அ.இ.அ.தி.மு.க.வினர் பார்வைக்கும் - சிந்தனைக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

அ.இ.அ.தி.மு.க.வினர் பார்வைக்கும் - சிந்தனைக்கும்!

'திராவிடம்' என்பது காலாவதியானது என்று  - மாநில ஆட்சியின் செலவில் மாபெரும் பங்களாவில் குடியிருக்கும் - அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டிய - மாநில  அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டிய ஓர் அரசு அதிகாரி என்ற நிலையில் மட்டுமே உள்ள ஆளுநர் அவர்கள், அத்துமீறி அரசியல் பேசுவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியின் கொள்கைக்கு எதிராக நையாண்டி செய்வதும் சரியான கோமாளித்தனமே!

ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்தைத் தொடங்கி வைத்து, அரசு தயாரித்துக் கொடுக்கும் அறிக்கையை அப்படியே படித்துத் தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒருவர், அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பகுதியை நீக்கிப் படிப்பது அப்பட்டமான சட்டமீறல் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

நடப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி - இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

அந்தத் திராவிடத்தையே கொச்சைப்படுத்துவதும்  காலாவதி ஆனது என்று மனம் போன போக்கில் நாவைச் சுழற்றுவதும் நகைப்புக்குரியதே!

இந்த நிலை நீடிக்குமானால், தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்த ஆளுநரை மாற்றுங்கள் என்று தீர்மானம் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களே!

ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் ஆர்.என்.ரவி போன்றவர்களை ஆளுநராக நியமிக்கும் அத்துமீறிய போக்குத் தொடருமேயானால் - அறிஞர் அண்ணா சொன்ன "ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?" என்ற கேள்விக்கான விடையைத் தேடும் நிலைமை இந்திய அளவில் ஏற்படக் கூடும்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கவர்னர்கள் நியமனம் என்பது தேவைப்பட்டு இருக்கலாம்; இப்பொழுது நடப்பது அந்நிய வெள்ளைக்காரன் ஆட்சியல்ல; மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு ஆளப்படும் ஜனநாயக அம்சத்தை ஆணி வேராகக் கொண்டதாகும்.

இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அண்ணா பெயரையும் 'திராவிட' என்ற அடையாளத்தையும் கட்சியிலும், கொடியிலும்  பொறித்துக் கொண்டு இருக்கும் அ.இ.அ.தி.மு.க. - ஏதோ ஆளுநருக்கும், திமுகவுக்குமிடையே நடக்கும் போராட்டம் என்று எண்ணி, தமக்கு பகையான திமுகவுக்கு எதிராகத்தானே ஆளுநர் பேசுகிறார் என்ற அரசியல் எரிச்சலால் ஆளுநர் பக்கம் நின்று கொண்டு 'ஜே' போடுவது வெட்கக் கேடு அல்லவா?

ஜெயலலிதா அம்மையார் முதல் அமைச்சராக இருந்தபோது அப்பொழுது ஆளுநராக இருந்த திரு. சென்னா ரெட்டியின் வாகனத்தை திண்டிவனத்தில் அதிமுக தொண்டர்கள் வழி மறிக்கவில்லையா?

மாநில சுயாட்சிக்காக இராணுவத்தை சந்திப்பேன் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். என்பதாவது தெரியுமா இன்றைய அ.இ.அ.தி.மு.க. தளகர்த்தர்களுக்கு?

இது ஏதோ தி.மு.க. - ஆளுநர் பிரச்சினை என்று கருதினால் அதைவிட அறியாமை வேறு ஒன்றும் இருக்க முடியாது.

திராவிடம் காலாவதியாகிப் போனது என்று ஆளுநர் சொன்னால், அண்ணா பெயரையும், திராவிட அடையாளத்தையும் கட்சியில் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க. கனன்று எதிர்ப்புக் குரலை எழுப்ப வேண்டாமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் போது அப்போது இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியபோது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தானே இது நடக்கிறது என்று தி.மு.க. வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கவில்லை.

இது மாநில சுய உரிமைக்கு எதிரானது என்று முழக்கமிட்டு, கண்டன ஆர்ப்பாட்டங்களை தி.மு.க. நடத்தியதை அ.இ.அ.தி.மு.க. தளகர்த்தர்கள் எண்ணிப் பார்த்து, தி.மு.க.விடம் அ.இ.அ.தி.மு.க.வினர் பாடம் கற்றுக் கொள்ளட்டும்!

அதிமுகவின்  அடிப்படையைத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால், கட்சிக்குள் குரல் கொடுக்கட்டும்! இல்லையென்றால் அ.இ.அ.தி.மு.க. அடையாளமே இல்லாமல்  கரைந்து போய்விடும் - எச்சரிக்கை! 

No comments:

Post a Comment