முதலமைச்சரின் கவனத்துக்கும் - செயலாக்கத்திற்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 15, 2023

முதலமைச்சரின் கவனத்துக்கும் - செயலாக்கத்திற்கும்!

அமைச்சர்களை - அரசுத் துறை செயலாளர்களை மாற்றுவது என்பது ஒரு முதலமைச்சரின் தனித்த சிறப்புரிமை - மாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவையே!

கல்வித்துறையைப் பொறுத்தவரை அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பதிலாக அத்துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குநர்களாக்குவதே உகந்ததாகும்! 

அமைச்சர்களை - அரசுத் துறை செயலாளர்களை துறை மாற்றம் செய்வது - ஒரு முதலமைச்சரின் சிறப்புரிமையாகும்; இடமாற்றங்கள், துறை மாற்றங் கள் தவிர்க்கப்பட முடியாதவையே! அதேநேரத்தில், கல்வித் துறையைப் பொறுத்தவரை, அத்துறையில் அனுபவம் பெற்ற அதிகாரிகளை கல்வித் துறை இயக்குநர்களாக நியமிப்பதே உகந்ததாக இருக்கும்; நமது முதலமைச்சர் அவர்களின் முக்கிய கவனத்துக்கும், செயலாக்கத்திற்கும் இதனைக் கொண்டு வருவதாக  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

அண்மையில், தமிழ்நாடு அமைச்சரவையிலும் - அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட துறைகளிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்.

அது ஒரு முதலமைச்சரின் சிறப்புரிமை(Special Prerogative). 

அதுபோலவே அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் நிர்வாகப் பணிகளிலும் மாற்றங்கள் என்பவை தவிர்க்க முடியாதவை.

அதிலும்கூட, 

‘‘இதனை இதனால் இவர்முடிப்பர் என்றாய்ந்து''

அதனை அவரிடம் ஒப்படைத்து, பணி சிறக்க ஒத்துழைப்பைப் பெறுவதும் முதலமைச்சரின் ஆளுமை யில் ஒரு முக்கியமான அம்சமாகும்.

இரண்டுமே விரும்பத்தகாதவையாகும்!

பொதுவாக அரசில் எந்தத் துறையாக இருந்தாலும், அடிக்கடி மாற்றப்படுவதும், நீண்ட காலம் ஒருவரை மாற்றாமல் தொடருவதும் - இரண்டுமே விரும்பத்தகாத வையாகும்.

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' ஆட்சியை நமது முதலமைச்சர் மிகச் சிறப்பாக நடத்துவதுடன், ஆட்சி மாற்றங்கள் - நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆகிய வற்றைப்பற்றிய விமர்சனங்கள் - மக்கள் கருத்துகள் - நடைமுறையில் எதிர்பார்த்த - மாறான விளைவுகளை அது உருவாக்குவதாக இருந்தால், அதனை மாற்றுவ தற்கோ, திருத்துவதற்கோ சிறிதும் தயங்காமல், ‘‘செயத் தக்க செய்யாமையாயினுங் கெடும்'' என்பதை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு, அனைத்து மக்களின் பேராதரவுக் குடை நிழலில் நின்று ஆளுகிறார்.  நமது மக்கள் முதல மைச்சர் அண்மையில் செய்த சில அரசு செயலாளர்கள் மாற்றங்கள்  (தலைமை அதிகாரிகள் நியமனம் உள்பட) செய்ததில் பள்ளிக்கல்வித் துறைபற்றி அதன் சீரமைப்புக்குரிய மாற்றம்பற்றிய மாற்றத்தினை யோசித்து வருவதாகத் தெரிகிறது.

முன்பு பல காலம் இருந்த கல்வித் துறை இயக்குநர் பதவிகளை அப்படியே நிரப்பாமல் வைத்து, அதை அய்.ஏ.எஸ். ஆணையர், அதிகாரிகள் பொறுப்பில் விட்டது -கல்வித் துறை அதிகாரிகள், கல்வித் துறை ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் மத்தியில் மன நிறைவை அளிக்கவில்லை.

அடிமுதல் உச்சம்வரை புரிந்த வாய்ப்பு அவர்களுக்கு உண்டு!

அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல; ஆனால், அவர்களுக்கென்று உள்ள சில, அடிக்கடி மாற்றப்படும் தன்மை காரணமாக அது பள்ளிக் கல்வித் துறை போன்ற துறைகளில், இயக்குநர்களால் செய்யப்பட்ட கல்விப் பணி - ஆசிரியர்கள் முதலியோர் உடனடியாகத் தங்கள் குறைகளுக்குத் தீர்வு காண, போதிய கலந்துரையாடிய கருத்துப் பரிமாறல்கள் அல்ல - கல்வித் துறையில் ஊறித் திளைத்த அனுபவம் நிறைந்தவர்களே - அத்துறை கல்வி இயக்குநர்களாக வருவதன்மூலம் அடிமுதல் உச்சம்வரை புரிந்த வாய்ப்பு அவர்களுக்கே உண்டு.

மேலும் கல்வி அதிகாரிகளாக நியமனம் ஆகி, அதில் அனுப்பப்பட்டு, அத்துறையிலேயே அனுபவப் பாடங் களையும் அவ்வப்போது உணர்ந்தவர்களுக்கு - உயர்பதவி என்பது ஓர் ஊக்க மாத்திரை அல்லவா? அந்த வாய்ப்பை (இயக்குநர் பதவிதான்) அவர்கள் பெறாமல் தடுப்பது சமூகநீதியாகாது!

கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு போன்ற வர்களை தக்க வகையில் பயன்படுத்திக் கொண்டதால் தான் காமராசரின் கல்விப் புரட்சி - தந்தை பெரியாரின் பெரு விழைவுக்கு ஏற்ப விரிந்து பரந்தது!

இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட இயக்குநரகங்களை இயக்கச் செய்தல் மிகவும் அவசியம்; அவசரம்!

அத்தகைய வாய்ப்பு இவ்வாட்சியில் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதே என்ற ஆதங்கம் பயிற்சி பெற்ற கல்வி அதிகாரிகளிடம் மிகுந்து காணப்படும் நிலையிலும், மிகப்பெரும் அளவில் பள்ளி வகுப்பறைகளில் - மாணவர்களை நடத்தும் ஆசிரியப் பெருமக்களின் கவலையாகவும் இருப்பதால்,மீண்டும் பழைய இயக்குநர் களின் பதவிகளைப் புதுப்பித்து, புத்தாக்கச் சிந்தனை களில் அவர்களையும் பழக்கி, ஒரு புதிய மறுமலர்ச்சியைப் பள்ளிக் கல்வித் துறையில் உருவாக்கிட வேண்டுமென்று பெருவாரியான கல்வியாளர்களின் கருத்தையும், அக்கருத்து சரியானதே என்ற நமது எண்ணவோட்டம் காரணமாகவே, இதுபற்றி செயல்திறன் மிகுந்த நமது முதலமைச்சர் விரைந்து நல்ல முடிவெடுத்து, இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட இயக்குநரகங்களை இயக்கச் செய்தல் மிகவும் அவசியம்; அவசரம். கல்வி அறிஞர் களின் கனிந்த அனுபவமும், ஆழ்ந்த கல்வியறிவும் அரசுக்குப் பயன்படுவது மிக அவசியம்!

முதலமைச்சர் இணக்கமாகச் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்!

அந்நிலை அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை; காரணம், அவர்கள் அடிக்கடி பல்வேறு துறைகளுக்கு மாற்றப்படுபவர்கள் என்பது மறுக்கப்பட முடியாதது. இதுபற்றி முதலமைச்சர் இணக்கமாகச் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.

கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் மேலும் கல்விப் பெருக்கு விரிவாகும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.5.2023


No comments:

Post a Comment