகள், மாநில ஆளுநர் கள் ஆகியவர்களே இந்த சட்ட விதியைத் தட்டிக் கழித்து கோயில், மதத் தலைவர்களை தரிசிக்கும் பரம பக்தர்களாக வும் இருந்து வருகின்றனர்.

ராமலீலா முதலிய இந்து மத பண்டிகைகளிலும் ஆட்சித் தலைவர்கள் தலைமை வகித்து, கலந்து கொள்வது பற்றி செய்தித்தாள்கள் ருசிகர மான செய்தி களும் விமர்சனங்களும் எழுதியுள்ளன. இவர்களு டைய வீடுகளில் இவர்களு டைய மத பக்தியும், பூஜா பாராயணங்களும் எப்படி இருந்தா லும் இவை அவரவர் 'கிரகலட்சுமி'களின் அதிகாரத்துக்குட்பட் டவை என்பதால் இவர்கள் தங்கள் ஈடுபாடு காரணத்தை அவர்கள்மீது சுமத்திடலாம். என்றாலும், இந்த மதச்சார்பற்ற இந்திய குடியரசின் ஆட்சித் தலைவர்களாக, மதச்சார்பற்ற ஆட்சிப் பிரஜைகளின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்தவர்களான ஜனாதிபதி மாளிகையிலாவது இந்த மதச்சார்பற்ற சட்டத்தை மதித்து நடத்தப்படுகிறதா என்றால் இல்லை. முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், வெள்ளைக் கவர்னர் ஜெனரல்கள் குடியிருந்த இந்த மாளிகைக்குக் குடியேறியதும், தமது படுக்கை அறைக்கு அரு கில் ஒரு பூஜை அறையையும் ஏற்பாடு செய்து கொண்டார். ஆனால், அடுத்து ஜனாதிபதி யாக வந்த டாக்டர் ராதாகிருஷ் ணனோ தமது படுக்கை அறை யில் வருகை தரும் பிரமுகர் களை வரவேற்பார் - அலுவல்க ளையும் கவனிப்பார்.

இவர் இந்த பூஜை அறையை தமது மெய்க்காப் பாளரின் அலு வலகமாக மாற்றிவிட்டார். வி.வி. கிரியோ பூஜை புனஸ்கா ரங்களில் அவ்வளவாக நம் பிக்கை இல்லாதவர். ஆனால், அவரது வாழ்க்கைத் துணைவி யாரான சரஸ்வதி அம்மை யாரோ தமது படுக்கை அறைக்கு அருகிலேயே பூஜை மாடம் ஏற்பாடு செய்துகொண் டார். முஸ்லிம் ஜனாதிபதியான டாக்டர் ஜாகீர் உசேன் தொழுகை நடத்த தனி அறையோ மசூதியோ ஏற்பாடு செய்துகொள்ளவில்லை. படுக் கையறையிலிருந்தபடியே தொழுகை நடத்துவார்.

இதற்கு முன் இருந்த பிரிட் 'டிஷ் கவர்னர் ஜெனரல்களோ வைசிராய் மாளிகையை (இப்போது ராஷ்டிரபதி பவன்) கிறிஸ்த்துவ கோயிலாக்கிக் கொள்ளவில்லை. இந்த மாளிகையை அமைத்தவர் லூய் பென்ஸ் என்பவர். இந்த மாளிகை தோட்டத்தில் கூட பிரார்த்தனை கூடம் அமைக்க இடம் குறிப் பிடவில்லை. 

வைசிராய் இர்வின் பிரபு இந்த அரசினர் மாளிகை தோட் டத்திற்கு வெளியில், பொதுமக்கள் உதவிப்பணம் கொண்டு ஒரு கிறிஸ்த்துவகோயில் அமைத்துக் கொண்டார். ஆனால், சுதந்தர குடியரசு காங்கிரசு ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகுதான் இந்த மாளிகை ஊழியர்களுக்காக கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும் கட்டப்படலாயின."

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' இவ்வாறு படம் பிடித்துள்ளது. (26.8.1974)

(தொடரும்)

‘துக்ளக்' பார்வையில் செக்குலரிசம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தி.மு.க., தி.க., வி.சி.க. செக்குலரிசத்துக்கு விரோதிகள்
கேள்வி: வெளிநாடுகளில் இருந்து வந்தது மதச்சார் பின்மை' என்று கவர்னர் ரவி பேசியிருப்பது பற்றி? 
பதில்: ஆங்கிலத்தில் "செக்யுலர்" என்பதற்கு "உலகாயதனமானது" என்றும், "பிரம்மச்சர்ய விரதம் எடுக்காத பாதிரிகள்" என்றும், "சர்ச் சாராதது" என்றும் மூன்று அர்த்தங்கள் உண்டு. சர்ச் தான் சமயம் என்று நினைத்த அந்தக் காலத்தில் "சர்ச் சாராத" என்பது, “சமயம் சாராத" என்று மாறியது. ஹிந்தியில் சமயத்தை "தர்மம்" என்பார்கள். எனவே நம் அரசியல் அகராதியில் "சமயம் சாராத" என்பது, "தர்மம் சாராத" (அறம் சாராத) என்று மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்து அனர்த்தமாகியது. "நம் செக்யுலரிஸம் மேற்கத்திய சித்தாந்தத்திலிருந்து மாறுபட்டது. அது சகிப்புத் தன்மை, அனைத்து சமயங்களையும், சமூகங் களையும் மதிக்கும் சர்வசமய சம பாவம் கொண் டது" என்று 7-நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து, மேற்கத்திய அனர்த்தத்தி லிருந்து நம் பாரம்பரியத்தைக் காப்பாற்றியது.
நம் நாட்டில் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், அசோகர், சந்திரகுப்தர் சத்ரபதி சிவாஜி வரை யிலான அரசர்கள், அனைத்துச் சமயங்களையும் மதித்தனர். இந் தப் பாரம்பரியம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. அந்தப் பாரம் பரியத்தை உச்ச நீதிமன்றம் காப்பாற்றியது. நீதி மன்றத்தின் கருத்தையே ஆளுநர் கூறியிருக் கிறார். ஒரு மதத்தை அல்லது ஒரு சமூகத்தைத் தூற்றுவது, உச்ச நீதிமன்றம் விளக்கம் கூறிய செக்யுலரிஸத்துக்கு விரோதமானது. எனவே ஹிந்து சமயத்தை அவமதிக்கும் தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் செக்யுலரிஸத்துக்கு விரோதிகள்.
- ‘துக்ளக்', 29.3.2023


‘செக்குலர்' என்பது குறித்து 
தந்தை பெரியார் கூறுவது என்ன?
செக்குலர் - மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் "ஒரு பெண் கன்னியாய் இருக்கவேண்டு மென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதிக், கூப்பிட்ட வனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள்’ என்பது போல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் 'காலம் காணா ததற்கு' முன்பு இருந்தே இருந்து வருகிற போது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?
'செக்குலர்' எதற்குப் பொருந்தும்?
‘செக்குலர்' என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தினார்களே ஒழிய வேறு மொழிச் சொல்லாகப் புகுத்த வில்லை. ஆங்கிலச் சொல் லுக்கு வியாக்கி யானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர் கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர் சொல் லுவது பொருத்தமாக முடியுமா?
ஏன் என்றால், தங்கள் வாழ்வு அதில் தான் இருக்கிறது; அதில்தான் மக்களுடைய முட்டாள் தனத்தில் 'கிளைத்து எழுந்த கடவுள், மதம், கோவில், அதில் உள்ள கற்சிலைகள், அவற்றின் பொம்மைகள். சித்திரங்கள், படங்கள், தட்டிகள் முதலியவைகள் இருக்கின்றன. அதனால் தான் அவர்களுக்கு ஆத்திரம் வருகின்றது.

No comments:

Post a Comment