கருநாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவு காங்கிரஸ் மாபெரும் வெற்றி பா.ஜ.க. படுதோல்வி தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

கருநாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவு காங்கிரஸ் மாபெரும் வெற்றி பா.ஜ.க. படுதோல்வி தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு

பெங்களூரு, மே 13 - கருநாடக மாநிலத்தில் சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த 10.5.2023 அன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று இன்று (13.5.2023) காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 1.40 மணி நிலவரப்படி காங்கிரசு கட்சி எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு மேலும் 126 இடங்களில் முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 64 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 22 இடங் களிலும், பிற 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே காங்கிரசு கட்சி முன்னணியில் இருந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்திப்பதால் கருநாடக பாஜக அலுவலகம் வெறிச்சோடி காணப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக அமைச்சர்களில் 8 பேர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். பெரும்பான்மைக்கு தேவையான இடங் களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.

பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரி தொகுதியில் பாஜக 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரபரத்ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார். சுரங்க அதிபர் ஜனார்த்தனரெட்டியின் மனைவி லாக்ஷ்மி அருணா 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

டில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்

கருநாடக தேர்தலில் காங்கிரஸ் முன் னிலை வகித்து வரும் நிலையில் டில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

கருநாடகத்தில் தனிப்பெரும் பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன் னிலை பெற்றுள்ளது. வெற்றி உறுதியாகும் நிலையில் இருப்பதை அடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. நாளை (14.5.2023) காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment