நிட்டி ஆயோக் கூட்டத்தின் பரிதாபம் 11 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை பிரதமர் மோடி அதிர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

நிட்டி ஆயோக் கூட்டத்தின் பரிதாபம் 11 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை பிரதமர் மோடி அதிர்ச்சி

புதுடில்லி, மே 28 ஒன்றிய திட்டக்குழுவுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சரும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் இடம் பெற்றுள்ளனர். இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று (28.5.2023) டில்லியில் நடைபெறுகிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தில், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தி யாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகா தாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.  இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் அமைச்சர்கள் அல்லது ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர் பதவியில் உள்ள உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். 

இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட 11 மாநில முதல் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு, கேரளா, டில்லி, பஞ்சாப், கரநாடகா, பீகார், ராஜஸ்தான் மற்றும் மே.வங்க முதல் அமைச்சர் இந்த நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கலந்து கொள்ளாததற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எந்த குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை. ஒன்றிய அரசின் சமீபத்திய அவசரச் சட்டம் காரணமாக கூட்டத்தை புறக்கணிப்பதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல, பஞ்சாபின் நலன்களில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி கூட்டத்தை புறக்கணிப்பதாக அம்மாநில முதல் ஒன்றிய பகவந்த் மான் தெரிவித்துள்ளார். வெளிநாடு பயணம் காரணமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment