தத்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

தத்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லையா?

வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. மராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நீதிமன்றத்தில் ஆசிரியரான ஷப்னம்ஜகான் அன்சாரி (வயது47) என்ற பெண் தனது தங்கையின் 4 வயது மகளை தத்தெடுக்க உரிமை கேட்டு விண்ணப் பித்து இருந்தார். இவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷப்னம் ஜகான் அன்சாரி விவாகரத்து பெற்றவர் மட்டுமின்றி அவர் பணி செய்து வருகிறார். எனவே அவரால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தது. மேலும் குழந்தை தனது பெற்றோரு டனேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஷப்னம் ஜகான் அன்சாரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், "கீழமை நீதிமன்றம் பிறப்பித் துள்ள இது போன்ற உத்தரவு விபரீதமானது மற்றும் நியாயமற்றது" என்று தனது மனுவில் கூறி இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவுரி தலைமையிலான அமர்வு, ஷப்னம் ஜகான் அன்சாரி 4 வயது சிறுமியை தத்தெடுக்க அனுமதி அளித்தது. 

மேலும் அந்த தீர்ப்பில் கூறியதாவது:- 

"குழந்தையின் உயிரியல் தாய் ஒரு இல்லத்தரசி மற்றும் வருங்கால வளர்ப்புத் தாய் ஆனவர். ஒற்றைப் பெற்றோர் மட்டுமின்றி பணிபுரிந்து வருகிறார் என்ற கீழமை நீதிமன்றத்தின் ஒப்பீடு பழைமைவாத கருத்துகளின் மனநிலையை பிரதிபலிக்கிறது. ஒற்றைப் பெற்றோர் தத்தெ டுக்கும் பெற்றோராக இருக்க, சட்டம் அங்கீ கரிக்கும்போது, கீழமைநீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை சட்டத்தின் நோக்கத்தை பொய்யாக்குகிறது. பொதுவாக ஒற்றைப் பெற்றோர் உழைக்கும் நபராக இருக்க வேண்டும். சில அரிதான விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் வேலை செய்யும் நபர் என்ற ஒரே காரணத்திற்காக வளர்ப்புப் பெற்றோராக இருக்கத் தகுதியற்றவராக கருத முடியாது. எனவே அந்தப் பெண் தகுதியற்றவர் என்பதற்கு கீழமை நீதிமன்றம் கூறிய காரணம் ஆதாரமற்றது, சட்ட விரோத மானது, விபரீதமானது, நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. 

உலகம் விரிந்து கொண்டு போகிறது. விஞ்ஞான வளர்ச்சி விண்ணைத் தொடுகிறது. "மாற்றம் என்பது தான் மாறாதது" என்பது பகுத்தறிவு நிலை. ஆண் - பெண் சமத்துவம் என்பது மதங்களைக் கடந்து வீறு கொண்டு எழுகிறது.

ஆணுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத் துரிமை என்று சட்டங்கள் வந்து விட்டன.

பெண்கள் - ஆணின் சொத்து என்பதெல்லாம் பழைய மனுதர்மவாதம். இந்த நிலையில் ஒரு பெண் ஒரு குழந்தையைத் தத்து எடுக்க முடியாது என்று சொல்லுவது எல்லாம் பச்சையான பத்தாம் பசலித்தனம்.

விஞ்ஞான மனப்பான்மை நீதிபதிகளுக்கே தேவை என்று கூற வேண்டிய பரிதாப நிலையை என்னவென்று சொல்லுவது!


No comments:

Post a Comment