பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை, மே 30 - பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பால் கொள்முதல் மற்றும் இடு பொருள் பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் பால்வளத்துறை அமைச் சர் மனோ தங்கராஜ் தலைமையில் நேற்று (29.5.2023) நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலும் செயற்கை முறை கருவூட்டல் வசதிகளை விரிவாக்கம் செய்தல். பால் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் வழங்கும் பாலுக்குரிய ஒப்புகைச் சீட்டு வழங்குதல். பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல். மாதிரி பசுந்தீவன பண்ணைகளை ஒவ்வொரு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களிலும் உருவாக்குதல்.

பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு தரமான கலப்பு தீவனம் வழங்குதல். களப்பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்குதல். அரசின் திட்டங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளுதல். பால் உப பொருட்கள், கால்நடை கலப்பு தீவனம், பால் பண்ணையில் ஆட்டோமேஷன் போன்ற பணிகளுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆய்வகங்கள் நிறுவ வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில், இயக்குநர் மற்றும் மேலாண்மை வினீத், மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் பால் கொள்முதல் மற்றும் இடுபொருள் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment