திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு பெரு வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு பெரு வெற்றி!

தாம்பரத்தில் கடந்த 20.5.2023 அன்று  திராவிடர் தொழிலாளர் கழக நான்காவது மாநில மாநாடு மிகச்  சிறப்பாக நடைபெற்றது.  காலையில் நடைபெற்ற கருத்தரங்கமும் சரி, மாலையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாடும் சரி வெகு, எழுச்சியுடன் நடைபெற்றது. மாநிலம் எங்கிருந்தும் திராவிடர் கழகத் தொழிலாளர் அணியை சேர்ந்தவர்களும் கழகத் தோழர்களும் பெருமளவில் கூடியிருந்தனர். மாலை திறந்தவெளி மாநாட்டில் வெகு மக்கள் கூட்டம் அலைமோதியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அத்தனைத் தீர்மானங்களும் காலத்தின் தேவையை உணர்ந்து வடிக்கப்பட்டவை ஆகும். சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் முதலாளி, தொழிலாளி என்ற பேதம் ஒழிக்கப்பட்டாக வேண்டும்; முதலாளி பண முதலீடு செய்கின்றான் - தொழிலாளி தன் உழைப்பைத் தருகின்றான். பேதம் எங்கிருந்து வந்தது? ஆகவே முதலாளி - தொழிலாளி என்ற பேதம் நீங்கி பங்காளி என்ற நிலை உருவாக வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாருடைய தனித்தன்மையான கருத்தாகும்

இந்திய இந்து சமூக அமைப்பில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்ற பெயரால் பேதம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனர் அல்லாதார் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சூத்திரன் என்றால் தொழிலாளி என்று பொருள் என மனுதர்மம் கூறுகிறது. இதனை  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆதாரத்துடன் விளக்கிக் கூறினார். திராவிடர் கழகம் என்றாலே தொழிலாளர் கழகம் தான் என்றார் தந்தை பெரியார். "சூத்திரனை கூலி கொடுத்தோ கொடுக்காமலோ பிராமணர்கள் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனை பிரம்மா படைத்திருக்கிறார். சூத்திரன் மற்ற மூன்று வர்ணத்திற்கும் பொறாமை இன்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார்.  செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்" என்று மனுதர்மம் கூறுகிறது; கழகத்தை பொறுத்தவரையில் இந்த மனுதர்ம பார்ப்பனிய மேலாதிக்க சிந்தனையையும் செயல்பாட்டை யும் குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறது - வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் பிறப்பில் பேதம் பேசும் இந்த மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தையும் பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விடயத்தில் தந்தை பெரியார் கருத்தும் காரல் மார்க்ஸ் கருத்தும் ஒத்துப்போவதை கவனிக்க வேண்டும். இதோ மார்க்ஸ் கூறுகிறார் - மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 62 ஆவது ஸ்லோகம் கூறுகிறது. "பார்ப்பான் - பசு இவைகளை   பாதுகாக்கும் பொருட்டு கூலி பெறாமலேயே உயிரைத் தியாகம்  செய்வதே சூத்திரர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் மார்க்கம் ஆகும்." (ஆதாரம்: காரல் மார்க்ஸ் கேப்பிட்டல் வால்யூம் 11 பக்கம் 241) அதனால்தான் கம்யூனிஸ்டுகளின் கடமை பற்றி மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார். "கம்யூனிஸ்டாக இருப்பவன் மூடப் பழக்க வழக்கங்கள் மத நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் வளர்ச்சி அடையாத மக்கள் மனதில் அறிவுப்பூர்வமான வாதத்தை மத விடயங்களில் தூண்டி விஞ்ஞானப் பூர்வமாக விமர்சனம் செய்து மதத்தின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க பாடுபட வேண்டும்" என்று குறிப்பிடுகின்றார் மார்க்ஸ்.

 அதைத்தான் திராவிடர் கழகம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. திராவிடர் கழக மாநாடாக இருந்தாலும் சரி, திராவிடர் தொழிலாளர் கழக மாநாடாக இருந்தாலும் சரி அவற்றில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் மாநாடுகளில் பேசப்பட்ட கருத்துகள் தொழிலாளர் மத்தியிலே மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவுப் பூர்வமாக வாழ்வை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அரும்பாடுபட்டு உழைத்துப் போராட்டங்கள் நடத்தி ஊதியத்தை பெற்றுக் கொண்ட தொழிலாளி அந்தப் பணத்தைக் கொண்டு தன் குடும்பத்தையும், பிள்ளைகளின் படிப்பு வளர்ச்சியையும் மேலே உயர்த்த பயன்படுத்தாமல் - மத நம்பிக்கையாலும் பக்தி உணர்ச்சியாலும் பணத்தைப் பாழ்படுத்தும்  நிலையை - கண் எதிரில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்;  ஜாதிப் பிளவு காரணமாக தொழிலாளர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதிலும் பெரிய இடர்ப்பாடு இருக்கத்தானே செய்கிறது. அதனால்தான் திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்பை முன்னெடுத்துப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது 

தாம்பரம் திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான முற்போக்குச் சிந் தனைக்கான அரிய பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில ஒன்றிய அரசுகளுக்கும் அவசியமான வலியுறுத்தலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக சமூகநீதிப் பிரச்சினையில் ஒன்றிய பிஜேபி அரசு மேற்கொண்டு வரும் நட வடிக்கைகளும், சட்டங்களும் தொழிலாளர்களையும் அவர்களின்  குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் எந்த அளவுக்கு பாதிப்புக்கு ஆளாக்குகின்றன என்பதும் தீர்மானத்தில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. 

இந்த மாநாட்டை திராவிடர் தொழிலாளர் கழக பொறுப் பாளர்களும் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தோழர்களும் வெகு சிறப்பான வகையில் எல்லா வகையிலும் திட்டமிட்ட வகையில் நேர்த்தியாக நடத்தி முடித்திருக்கின்றனர். மக்களிடத்திலே நிதி வசூல் செய்து ஒன்றரை லட்சம் ரூபாயை மீதம் செய்து தலைமைக் கழகத்திடம் அதன் தலைவரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர் என்றால் தோழர்களின் அந்தப் பொறுப்புணவையும் செயல் பாட்டையும் எந்த அளவுக்கு பாராட்டினாலும் தகும். அரும்பாடு பட்டு ஆக்க ரீதியாக மாநாட்டை நடத்தி முடித்த தோழர்களை மாநாட்டு மேடை யிலேயே பயனாடை போர்த்தி பாராட்டி வாழ்த்தி மாநாட்டிற்கு தலைமை வகித்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததையும் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட வேண் டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி அடுத்து பார்ப்போம்.


No comments:

Post a Comment