தலையங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

தலையங்கம்

 இன்னும் மேல்பாதி கிராமங்களா?

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா அம்மன் கோயில் வழிபாட்டுப் பிரச்சினையில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை வெடித்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுமூக முடிவை எடுப்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் இந்த 2023ஆம் ஆண்டிலும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வெட்கப்படத்தக்கது. அதுவும் தந்தை பெரியார் பிறந்த திராவிடப் பூமியில் நடந்திருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டியதாகும்.

காங்கிரசில் இருந்தபோதே ஜாதி, தீண்டாமையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கியவர் தந்தை பெரியார்.

காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சேரன்மாதேவி குருகுலத்தில் ஜாதி வேற்றுமை பாராட்டப்பட்டது என்பதற்காக - அதில் தலையிட்டு, அந்தக் குருகுலத்தையே இழுத்து மூடும்படிச் செய்தவரும் தந்தை பெரியாரே!

தமிழ் மண்ணையும் கடந்து கேரளாவில் வைக்கம் வரை சென்று போராடி, "வைக்கம் வீரராக" உலா வந்த உலகத் தலைவர் பெரியார்! 

அதன் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசும், கேரள மாநில அரசும் இணைந்து கொண்டாடப்பட்டுள்ளது. அதற்கான தொடக்க விழா கேரளாவில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதல் அமைச்சரும், கேரள முதல் அமைச்சரும் பங்கேற்றனர்.

இப்படியொரு கால கட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாடு செய்யக் கூடாது என்று இன்னொரு பிரிவினர் பிரச்சினை செய்வது சட்டப்படி மட்டுமல்ல; மனித உரிமைப்படி மகா குற்றமல்லவா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 117ஆம் பிரிவின்படி தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது குற்றமே, தண்டனைக்குரியதே! இந்த நிலையில்  தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைளை மேற்கொண்டு தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்று பேசுபவர்களைப் பார்த்து "ஏன் ஒரே ஜாதி, என்று சொல்லுவது தானே!" என்று திராவிடர் கழகத் தலைவர் விடுத்த வினாக்கணைக்கு விடை எங்கே? இந்தக் கருத்தை நாடெங்கும் பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும். கழகப் பிரச்சாரகர்கள், தோழர்கள் இதனை மனதிற் கொண்டு செயல்பட வேண்டும்.

தந்தை பெரியார் தம் வாழ்நாளின் இறுதிப் போராட்டமாக அறிவித்தது - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்பதே!

அதற்கான போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த போதே - தன் இறுதி மூச்சைத் துறந்தார். 

ஆனாலும், தந்தை பெரியார் அறிவித்த, போராட்டக் களத்தில் நின்ற அந்தப் போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் கொண்டு வந்த போதிலும், அதனை எதிர்த்து ஆதிக்க ஜாதியினரான பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் செல்லுவது என்பதை ஒரு வழிமுறையாகக் கொண்டுள்ளனர்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்  தனது ஆட்சியின் நூறாவது நாளில் 28 கோயில்களில் அனைத்து ஜாதிகளிலிருந்தும் அர்ச்சகர்களை நியமனம் செய்து மனித உரிமைப் பொன்னேட்டில் வைர வரிகளைப் பொறித்தார். இந்த 28 பேர்களில் 5 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் ஓதுவார் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டார்.

இதற்குப் பிறகும் விழுப்புரத்தையடுத்த மேல்பாதி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒரு சாரார் தடை செய்தனர் என்றால், தாக்குதல்களைத் தொடுத்தனர் என்றால் - இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது; இவ்வளவுக்கும் அக்கோயில் இந்து அறநிலையத் துறைக்குக் கட்டுப்பட்ட கோயிலாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர் என்ற உச்சக் கட்ட உரிமை ஒளி மேலெழுந்து நிற்குமானால், இந்த மேல்பாதி கிராம அட்டகாசங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விடுமே!

No comments:

Post a Comment