மாநகராட்சி பள்ளிகளில் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

மாநகராட்சி பள்ளிகளில் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு!


சென்னை,மே 27-
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில், 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பள்ளிகளின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியில், தற்போது புதிதாக இணைக்கப்பட்ட, 139 பள்ளிகள் உட்பட, 420 பள்ளிகள் செயல்படு கின்றன. இந்த பள்ளிகளில், 1.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தற்போது, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், 1.70 லட்சம் மாணவர் களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, மாநகராட்சி பணி யாற்றி வருகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில், இரண்டு லட்சம் மாணவர்களுக்கு மேல் படிக்கும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான அனைத்து வசதிகளும் உள்ளன.

மேலும், 'சிட்டிஸ் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சிங்கார சென்னை 2.0' திட்டங்கள் வாயிலாகவும், பல்வேறு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிவாரியாகவும், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வில், 85 சதவீதத் துக்கு மேல், மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

இதற்காக, ஆங்கில மொழிக் கல்வி மற்றும் இதர பாடத் திட்டத்திற்கும், சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்த வசதிகளை பொதுமக்களுக்கு தெரி யப்படுத்தும் வகையில், பள்ளி நுழைவு வாயில்களில் விளம்பரப் பலகை வைக்க அறிவுறுத்தி உள்ளோம்.

பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டங்கள், மேனாள் மாணவர்கள் வாயிலாகவும், மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 1.70 லட்சம் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

-இவ்வாறு அவர்கள் கூறினர்.

 பள்ளிப் பாடப் புத்தக்கத்தில் கலைஞர் குறித்த பாடம் வரும் கல்வியாண்டு முதல் அமல்

சென்னை,மே27- ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேனாள் முதலமைச்சர் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த பாடம் இந்த ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெறும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

 அதன்படி பள்ளிக் கல்விபாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பு புத்தகத்தின் 7-ஆவது பக்கத்தில், "செம்மொழி யான தமிழ்மொழியாம்' என்ற தலைப்பில் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு: கலைஞர் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள். இயல் எழுதி, இசை எழுதி,நாடகம் எழுதி முத்தமிழுக்கும் தம் பங்கை முழுமையாக அளித்தவர் கலைஞர். முத்தாரம், முரசொலி, வெள்ளி வீதிபோன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்.

2010-ஆம் ஆண்டு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி இமயக் கொடுமுடிமுதல் குமரித் தாய்மடி வரை ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என உரக்க ஒலிக்கச் செய்தவர் எனப் பல்வேறு விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அண்ணாவுக்கு கவிதை: மேலும், மேனாள் முதல மைச்சர் அண்ணா மறைந்தபோது கலைஞர் எழுதிய ‘உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே' எனத் தொடங்கும் கவிதையும் அந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: 

ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 27 தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் 29, அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 9, அரசு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 43 இயங்கி வருகின்றன.

 2023-2024ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க இருக்கிறது. மேற்கண்ட ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் ஜூன் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய இயலாதோர் தங்கள் பகுதியின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். 

இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் scert.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment