ஆசிரியர்கள் நலன் காப்பதில் அரசு உறுதுணையாக இருக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

ஆசிரியர்கள் நலன் காப்பதில் அரசு உறுதுணையாக இருக்கும்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை, மே 30 ஆசிரியர்களுக்கு இந்த அரசு என்றும் துணையாக இருக்கும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அய்ம்பெரும் விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நேற்று (29.5.2023) நடந்தது. இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஆசிரியர்களுக்கு ‘இளஞ்சூரியன் விருதுகள்’ வழங்கப்பட்டன. மேலும், சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பாடலையும் அமைச்சர்கள் வெளியிட்டனர். முன்னதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் வரவேற்று பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது: ஆசிரியர்களை மதிக்கும் இயக்கம் திராவிட இயக்கம். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை 2006ஆம் ஆண்டு கால முறை ஊதியத்துக்கு கொண்டு வந்தது கலைஞர்தான். 652 ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஆசிரியர் பணி மாறுதல் வெளிப்படையாக கவுன்சலிங் முறைப்படி, 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிட மாறுதலை செலவில்லாமல் பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுளுக்கும் அது செல்லும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அரசுப் பள்ளியில் படித்த மாணவி 600 மதிப்பெண் பெற்றதற்கும் காரணம் நீங்கள்தான், அதேபோல மாற்றுப் பாலின மாணவியும் சாதனை படைத்ததற்கு நீங்கள் தான் காரணம். இவற்றை மனதில் வைத்துத்தான் ஆசிரியர்களுக்கு பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் நலன் காப்பதில் இந்த அரசு துணை நிற்கும். 

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment