ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

* மழைக்கால நிவாரணத் தொகையை உயர்த்திடுக!   

* கச்சத்தீவை மீட்டுத் தருக!

*இலங்கைக் கடற்படையின் அத்துமீறலை எதிர்த்து பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திடுக!

மீனவர்கள் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திடுக!

தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா இரா.இராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் (ஜெகதாப்பட்டினம், 14.4.2023).

தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த தமிழ்நாடு அரசின் மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் நாகை என்.கவுதமன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி,  மணல்மேடு ஒன்றிய பெருந்தலைவர் பரணிகார்த்திகேயன் (தி.மு.க.), மனிதநேய மக்கள் கட்சியின்  மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் (ஜெகதாப்பட்டினம், 14.4.2023).

தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு உழைத்த தோழர்கள் - தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர் (ஜெகதாப்பட்டினம், 14.4.2023) 

ஜெகதாப்பட்டினம், ஏப்.15 மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, கச்சத்தீவை மீண்டும் மீட்பது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

2023 ஏப்ரல் 14 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1

தமிழ்நாட்டு மீனவ மக்களைப் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வேண்டும்!

சமூகத்திலும், கல்வியிலும் பின் தங்கிய நிலையில் இருக்கும் தமிழ்நாட்டு மீனவ மக்களைப் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்பது நெடுங்காலக் கோரிக்கையாகும். பல்வேறு கட்சிகளும் இக்கோரிக் கைக்கு ஆதரவை அளித்துள்ள நிலையில், அதனை விரைந்து முன்னெடுத்துச் செயல்படுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும், இந்திய அரசையும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் எண்: 2

மழைக்கால நிவாரணத் தொகையை 

உயர்த்தி வழங்குக!

மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.6000ஆகவும், தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8000 ஆகவும் உயர்த்தி வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் எண்: 3

கச்சத்தீவை மீட்டிடுக!

இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பாக் நீரிணைப்புப் பகுதியைப் பொதுக்கடலாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இருநாட்டு பாரம் பரிய மீனவர்களும் மீன் பிடிக்க உரிமை வழங்கப்பட வேண்டும். எத்தனை பேருக்கு உரிமை வழங்குவது, என்னென்ன மீன்பிடி முறைகள், மீன்பிடிக் கலங்களை அனுமதிப்பது, எத்தனை நாள்கள் மீன்பிடிப்பது என்பனவற்றையெல்லாம் இருநாட்டு மீனவர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்யலாம். ஒப்பந்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும், பன்னாட்டு விதிகளையும் மீறிச் செயல்படும் இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவை மீட்டால் மட்டுமே இத்தகைய சாதகமான சூழலை இருநாட்டு மீனவர்களுக்கும் உருவாக்கித் தர முடியும் என்று இம்மாநாடு கருதுகிறது.

தீர்மானம் எண்: 4

பன்னாட்டு நீதிமன்றத்தில் 

வழக்குகளைத் தொடுக்க வேண்டும்

பன்னாட்டுக் கடல் சட்டங்களின்படி பாரம்பரிய மீனவர்கள் ஒரு நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி, இன்னொரு நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்தால், அது சிவில் குற்றமாகவே கருதப்படும். அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குத்தான் அனுமதி உண்டு. ஆனால், இலங்கைக் கடற்படை அத்துமீறி தாக்குதல்களையும், துப்பாக்கிச் சூட்டையும் நடத்துகிறது. படகுகளையும், வலைகளையும் சேதப்படுத் துதல் போன்ற அட்டூழியங்களிலும் ஈடுபடுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கான வாய்ப்பை அய்க்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு கடல் சட்டங்கள் வழங்குகின்றன. ஆனால், இவற்றை ஒரு போதும் இந்திய அரசு பயன்படுத்துவதில்லை. இலங்கை அரசின் கொடுஞ்செயல்களைத் தடுக்கும் விதமாக, இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக இந்திய அரசு பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுக்க வேண்டும்.

தீர்மானம் எண்: 5

இலங்கை அரசிடமிருந்து படகுகளை 

மீட்டுத் தரவேண்டும்

மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போதும், சுடப்பட்டு இறக்கும் போதும் தமிழ்நாடு அரசு இழப்பீடு தருகிறது. ஆனால் இந்திய அரசு தருவதில்லை. இந்தியாவின் மீனவர்கள், இன்னொரு நாட்டின் தாக்குதலால் உயி ரிழக்கும்போது, அதற்குப் பொறுப்பேற்கும் வகையில் ஒன்றிய அரசு இழப்பீடு வழங்குவது தார்மீகக் கடமை யாகும்.  

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு படகுகள் சேதம் அடைந்து அய்ந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டால், விசைப் படகு களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இன்றைய சூழ லில் அதனை உயர்த்தித் தரவேண்டுமென மீனவர்கள் சார்பாக இம்மாநாடு கோருகிறது.

மேலும், முன்பு படகைப் பறித்துக் கொண்டால் அவற்றை இலங்கைக் கடற்படையினர் திருப்பிக் கொடுப்பதுண்டு. ஆனால் அண்மைக்காலத்தில் பிடி படும் படகுகளை ஏலத்தில் விற்றுவிடுகிறது இலங்கை அரசு. இந்திய அரசு இது குறித்து கவனத்தில் கொண்டு, படகுகளை மீட்டுத் தரவேண்டும்.

தீர்மானம் எண்: 6

உற்பத்தி விலையில் 

டீசல் தருக!

அனுமதி பெற்ற அயல்நாட்டு மீன் பிடிக் கப்பல் களுக்கு உற்பத்தி விலையில் டீசலைத் தருகிறது இந்திய அரசு. அத்தகைய வாய்ப்பை இந்நாட்டு மீனவர்களுக்கும் தர வேண்டும். அது பாரம்பரிய மீனவர்களுக்குப் பேரு தவியாக அமையும். உற்பத்தி விலையில் டீசல் தருவதால், இன்னும் கூடுதல் பொருளாதாரப் பலன்களையும், உற்பத்தியையும் இந்தியாவால் எட்ட முடியும். எனவே, இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7

டீசல் மீது விதிக்கப்படும் வரிகளில், 

சாலை வரியை நீக்குக!

தற்போது மீனவர்களுக்கு மானிய விலையில் தமிழ்நாடு அரசு வழங்கும் டீசலை விட இரு மடங்கு டீசல் ஒவ்வோராண்டும் தேவைப்படுகிறது. மானிய விலை டீசலுக்கான வரம்பை 1800 லிட்டரிலிருந்து 2500 லிட்டராக அதிகப்படுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பொதுவாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளில், வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்துவதற்கான சாலை வரியும் ஒன்றாகும்.  இந்தச் சாலைகளைப் பயன்படுத்தாத மீன்பிடிப் படகுகளுக்கும் அதே சாலை வரியைப் போடுவது அறமற்றது. இந்தச் சாலை வரியை  இந்திய அரசு நீக்கினால், லிட்டருக்கு ரூ.8 என்ற அளவில் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment