பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 15, 2023

பிற இதழிலிருந்து...

 பேதமற்ற சமூகம் காண இணைந்து போராடுவோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

உண்மையைச் சொல்லப்போனால் இந்த நாட்டில் வருணத்தின் அடிப்படையில்தான் வர்க்கமும் நிலைத்து நிற்கிறது. 

இதுகுறித்து தந்தை பெரியார் கூறும் கருத்து மிகவும் முக்கியமானது. ‘‘இந்நாட்டில் பார்ப்பனியத் தால், ஜாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சமஉரிமை இருந்தாலும், சமஉடைமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்து கொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் கோடீஸ்வரர், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் பல லட்சாதிபதி. இருவரும் பெரும் தனிவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனுடைய போக போக்கியம் குறைபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், கை முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து ஜில்லா கலெக்டர், ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும் சங்கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது. 

இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயானால் தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொது வுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஜாதி காரணமாகத்தான் பலர் மேன்மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார்கள்; இருக்கவும் முடிகிறது. ஜாதி காரணமாகத்தான் எல் லோரும் கீழ் மக்களாய் ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச காட்சியாகும்.

ஆங்கிலத்தில் கேஸ்ட், கிளாஸ் (caste, class) என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி, வகுப்பு என்று சொல்வதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்த ஜாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காத வனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. மேல் நாட்டில் ஜாதி (caste)  இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை(clase fight) துவக்க வேண்டியதாயிற்று. 

இங்கு ஜாதி(caste) இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை (caste fight)  துவக்க வேண்டியதாகும். பார்ப்பானும், பார்ப்பன சம்பந்தமும், பார்ப்பனிய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுஉடைமை வேஷம் போடுவதால் ஜாதி சங்கதியை மூடிவிட்டு ஆகாத காரியமான ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு(class)  உணர்ச்சியைப் பற்றிப் பேசி ஜாதியை ஒழிக்கப் பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோத விடுகிறார்கள். ஜாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சி யையும் அழிக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல் ஜாதிக்காரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரை பாகம் பொதுஉடைமை நமகு ஏற்பட்டுவிடும். அதாவது ஜாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத் தன்மையும் ஜாதியினால் சுரண்டப்படுகிறவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.

‘‘பொதுஉரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிற வனிடம்தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும்’’ என்பது பொது வுடைமைத் தத்துவத்துக்குப் பால பாடம் என்பதை மக்கள் உணரவேண்டும்.  - ‘குடிஅரசு’ தலையங்கம் (25.03.1944) 

உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சவந்த் கூறிய கருத்து முக்கியமானது. 

‘‘அரசியல் சட்டப் பிரிவு 16(4)இல் கூறப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்கள் என்போர் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட குடிமக்கள் ஆவர். அவர்களின் கல்வி, பொருளாதார பின்னடைவுக்குக் காரணம், அவர்களின் சமூகரீதியான பின்னடைவு தான். எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பை நிர்ண யிக்கும் போது சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்குவதற்கு காரணமான ஜாதியையே கவனத்தில் கொள்ளவேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மைக்குக் காரணமே அவர்களின் சமூக கல்வி ரீதியான பின்னடைவுதான். பொருளாதாரம் என்ற அளவுகோல் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கான அடையாளமாக இருக்கமுடியாது. அவர்களின் பொருளாதாரப் பின்னடைவுக்கு, சமூகப் பின்னடைவு காரணமாக இருக்கும்போதுதான், அவர்கள் பிற்படுத் தப்பட்டவர்களாகவே இருக்கமுடியும். அதோடு பணி களில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக் கையை மட்டும் காட்டி, போதுமான பிரதி நிதித்துவம் கிடைத்துவிட்டது என்று முடிவு செய்துவிட முடியாது. நிருவாகத்தின் பல்வேறு மய்யங்களிலும் பல்வேறு உயர்நிலைகளிலும் போதுமான பிரதிநிதித் துவம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும். நிருவாக அமைப்பில் (பிற்படுத்தப்பட் டோரின்) குரல் வலிமை மிக்கதாக இருக்கவேண்டும்; இதுதான் போதுமான பிரதிநிதித்துவம் என்பதன் அர்த்தமே தவிர, பணியாற்றக் கூடியவர்களின் மொத்த எண்ணிக்கையல்ல’’ என்கிறார் நீதிபதி பி.பி. சவந்த்.

வர்க்கப் போராட்டத்தை நடத்துவதிலும், தொழி லாளர்களின் உரிமைகளுக்காகத் தொழிலாளர்களைத் திரட்டுவதிலும்கூட ஜாதியும் தீண்டாமையும் எந்த அளவுக்கு முட்டுக்கட்டையாக உள்ள என்பது தொழிற் சங்க இயக்கத்தில் ஊறித் திளைத்த தோழர் வி.பி. சிந்தன் அவர்கள் தம் அனுபவ நிலையினை இவ்வாறு கூறுகிறார். 

‘‘தோழர்களே! நமது நாட்டில் தொழிற்சங்க இயக்கத்திற்குப் போராடும் தொழிலாளர் ஒற்றுமைக்கு ஜாதிச் சண்டைகளாலும் குறுகிய பற்று வெறிகளாலும் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான அபாயத்தை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுவே உங்கள் அனுபவமாகவும் இருக்கலாம். தொழிற்சாலையின் உள்ளேயே தீண்டாமையை நிலைநிறுத்தும் அள வுக்கு அவ்வபாயம் கொடுமையான வடிவங்களைப் பெற்று வருகிறது. ஒட்டுமொத்தமான வர்க்கப் போராட்டங்களிலிருந்து தாழ்த்தப்பட்ட வகுப்புத் தொழிலாளிகளைத் தனிமைப்படுத்தும் அளவுக்கு உறுதியான முயற்சிகளை நோக்கி அவ்வபாயம் சென்று கொண்டிருக்கிறது’’ (1979 ஏப்ரல் 11 முதல் 13 வரை நடைபெற்ற சி.அய்.டி.யூ. நான்காவது மாநாட்டில் தோழர் வி.பி. சிந்தன் அவர்களின் வரவேற்புரை யிலிருந்து) 

தந்தை பெரியார், ஜாதி ஒழிப்பையும் பெண்ண டிமை ஒழிப்பையும் அடிப்படையான கொள்கையாகக் கொண்டு இறுதிமூச்சு அடங்கும்வரை பிரச்சாரம் செய்தார். களங்கள் பல கண்டார் - சிறை வாசங்களையும் அனுபவித்தார். 

வைக்கம் போராட்டம் வெற்றி விழா நூற்றாண் டைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். ஒடுக் கப்பட்ட மக்கள் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கக்கூடாது என்ற வருண தர்மத்தின் ஆணி வேரை வெட்டியதுதானே அந்தப் போராட்டம்.

‘‘வைக்கம் வீரர் பெரியார்’’ என்று ‘நவசக்தி’யில் திருவிக எழுதியுள்ளார். 1929ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட முதல் மாநில சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் என்ன கூறுகின்றன? 

தீர்மானம் எண் 5 : மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களையெல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக் கூடாதென்றும், 

தீர்மானம் எண் 6: வருணாசிரமமென்ற கொடுமை யான கட்டுப்பாட்டையும், சமுதாய முறையில் காணப்படும் பிராமணர் க்ஷத்திரியர், சூத்திர, பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்றும்,

தீர்மானம் எண் 7 : மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லாப் பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபனங் களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டு மென்றும் தீர்மானிக்கிறது. 

தீர்மானம் எண் 8 : இவைகள் நிறைவேறச் செய் யப்படும் பிரச்சாரமும் முயற்சியும் ஒருசில சுயநல வகுப்பாரின் மத சம்பந்தமான பிடிவாதத்தினாலும் முட்டுக்கட்டையினாலும் போதிய அளவிற்கு சித்தி பெறாமலிருப்பதால், இதற்காக அரசாங்கச் சட்டம் அவசியம் என்று கருதுகிறபடியால், சட்டசபை பிரதிநிதிகளும், சர்க்காரும் தக்க ஏற்பாடு செய்து பொது ஜன முயற்சிக்கு உதவி - புரிய வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 9 : மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப் படும் பட்டங்களை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு பொதுஜனங்களை கேட்டுக்கொள்கிறது. 

தீர்மானம் எண் 10: ஜாதி அல்லது சமயப் பிரிவுகளை காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக்கூடாதென்றும் கேட்டுக் கொள்கிறது. 

இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே பெயருக்குப் பின்னால் ஜாதி ஒட்டைப் போடுவதற்கு வெட்கப்படக்கூடிய  மாநிலம் தமிழ்நாடுதானே! 

1929 செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் ‘இன்று முதல் நம் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாதிப் பட்டத்தைத் துறக்கிறேன்’ என்று கீறிகி சவுந்தரபாண்டியன் (நாடார்), சிவகங்கை (இராமச்சந்திர (சேர்வை) போன்றோர் மாபெரும் மாநாட்டில் உறுதி கூறி, அந்த நொடி முதல் ஜாதியற்ற மனிதர்கள் ஆனார்கள். 

தந்தை பெரியார் பெயரை ஒட்டி இருந்த இராமசாமி நாயக்கர் என்னும் ஜாதி ஒட்டை 1927ஆம் ஆண்டிலேயே ஒதுக்கித் தூக்கி எறிந்தார். (‘குடிஅரசு’ 25.12.1927) 

இன்றைக்குக் கூட இந்திய அரசமைப்புச் சட்டத் தில் (17ஆம் பிரிவு) தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்றுதான் இருக்கிறதே தவிர தீண்டாமைக்கு மூல ஆதாரமான ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று இல்லையே! 

தந்தை பெரியார் தம் வாழ் நாளில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானம் என்ன கூறுகிறது? 

அரசமைப்புச் சட்டம் 17ஆம் பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ள ‘தீண்டாமை (ஹிஸீ ஜிஷீuநீலீணீதீவீறீவீtஹ்)  ஒழிக்கப்படு கிறது என்பதற்குப் பதிலாக ஜாதி (சிணீstமீ) ஒழிக்கப் படுகிறது என்று திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். 

ஜாதி, வர்ணாசிரமத்தின் மூலவேர்களான ஹிந்து மதக் கடவுள்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், இதி காசங்கள், புராணங்களை விமர்சித்ததோடு மட்டுமல் லாமல், கொளுத்தியதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் 13(2), 25(1), 26, 29(1) (2) 308 ஆகிய பிரிவுகளைக் கொளுத்தும் போராட்டத்தையே நடத்திக் காட்டி னாரே. 

அப்போராட்டத்தில் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டு 3 ஆண்டுகள் வரை சிறையில் வாடினார்களே! சிறைக்குள்ளேயே மாண்டவர்களுண்டு; சிறைச் சாலையில் பிறந்த குழந்தைக்குச் ‘சிறைப் பறவை’ என்று பெயர் சூட்டப்பட்டது கூட உண்டு. 

சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடி யாயிற்று. ஆனாலும் இன்னும்  தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் நீரில் மலத்தைக் கொட்டும் கொடு மனிதர்களும் இருக்கிறார்களே!

‘‘இருட்டறையில் உள்ளதடா உலகம் - ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!’’ என்று புரட்சிக் கவிஞர் கோபாவேசத்துடன் எழுதினாரே! பாபு ஜெகஜீவன்ராம் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர், முப்படைகளும் அவர் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. படித்தவர் -  செல்வந்தர் - இவ்வளவு இருந்தும் காசியில் சம்பூர்ணானந்து சிலையை அவர் திறந்தார் என்பதற்காக - ஓர் உயர் ஜாதிக்காரரின் சிலையைத் தாழ்ந்த ஜாதிக்காரரான ஜெகஜீவன் திறந்ததாலேயே - சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்று காசி பல்கலைக் கழகப் பார்ப்பன மாணவர்கள் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சிலையைக் கழுவினார்களே! 

அந்த நிகழ்ச்சி முடிந்து சென்னையில் மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது ‘இந்தக் கொடுமையைப் பெரியார் பிறந்த மண்ணில் பேசாமல் வேறு எங்குப் பேசுவது?’ என்று குமுறியதுண்டே!

வர்க்கப் பார்வையில் சகல வசதி வாய்ப்புப் பெற்றவர் என்றாலும், வருணப் பார்வையில் அவர் தீண்டத்தகாதவர் என்ற நிலைதானே! 

‘தீண்டாமை  க்ஷேமகரமானது’ என்று கூறிய  காஞ்சி சங்கராச்சாரியாரைத்தானே ஜெகத்குரு என்று ஒரு கூட்டம் கூறிக்கொண்டு திரிகிறது? 

ஹிந்துக்கோயிலில் ஹிந்து மதத்தைச் சார்ந்தவன் அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகராக நியமிக்கப் பட்டால் சாமி தீட்டுப்பட்டு விடும் - சாமி செத்துப் போய்விடும் என்று கூறும் நீதிபதிகள் இருக்கிறார்களே! 

கேரளாவில் நடைபெற்ற ‘பிராமணர்கள் மாநாட் டில் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற ஒரு நீதிபதியும் (பெண்) கலந்துகொண்டு, தங்கள் ஜாதி உணர்வை வெளிப்படுத்தும் நிலை தானே?

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா பிராமண மாநாட்டில் கலந்துகொண்டு பேசவில்லையா? 

தீண்டாமை சட்டப்படி குற்றம் என்று ஒரு பட்சத்தில் சொல்லிக்கொண்டு கோயில் கருவறையில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது எந்த வகையில் சரி? 

சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமைக் கட்சியும் 1925ஆம் ஆண்டில் பிறப்பெடுத்தன. 

நம்மிரு இயக்கங்களே பேதமற்ற சமூகத்தை உருவாக்குவதுதான்! இந்த முயற்சியில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநாடு நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருஞ்செயலுக்கு திராவிடர் கழகம் தனது பாராட் டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள் கிறது. 

மாநாடு சிறக்கவும் மலர் மணம் கமழ்ந்து வெளி வரவும் உள்ளம் கனிந்த வாழ்த்துகள்!

நன்றி: 'தீக்கதிர்' - 14.5.2023


No comments:

Post a Comment