தெரிந்து கொள்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

தெரிந்து கொள்வீர்!

எம்.ஜி.ஆரும் - ஆர்.எஸ்.எசும்!

மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, தன்னைச் சந்திக்க வந்த தாணுலிங்க நாடார், ராமகோபாலன் போன்றோரிடம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் இந்துத்துவா இயக்கங்களின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் உதவியதாக, ஆர்எஸ்எஸ் இதழான ‘விஜயபாரத’த்தில் வெளியாகியிருந்தது.

ஆனால் மண்டைக்காடு கலவரம் தொடர்பாக அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்ன நிலைப் பாடு எடுத்திருந்தார் என்பதைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது குறித்துத் தம் அரசின் கருத்தைப் பதிவு செய்துள்ளார். காவல்துறை மான்யத் தின் மீதான விவாதத்துக்கு (29.3.1982) சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலளித்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனு மதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே -  அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற் கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை. மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்;அரசு அதற்குத் தயாராக இருக்கிறது."

அதன்பிறகு, டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் ஆர்.எஸ்.எஸ் அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் (17.2.1983) குறிப்பிடுகிறார்.

“கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப் படுமா?

பதில்: நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகை யில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட முயன்ற நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் “இந்து மஞ்ச்’’ என்ற பெயரில் 40, 50 வயதுக்காரர்கள் படித்தவர்கள், யோசித்துச் செயல்படும் தகுதி உள்ள வர்கள் என் முன்னால் நின்று கொண்டு தமிழ்நாட்டில் 15 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன் னார்கள்; என்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நான் உடனே பார்க்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக “ஒழிக’’ என்று சொன்னார்கள்.

அவர்கள் நடந்துகொண்ட முரட்டுத்தனமான செய்கையைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்றால், அது இந்த நாட்டுக்கும் தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராதது. நேரத்தையும் முன்னதாகக் குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் அவ்வாறு மட்டமாக நடந்து கொண்டார்கள். என்னைத் தடை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.

அது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானா லும் இப்படிப்பட்ட செயல் அதற்குப் பெருமை தரக்கூடியது அல்ல. இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்ததுபோல அனுபவம் இதுவரை நடந்ததில்லை.

இதுபோல மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கொடுத்தால் என்னாகும்? இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள். எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மீது  ஓரளவிற்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவ்வளவையும் அங்குத் தகர்த்து எறிந்து விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல. இங்கு இந்து முன்னணி, அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா? என்பதையும் உணர வேண்டும்.

இதுதான் அவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றால் அதுபற்றிக் கேள்வி கேட்க வேண்டியதே இல்லை. இப்படிப் பேசுவதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்யும் நோக்கம் வந்து விட்டதோ என்று கருதி முடிவு செய்ய வேண்டாம். எந்த மதம் ஆனாலும் தன் மதத்தைப் பரப்ப நாகரிகமான முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலும் பிறர் மனதை மாற்ற கருத்து விளக்கத்தின் மூலமாக அந்தப் பணிகளைச் செய்ய முழு உரிமையும் இந்த அரசு தரும், தந்து வந்தும் இருக்கிறது."

வரலாறு இப்படி இருக்க, ஆர்.எஸ்.எஸ். & பா.ஜ.க  ஏன் இப்போது எம்.ஜி.ஆரைக் கொண்டாடுகிறது? அது மட்டுமல்ல, மேனாள் முதலமைச்சர் பழனிசாமி அவர் களின் தலைமையிலான அ.தி.மு.க சிகப்பு கம்பளம் விரித்து கூட்டணியை பலப் படுத்துகிறது. ஒரு முறை ஜெயலலிதா அம்மையார் அவர்கள்  பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்ததை ,இது எனது அரசியலின் வரலாற்று பிழை எனக் கூறினார். ஆனால் அ.தி.மு.க தலைமை எம்.ஜி.ஆர் அவர்களையும் & ஜெயலலிதா வையும் உண்மையாக மதிக்கிறதா?

அன்புடன் 

பெரியார் அம்பேத்கர் கண்ணன்


No comments:

Post a Comment