சிந்து சமவெளி அகழாய்வு நூற்றாண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

சிந்து சமவெளி அகழாய்வு நூற்றாண்டு!

ஈரோட்டில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தில் ஒரு முக்கிய அம்சம் - சிந்து சமவெளி அகழ் ஆய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர்ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டைக் கொண்டாடுவது பற்றியதாகும்.

சர் ஜான் மார்ஷல் 1913இல் தட்சசீலத்தில் முதலில் தொல்லியல் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார். 1918இல் தொல்லியல் அகழ் ஆய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களைக் கொண்டு தட்சசீலத் தில் தொல்லியல் அருங்காட்சியகத்தை அமைத்தார். பின்னர் சாஞ்சி மற்றும் சாரநாத் பவுத்த தொல்லியல் களங்களில் அகழ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரிகம் மற்றும் மவுரியப் பேரரசர் அசோகர் காலம் குறித்தான ஆவணங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குநரான அலெக்சாண்டர் கன்னிங்காமின் வழிகாட்டுதலின்படி ஜான் மார்ஷல், 1920இல் அரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) அகழாய்வுகள் மேற்கொண்டார்.

சிந்துவெளிப் பண்பாட்டை ஆய்வாளர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் செப்டம்பர் 20, 1924; ஜான் மார்ஷல் 1902ஆம் ஆண்டு துவங்கி 1928ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத் தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர். 

ஜான் மார்ஷல் மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா எனும் இரண்டு இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் கூறுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, இந்த இரண்டு நாகரிகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் இது திராவிட மொழிக்குடும்பத்தின் நாகரிகமே, வேத நாகரிகத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்தார். வேத காலத்தை விட 1500 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் இது என்பதையும் ஜான் மார்ஷல் நிரூபித்தார்.

தொல்லியல் துறை தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham 1853-56) தான் முதன் முதலில் சிந்து சமவெளி ஆய்வைத் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வை அவர் தொடங்கியதற்கு முக்கிய காரணம் அவருக்கு பவுத்தத்தின் தொன்மம் குறித்து இருந்த தேடலே ஆகும். பவுத்தத்தின் தொன்மங்களைத் தேடிப் புறப்பட்டவர்களின் விடையாகவே சிந்துவெளி நாகரிகம் நமக்குக் கிடைத்தது மேலும் சிந்துவெளியானது ஒன்றரை மில்லியன் சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பளவிலான பெரிய நாகரிகமாகும். இந்த நாகரிகம் கி.மு 2600ஆம் ஆண்டு தொடங்கி கி.மு 2500 - 2000 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தது 

சிந்துவெளி நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது. சிவப்பு - கருப்பு மற்றும் கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், தார் கொண்டு தண்ணீர் கசிவைத் தடுத்து, கட்டமைக்கப்பட்ட பெரிய குளம், பொது தானியக் களஞ்சியம் இருப்பது என்பன இந்த நாகரிகத்தில் உபரி கிடைத்ததற்கான சான்றாக அமைந்துள்ளன. களிபங்கன் எனும் இடத்தில் நடைபெற்ற அகழ் ஆய்வில் கிணற்றுக்காக செய்யப்பட்ட செங்கற்கள் மண் மற்றும் செம்பினால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள்  கிடைக்கப் பெற்றன.

"தொடக்கக் கால இந்தியர்கள்" என்ற நூல் டோனி ஜோசப் என்பவரால் எழுதப்பட்டது (2018).

அதில் அவர் கூறியிருக்கும் முக்கிய ஆய்வு: அரப்பா நாகரிகத்தில் பேசப்பட்ட திராவிட மொழிகள் பற்றிய சமீபத்திய அறிக்கை மரபணு ஆய்வுக்கு இணங்குகிறது என்று கூறுகிறது.

சமஸ்கிருத ஆரிய வேதக் கலாச்சாரம் அரப்பா நாகரிகத்திற்குப் பிறகு வந்தது என்றும் கூறியுள்ளார்.

சிந்து சமவெளியில் உள்ள 600 ஊர்களின் பெயர்கள் - தமிழ்ப் பெயர்களேயாகும். கீழடி அகழ் ஆய்வுக்குப் பிறகு - தமிழ் மொழிக்கும், சிந்து சமவெளிக்கும் இடையிலான தமிழ் - திராவிட உறவு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

வெளியிலிருந்து இந்நாட்டுக்குள் பிழைக்க வந்த ஆரியர்களின் படை எடுப்பு சிந்து சமவெளி அழிவுக்கு முக்கிய காரணமாகும்.

"இந்திய வரலாறு - ஒரு மார்க்சிய கண்ணோட்டம்!" எனும் நூலை எழுதிய ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாத் - சிந்து சமவெளியில் இருந்த அணைகளை ஆரியர்கள் உடைத்தனர் என்று எழுதுகிறார்.

வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த (கல்வி) முரளி மனோகர் ஜோஷி ஒரு தந்திரத்தைச் செய்தார்.

சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்பதற்கான சூழ்ச்சிதான் அது; சிந்து சமவெளி அகழ் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட காளை உருவச் சின்னத்தை ‘மார்பிங்' செய்து குதிரையாக மாற்றினார் கள். காரணம் குதிரை என்பது ஆரியர்களின் சின்னம் என்பதால்.

ஆரியர்களின் மேலாதிக்கத்துக்கு சவால்கள் எழுந்துள்ள இந்தக் காலகட்டத்தில், ஆரியப் பார்ப்பனர்கள் என்ன சொல்ல ஆரம்பித்துள்ளனர்? ஆரியர் - திராவிடர் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை, வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பேச ஆரம்பிக்கவில்லையா?

தந்தை பெரியார் உறுதியாகக் கூறியதுபோல் "நாட்டில் நடப்பது வெறும் அரசியல் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே" என்றார். அதுதானே இன்றைய பிஜேபி தலைமையிலான ஆட்சியின் உண்மைத் தன்மை.

இந்த நிலையில் சிந்து சமவெளி ஆய்வை நடத்தி, அது திராவிட நாகரிகமே என்று தக்க தரவுகளுடனும், சான்றுகளுடனும் நிரூபித்த வகையில் அதன் நூற்றாண்டு 2024இல் வருவதால், திராவிட இயக்கமான திராவிடர் கழகம் தனது பொதுக் குழுக் கூட்டத்தில், இதன் நூற்றாண்டைச் சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்திருப்பது சாலப் பொருத்தம் தானே!

இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள், அசாம் மக்களும் திராவிடர்களே என்று டாக்டர் அம்பேத்கர் உறுதிபடுத்தியதும் நோக்கத்தக்கதாகும்.

No comments:

Post a Comment