ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : போலி ஆடியோ, போலி வீடியோ என மோசமான அரசியலில் இறங்கிவிட்டதே பா.ஜ.க.? 

- வா.ஆறுமுகம், புதுவை

பதில் : என்ன செய்வது, பொய்கள் உற்பத்தித் தொழிலாகிறது.  Trolls Factory ஆக தங்களை ஆக்கிக் கொண்டால், இறுதியில் 'சைபர் கிரைம்' குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டிய நிலை கட்டாயம் வரும். தமிழ்நாட்டில் பல குற்றவாளிகள் - மோசடி மன்னர்களாக காவிக் கட்சியில் அங்கம் வகித்தவர்களாகவே இருப்பது அன்றாடச் செய்தி யாகவில்லையா? ரசியுங்கள். பிறகு தன்வினை தன்னைச் சுடும். 

கேள்வி : "திராவிடம்" என்றாலே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கசப்பது ஏன்?

- த.கார்த்திகேயன், மதுரை

பதில் : பீகார் உயர்ஜாதி ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு எப்படி சமத்துவ திராவிடம் இனிக்கும்? வர்ணபேத சனாதனமே அவருக்கு இனிக்கும் என்பதால் பித்தம் தலைக்கேறி, அரசியல் சட்ட பிரமாணத்தை மறந்து அங்கலாய்ப்பு, தனிநபர் ஆலாபனம் செய்து திருப்தி அடைகிறார் போலும்.

கேள்வி : அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை அசைத்துப் பார்த்தால் பூகம்பம் வெடிக்கும் என்று மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி பாலி நரிமன் கூறியுள்ளாரே?

- பா.தட்சிணாமூர்த்தி, திருத்தணி

பதில் : உண்மையைக் கூறியுள்ளார் பாலி நாரிமன் - பாராட்டு!

கேள்வி : சூடானில் உள்ள இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைக்கு 'ஆபரேசன் காவேரி' என்று பெயர் சூட்டியுள்ளார்களே? இதனால் பா.ஜ.க.விற்கு கருநாடக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற பா.ஜ.க.வின் ஆசை நிறைவேறுமா?

- வெ.முரளிதரன், ஒசூர்

பதில் : 'தந்திர மூர்த்தியே போற்றி போற்றி!' - நினைவூட்டினீர்கள் நல்லது - இதனால் கருநாடகம் கிடைக்குமா மீண்டும்? சந்தேகமே!

கேள்வி :  பார்ப்பனர்களுக்கு என்று இந்தூரில் உள்ள ஜனபவ் பகுதியில் பரசுராம லோக் ஆன்மிகப் பாதை அமைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் கூறியுள்ளாரே? இங்கு பிறஜாதியினரை நடக்க அனுமதிப்பார்களா?

- அ.அர்ச்சுனன், நாகர்கோயில்

பதில் : அங்கே ராஜாவையும் மிஞ்சும் ராஜவிசுவாச ஆட்சி நடைபெறுகிறது! பார்ப்பன நலவாரியம் உருவாக்கும் பாதையும் தனி பேணலும் அதிசயம் அல்ல! எதுவும் காவி ஆட்சியில் நடைபெறலாம்.

அங்கு வாக்கு வாங்கி பா.ஜ. ஆட்சி வரவில்லையே! குறுக்கு வழிதானே!

கேள்வி : இந்துத்துவ அமைப்பினர் ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்றவற்றை மசூதிகளின் முன்பு ஏன் கொண்டாடுகிறார்கள்?

- தி.வெற்றிவேலன், புதுக்கோட்டை

பதில் : கலவரங்களைத் தூண்டத்தான்! மதக் கலவரங்களால்தான் தங்கள் கட்சியை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள்!

கேள்வி : வந்தே பாரத் ரயிலுக்கு கொடிகாட்டச் செல்லும் மாநிலங்களில் அந்த மாநில அரசின் திட்டங்களை தனது திட்டமாக தம்பட்டம் அடிக் கிறாரே மோடி?

- வே.பெருமாள், வியாசர்பாடி

பதில் : எதற்கும் ஒரு முடிவு ஏற்படுவது காலத்தின் கட்டாயம்.

கேள்வி : பெரியார் கொள்கைகளைப் பின்பற்றினால் வாழ்க்கை சுதந்திரமாகவும், லேசாகவும் இருக்கிறது என்று நடிகர் சத்யராஜ் கூறுகிறாரே?

- மீ.முரளிதரன், மதுரை-9

பதில் : அவரது அனுபவம் நிறைந்த வாழ்க்கை உண்மையை மற்றவரும் பயன்பெற பகிர்ந்து கொள்கிறார். மறுக்க முடியாத உண்மைதானே!

கேள்வி : இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போடாத தமிழ்நாட்டில், அந்தக் கட்சி - இந்தக் கட்சி என்று இல்லாமல் மேனாள், இன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் பதவியில் இருப்பவரைத் தவிர ஏனைய குடும்ப உறுப்பினர்கள், ரத்த சொந்தங்களின் பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைத்துக் குறிப்பிடும் நடைமுறை தொடங்கியுள்ளதே?

- மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் : புதுப்புது வியாதி  பரப்பும் 'கிருமிகள்' நுழைவது இயல்பு - எச்சரிக்கை தேவை!

கேள்வி : சிறுபான்மையினர் மத சுதந்திரத்தை மீறுகின்ற இந்திய அரசு அமைப்புகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க பன்னாட்டு மத சுதந்திர ஆணையம் அமெரிக்க அரசு நிர்வாகத்துக்குப் பரிந்துரைத்துள்ள பிறகாவது ஒன்றிய பா.ஜ.க. அரசு திருத்திக் கொள்ளுமா?

- ச.ஜெயக்குமார், பெரம்பூர்

பதில் : அப்படித் தெரியவில்லை. 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் தீர்ப்பு சரியாக இருப்பின் மாறலாம்! அவர்கள் எல்லா வித்தைகளையும் கற்றவர்கள் ஆயிற்றே!


No comments:

Post a Comment