மதவாதம் - ஜாதிவாதம் பேசும் பி.ஜே.பி.,க்கு கருநாடக மக்கள் பாடம் கற்பித்துவிட்டனர்.மக்கள் தயார்! எதிர்க்கட்சித் தலைவர்களே கருநாடகா முடிவைத் தொடரச் செய்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

மதவாதம் - ஜாதிவாதம் பேசும் பி.ஜே.பி.,க்கு கருநாடக மக்கள் பாடம் கற்பித்துவிட்டனர்.மக்கள் தயார்! எதிர்க்கட்சித் தலைவர்களே கருநாடகா முடிவைத் தொடரச் செய்வீர்!

மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி.,க்கு கருநாடக மக்கள் தக்க பாடம் கற்பித்துவிட்டனர். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களே ஒன்றிணைந்து கருநாடகம் காட்டிய பாதையைப் பின்தொடர்வீர்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

கருநாடக மாநிலத்தில் 10.5.2023 அன்று மாநில சட்டமன்றத்திற்கான  தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த முறை ஆளும் கட்சியாக குறுக்குவழியில் ஆட்சியைப் பிடித்து, அமைக்கப்பட்ட கருநாடக மாநில பா.ஜ.க. ஆட்சி - அதனை மய்யப்படுத்தி ‘‘தென்னாட்டில் முதலில் நாங்கள் நுழைவு வாயில் அமைத்துள்ளோம்; இதன்மூலம் தென்னாட்டையும் காவி மயமாக்கி, ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்தும் பா.ஜ.க. ஆட்சிகளை உருவாக்குவோம்; அதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், செயலாளர் ஹோசுபுலே போன்றவர்களது வியூகங் களும், செல்வாக்கும், தாக்கமும், பிரச்சார வித்தைகளும் பயன்படும்'' என்று பெரிய கனவு கண்டார்கள்; மனப்பால் குடித்தார்கள்.

'காங்கிரஸ் இல்லாத இந்தியா!' 

மோடியின் குரல் என்னாயிற்று!

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற ஒரு கோஷத்தை மோடி எங்கும் முழங்கினாலும், இதுவரை பா.ஜ.க. ஆட்சிகள் அமைந்த மாநிலங்களில் மக்களின் வாக்கு களை நேரிடையாகப் பெற்று ஆட்சி அமைத்த மாநிலங் கள் சில மாநிலங்களே; மற்ற பா.ஜ.க. ஆட்சிகளோ தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியோ, அல்லது வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, சி.பி.அய். என்று திரிசூலத்தைக் காட்டி, அச்சுறுத்தி, தங்களது ஆதரவாளர்களாக மாறவோ செய்து - பொது ஒழுக்கச் சிதைவை ஏற்படுத்தி, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சிகளை உருவாக்கினர். சிறுபான்மை சமூக மக்கள்மீது எல்லையின்றி கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பு அரசியல்மூலம் நாடே தங்கள் வசம் என்ப தைப்போல ஒரு பொய்முகம் காட்டி, அரசியல் நடத்தி வரும் நிலையில், கருநாடகத் தேர்தல் முடிவுகள்மூலம் அந்த மாநில வாக்காளப் பெருமக்கள் எல்லாவற்றிற்கும் பா.ஜ.க.வின் முகத்தில் அறைந்ததைப்போல, பெரும் அதிர்ச்சித் தோல்வியையே பரிசாக அளித்து வெறுப்பு அரசியல் ஆணவத் தாண்டவத்திற்குப் பாடம் கற்பித் துள்ளார்கள்!

‘‘பெரும் தேர்தல் மதியூகி'' பிரதமர் மோடி, ‘‘ரோட் ஷோ'' - சாலைப் பேரணிகளை நடத்தி 6, 7 நாள்களுக்கு மேல் கருநாடகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, காங்கிரஸ்மீதும் அவதூறுகளை அள்ளிவீசி, சிறுபான் மையினர் அனைவருமே மோசம், நாட்டிற்கு எதிரான வர்கள், மத மாற்ற வேலை செய்கின்றவர்கள் என்பது போன்றும், காங்கிரசையும், நேரு குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் தாக்கியும், தன்மீது கருநாடக வாக்களர்களிடம் பட்சாதாப உணர்வு வர 99 முறை தன்னைத் தாக்கியிருந்தார்கள் என்றும், கேரளாபற்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.  திரைப்படத்தின் பிரச்சார விளம்பரதாரர் போலவுமே பிரச்சாரத்தை இறுதிவரை செய்தார். பூக்களை அவர்மீது பொழிந்தனர்; அவை வாக்குகளாக மாறவில்லை!

தேர்தலுக்கு முன்பே, தன் நிதியாக கருநாடகத்திற்கென ஒரு பெருந்தொகையை ஒதுக்கினார்.

சூடானில் உள்நாட்டுப் போரில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் திட்டத்திற்குக்கூட (ஒரு தேர்தல் உத்திபோல) ‘‘ஆபரேஷன் காவேரி'' என்றே பெயரிட்டு, அதை தேர்தல் பிரச்சாரத்திலும் முழங்கினார்!

கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலி செய்த மோடிக்குக் கருநாடக மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்!

கூட்டாட்சித் தத்துவத்தையே  கேலி செய்வதுபோல், எங்கும் டபுள் என்ஜின் (ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி, ஆட்சி) ஆட்சியில் இருந்தால்தான் வளர்ச்சி சாதிக்க முடியும் என்று கூறி, அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய பெருமைகளையே கொச்சைப்படுத்தி, முறையான கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக சவால்விடுவது போன்று பிரச்சாரம் செய்தார்.  

அதை கருநாடக வாக்காளர்கள் ஏற்கவில்லையே!

இலவசத்தை எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில் அறிவித்ததை மிகவும் பரிகசித்து - (ஒரு எம்.பி.யைவிட்டு  உச்சநீதிமன்றத்தில் இதுபற்றி வழக்குத் தொடுத்தும் பார்த்த நிலையில்), அக்கட்சி, உத்தரகாண்டிலும் சரி, தெற்கே கருநாடகத்திலும் பா.ஜ.க. இலவச அறிவிப்பு களை வாரி வழங்கியதைச் சுட்டிக்காட்டவே, ‘காஸ் சிலிண்டருக்கு' மாலை போட்டு, வாக்காளர்கள் வாக்குப் போடத் தொடங்கினர் என்பது அவர்களுக்கு வாக்காளர்கள் தந்த நல்ல பாடமே!

12 அமைச்சர்கள் தோற்றனர் - பல ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில்! பா.ஜ.க. சபாநாயகரும் தோல்வியைத் தழுவினார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறுபான் மையினர்மீது வெறுப்பு நெருப்பைக் கொட்டிப் பேசிய பேச்சும், அவரது இட ஒதுக்கீடுபற்றிய பேச்சால், உச்சநீதி மன்றத்தின் கண்டனக் குரல் அதன்மீது ஒலித்ததும், இந்தத் தேர்தலில் காணப்பட்ட ஒரு விசித்திர அரசியல் அம்சம்!

‘பா.ஜ.க. இல்லாத தென்னாடு' என்று அரசியல் வரைபடத்தினை தென்னாட்டின் அறிவார்ந்த வாக் காளர்கள் வரைந்து காட்டி வருகின்றனர்!

எல்லாம் ‘ஒரே, ஒரே' என்றவர்களுக்குத் 

தக்கப் பாடம் - கருநாடகாவில்!

இது 2024 ஆம் ஆண்டிற்கு ஒரு முன்னோட்ட மேயாகும்!

2014 இல் பதவிக்கு வருமுன் கொடுத்த வாக்குறுதிகள் இன்னமும் செயல்படுத்தப்படாத நிலையில், பா.ஜ.க., ‘‘ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு'' என்று நமது நாட்டின் பன்முகத் தன்மையை மாற்றுவதற்கு- தென்னாடு ஒருமித்த தனது எதிர்ப்பை இத்தேர்தல்மூலம் நிரூபித்து வருகிறது! கருநாடகம் அதன் சமீபத்திய உதாரணமாகும்.

ஹிந்துத்துவாவை அரசியல் பரிசோதனைக் கூடமாக் கிப் பார்த்தார்கள்; ‘அனுமான் சாலி' பாடியும், ‘ஜெப பஜ்ரங் தள் பாலி' முழக்கம் எதுவும் எடுபடாது தென் னாட்டில் என்பதை   கருநாடக வாக்காளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

காங்கிரஸ் இளந்தலைவர் ராகுலும் - தமிழ்நாடு முதலமைச்சரும் தெரிவித்த சிறந்த கணிப்பும் - கருத்தும்!

காங்கிரசின் இளந்தலைவர் ராகுல் காந்தி அழகாகக் கூறியுள்ளார்.

‘‘மதத்தையும், ஜாதியையும் நம்பி வெறுப்புப் பிரச் சாரத்தை செய்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் கருநாடக மக்கள்'' என்பதை அழகாகக் கூறி, ‘‘வெறுப்புச் சந்தைகள் மூடப்பட்டுவிட்டன; அன்புக் கடைகள் திறக்கப்பட்டன'' என்றார். நமது ‘திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகாகச் சுருக்கென்று தைக்குமாறு, ‘‘திராவிட நிலப் பரப்பிலிருந்து பா.ஜ.க. முற் றிலும் அகற்றப்பட்டு  விட்டது'' என்று தெளிவாக்கியுள்ளனர்.

கருநாடக வாக்காளர்கள் அண்ணாமலைக்கு ‘‘அரோகரோ'' பாடி அனுப்பி விட்டனர்!

இந்தியாவின் இதர பகுதிகளும் கருநாடகத்தை முன்னோடியாகக் கொண்டு, ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமூகநீதி, மாநில உரிமைகளைக் காக்கும் வண்ணம், கருநாடகப் பாதையில் நடை போடுவது உறுதி!

கருநாடகத்தில் காங்கிரஸ் தலைவர்களின் ஒன்று பட்ட ஒற்றுமையும், உறுதிப்பாடும் இனியும் தொடர வேண்டும்.

மக்கள் தயாராகிவிட்டனர் - 

எதிர்க்கட்சிகளே ஒன்றிணைவீர்!

மக்கள் தயாராகிவிட்டனர்; எதிர்க்கட்சித் தலைவர் களே, உங்களது தன்முனைப்பைத் தள்ளி வைத்து, நாட்டைக் காக்க, பொது எதிரிகளை மட்டும் பார்த்து, அரசியல் வியூகம் அமைக்க ஒன்றுபட்டு உழையுங்கள், வெற்றி நிச்சயம்!

கருநாடக மக்கள் உங்களுக்கு அதைப் பாடமாக்கி தந்துள்ளார்கள், பயன் பெறுங்கள்!

224 இடங்களில் 136 இடங்கள் காங்கிரசுக்கு; ஆதரவு  -1 ஆக மொத்தம் 137 இடங்கள் தந்து நிலையான ஆட்சி அமைய  வாய்ப்பு ஏற்படுத்திய வாக்காளப் பெருமக் களுக்கு நன்றி தெரிவித்து, மதச்சார்பற்ற தலைவர்களுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


                                                                                                                              கி.வீரமணி

சென்னை                                                                                                            தலைவர்,

14.5.2023                                                                                            திராவிடர் கழகம்


No comments:

Post a Comment