ஆளும் அரசியல் ஆணவக்காரர்களுக்கு உரிய பாடத்தை மகளிர் புகட்டத் தவறக்கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

ஆளும் அரசியல் ஆணவக்காரர்களுக்கு உரிய பாடத்தை மகளிர் புகட்டத் தவறக்கூடாது!

 மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகள்:

பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி - உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது!

பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி - உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது! ஆளும் அரசியல் ஆணவக்காரர்களுக்கு  உரிய பாடத்தை மகளிர் புகட்டத் தவறக்கூடாது  என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தலைநகர் டில்லியில் பல வாரங்களாக இந்திய மல்யுத்த வீராங்கனைகளான பெண்கள், இரவு - பகல் பாராமல், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்!

அகில இந்திய மல்யுத்த சம்மேளன அமைப்பின் தலைவரான பிரிஜ்பூஷன் சரண்சிங் என்ற பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. அவர். அவர்மீது பல அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகள்படி, பாலியல் சீண்டல், பாலியல் கொடுமைகள் செய்தது குறித்து வழக்குப் பதிவு செய்த நிலையில், அவரைக் கைது செய்து தங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு டில்லி சட்டம் - ஒழுங்கை தம் அதிகார மாகக் கொண்டுள்ள பா.ஜ.க. ஒன்றிய அரசின் உள்துறை அதுபற்றி பாராமுகத்துடனும், கேளாக் காதுடனும் உள்ளது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும்!

வன்மையான கண்டனத்திற்குரியது!

உலகத்தில் நமது நாட்டின் பெருமையைப் பறை சாற்றிட மல்யுத்தப் போட்டிகளில் உலகப் பார்வையை ஈர்க்கும் தேசிய விளையாட்டு வீராங்கனைகளை அதுவும் தலைநகர் டில்லியில் - இப்படி வீதியில் அமர வைத்து - தங்களுக்குப் போதிய பாதுகாப்பும், நிகழ்ந்த பாலியல் கொடுமைகளுக்கும் நீதி வேண்டும் என்று பல நாள் இரவு - பகல் பாராமல் டில்லி ஜந்தர்மந்தர் தெருவில் நடுத் தெருவில் வீராங்கனைகள் நடத்திவரும் போராட் டம் தொடர்வதைக் கண்டுகொள்ளாமல், குற்றவாளி களைப்பற்றிக் கவலைப்படாமல், இப்படி ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்வது, பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி - உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரிய தாகும்.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றம் சுமத்தப்பட்டோரைக் கைது செய்து காராக் கிரகத்தில் அடைப்பதுதானே சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் சரியான நீதியாகும்?

‘‘உலகப் புகழ் பெறுகிறோம்'' என்ற புகழ் மயக்கத்தில் உள்ள ஓர் ஆட்சியின் தலைநகர் புதுடில்லியில், இப்படி ஒரு மல்யுத்த மகளிரின் அறவழி, அமைதி வழி அறப்போராட்டம் தொடர்வதன் அவசியம் என்ன?

ஒன்றிய அரசு இதில் பா.ஜ.க. எம்.பி.யை காப்பாற்ற முனைவது (அவர் ‘‘மேல்ஜாதி தகுதி''யும் படைத்தவர் போலும்!)  ஏன்?'' ஆட்சிக்கு வருமுன் கொடுத்த வாக் குறுதிகள்படி எதனையும் வெளிப்படைத்தன்மை யோடும், நம்பகத்தன்மையோடும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடக்கும்'' என்று கூறியபடி நடந்து வருகிறார்களா?

இதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி!

தனது குற்றமற்ற தன்மையை நீதிமன்றங்களில் நிரூபித்து வெளியே வரவேண்டிய மல்யுத்த வீரர்களின் சங்கத் தலைவர் பா.ஜ.க. எம்.பி., என்ன விளக்கம் சொல்லுகிறார் தெரியுமா?

இது காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலாம்!

‘ஜமுக்காளத்தில் 

வடிகட்டிய பொய்!'

அரசியல் சார்பு, சாயம் இல்லாத மகளிர் உரிமைக் காக்கும் போராட்டத்தினை திசை திருப்பி, இதனை ஏதோ காங்கிரஸ்தான் தூண்டிவிட்டு நடத்துகிறது என்ற ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைக்' கூறி ராஜநடை டில்லியில் போடுகிறார்!

மல்யுத்த வீரர்களின் இந்த நியாயமான அறப்போரை காங்கிரஸ் மட்டுமா ஆதரிக்கிறது? ஏன், ஆம் ஆத்மி முதலமைச்சர் ஆதரிக்கவில்லையா? தி.மு.க. தலைவர் சார்பில் தோழர் அப்துல்லா எம்.பி., சென்று போராட்டக் காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா? நியாய உணர்வுள்ள பலரும் மன வலி அடையவில்லையா?

இதற்கு ஏன் தேவையற்ற அரசியல் சாயம்?

ஆளுங்கட்சியான பி.ஜே.பி., ஆர்.எஸ்.எசு.,க்கு மகளிரின் வாக்குகள் தேவை. ஆனால், பாலியல் கொடுமைக்கு ஆளான அவர்கள் அளிக்கும் புகாரை ஏற்று குறைந்தபட்ச சட்ட நடவடிக்கையான கைதுகூட செய்யாமல், குற்றப் புகாருக்கு ஆளானவர்கள் ‘இதோ பதேசம்' செய்து, அம்மகளிரைப் புண்படுத்தி - போராட் டத்தில் தவிர்க்க இயலாமல் ஈடுபட்டுள்ள வீராங்கனை களைச் சந்தித்து ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லக் கூட ஆளும் பா.ஜ.க.வினர் தயாராக இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

பாடம் புகட்டத் தவறமாட்டார்கள் மகளிர்!

அடுத்த பொதுத் தேர்தல் 2024 இல் வந்தாலும் அல்லது அதற்கு  6 மாதம் முன்கூட்டியே வந்தாலும்கூட உரிய பாடத்தை ஆளும் அரசியல் ஆணவக்காரர்களுக் குப் புகட்ட தவறமாட்டார்கள் - பாடம் கற்பிப்பார்கள் மகளிர் என்பது உறுதி!

குற்றவாளிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது, மறக்காது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

2.5.2023

No comments:

Post a Comment